ரமழான் காலத்து பயான்களும், சில குறிப்புகளும்...!
அதேபோல் பயான்கள் செய்ய ரமழானில் சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளன. தறாவீஹுக்கு பிறகு, இப்தார் வேளைகள், ளுஹருக்குப் பிறகு என்று இவற்றைப் பட்டியல்படுத்தலாம்.
வழக்கமாக ரமழான் கால ஜும்ஆப் பிரசங்கங்களும் இதில் சேர்க்கப்படலாம். இருப்பினும் ரமழானில் மக்களுக்கு தேவையான அடிப்படையான அம்சங்களை போதிப்பதில் திட்டமிட்ட வழிமுறைகள் எதுவும் வழக்கமாக பின்பற்றப்படாமல் பயான்கள் செய்யப்படுவது கவலைக்குரியதாகும்.
பல இடங்களில் குர்ஆன் மத்ரஸாக்களில் போதிக்கப்பட வேண்டிய சாதாரண பிக்ஹ் அம்சங்கள் கூட திரும்பத் திரும்ப மீட்டப்படுவதையும் இன்னும் பல பள்ளிவாயல்களில் பயான்கள் பண்ணப்படாமலேயே சந்தர்ப்பங்கள் நழுவ விடப்படுவதையும் பார்க்க முடிகிறது. சில போது ஒரு சில விடயங்கள் மாத்திரம் திரும்பத் திரும்ப மீட்டப்படுகின்றன.
நம்நாட்டிலும் ரமழான் காலம் வந்துவிடும் போது ரமழானின் முதலாவது பிறையையும், ஷவ்வாலின் முதலாம் பிறையையும் தீர்மானிப்பதில் எமக்கு மத்தியில் சர்ச்சை தோன்றும். சர்வதேச பிறைதான் சரியென சிலரும் தேசியப் பிறையின் படியே நோன்பு பிடிப்பதும் பெருநாள் கொண்டாடுவதும் அமைய வேண்டுமென்று வேறு சிலரும் காரசாரமாக விவாதிப்பர். வேறு சிலர் நாம் 'நுஜூமீக்கள்' என்றுகூறி மூன்றாவது நிலைப்பாட்டையெடுப்பர். இவர்கள் இவ்வாறு வாதித்துக் கொண்டிருக்கையில் சமூகத்தில் உள்ள 90% ஆன பொதுமக்கள் மிகுந்த குழப்பத்தில் மூழ்கி விடுவர்.
ரமழானின் வருகையை ஆவலாக எதிர்பார்த்து அமல் செய்ய காத்திருக்கும் அவர்கள் இந்த சர்ச்சைகளின் முன் திக்குப்பிரமையுடன் நிற்பார்கள். எனவே ரமழானின் வருகை எமது சமூகத்துக்கு மத்தியில் சச்சரவுகளை வரவழைப்பதாயின் இதனைப் பற்றி நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.
முதலாவது பிறையை தீர்மானிப்பது சம்பந்தமாக வரலாறு நெடுகிலும் கருத்து வேறுபாடு இருந்து வந்திருப்பதிலிருந்து எவரும் எவர் மீதும் தனது கருத்தை திணிக்க முடியாது என்பதைக் காட்டுகிறது. ஆனால் அகில இலங்கை ஜம்இத்துல் உலமா கூறுவது போல் நடந்து கொள்வது தற்போதைய சூழலின் எல்லா வகையிலும் பாதுகாப்பானதாகும்.
கருத்து வேறுபாடுகளுக்கு உட்படும் அம்சங்களை பொதுமக்களது சபைகளிலும் குத்பாக்களிலும் பயான்களிலும் பேசுவது எவ்வகையிலும் பொருத்தமானதல்ல. அவை பற்றி நல்ல அறிவுத்தெளிவுள்ள துறை சார்ந்தவர்கள் மட்டும் ஓர் இடத்தில் ஒன்றுகூடி ஆதாரங்களுடனும் நிதானமாகவும் பரஸ்பர அன்புடனும் அல்லாஹ்வுக்கு பதில்கூற வேண்டுமே என்ற பயத்துடனும் யாருடைய வாயிலிருந்தேனும் உண்மை வெளிவந்தால் போதுமென்ற உணர்வுடனும் இதில் ஈடுபடும் போது மட்டுமே சுமுகமான முடிவுகளைப் பெற முடியும்.
முதலாவது பிறையைத் தீர்மானிப்பது, தராவீஹின் ரக் ஆத்துகளது எண்ணிக்கை, நோன்பின் நிய்யத்து போன்ற விடயங்களை நாம் நோன்பு காலத்தில் விவாதிப்பதையும் பயான்களது பேசுபொருளாகக் கொள்வதையும் முற்றுமுழுதாகத் தவிர்க்க வேண்டும். இவற்றை சிலர் விவாதித்துக் கொண்டிருக்கையில் பல இலட்சம் மக்கள் நோன்பின் கடமையை உணராமல் நோன்பு பிடிக்க வசதியிருந்தும் நோன்பு பிடிக்காதிருக்கின்றார்கள்.
வேறு சிலர் நோன்பு நோற்பதற்கான வசதிவாய்ப்புக்கள் இல்லாமல் வறுமையின் கொடூரத்தில் சிக்கியிருக்கிறார்கள். இவர்களைப் பற்றி கவலைப்படுவதற்கும் கரிசனை எடுப்பதற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படல் வேண்டும்.
அதிக கவனயீர்ப்பிக்கு உள்ளாக வேண்டியது சிறிய விடயமா? பெரிய விடயமா? என நாம் சிந்திக்கலாம். தராவீஹின் ரக் ஆத்துக்கள் பற்றி சர்ச்சைப்படும் போது பல இலட்சம் பேர் ஐவேளை தொழுகையின்றி வாழ்கின்றார்கள்.
'அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ்' எனப்படும் வாசகத்தை வாழ்கையில் ஒரு தடவையேனும் உச்சரிக்காமல் காபிர்களாக வாழ்ந்து வரும் கோடிக்கணக்கானோர் பற்றி அத்தஹியாத்தில் விரல் அசைப்பதுபற்றி வாதிப்பவர்கள் சிந்திக்கலாம்.
எமது கால நேரங்களை இரண்டாம்பட்ச அம்சங்களில் செலவிட்டு ரமழானின் பிரதான இலக்குகளை மக்கள் தவறவிடுவதற்கு காரண கர்த்தாக்களாக அமைந்து விடலாகாது.
அதேபோல் சில தலைப்புக்களில் நாம் பேசும் போது அதனுள் அடங்கும் விடயங்கள் ஏற்படுத்தும் சாதகமான விளைவுகளையும் பாதகமான விளைவுகளையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். பாதகங்கள் அதிகம் விளையுமாயின் அத்தகைய தலைப்புக்களை தவிர்ப்பதே சாலச் சிறந்ததாகும். அலி (ரலி) அவர்கள் 'மக்களோடு அவர்களது அறிவுத் தரங்களுக்கேற்ப பேசுங்கள் அல்லாஹ்வும் அவனது தூதரும் பொய்ப்பிக்கப்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா?' என்றார்கள்.
இமாம் புஹாரி (ரஹ் ) அவர்கள் 'நாம் தெரிவு செய்துள்ள சில தலைப்புக்கள் மக்களால் கிரகிக்க முடியாத அம்சங்களை கொண்டிருக்குமாயின் அவற்றை நாம் பேசுபொருளாகக் கொண்டால், அவர்கள் இருக்கும் நிலையை விட மோசமான ஓர் நிலைக்கு போய்விடுவார்கள் எனக் கருதினால் அப்பகுதிகளைத் தவிர்ப்பது' என்று ஓர் தலைப்பை இட்டு சில ஹதீஸ்களை அதன் கீழ் போட்டிருக்கிறார்கள்.
இதற்கு விளக்கம் கூறும் இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி 'ஒரு தீமையை தடுக்கப் போய் அதனைவிட மோசமான ஒரு தீங்கிற்குள் மக்கள் வீழ்ந்து விடுவார்களோ எனப் பயந்தால் அதனை தடுக்காது விடலாம் என்பதற்கு இதனை ஆதரமாகக் கொள்ளலாம்' என எழுதுகிறார்கள்.
மேலும் இமாம் புஹாரி அவர்கள் 'சிலர் சில விடயங்களை புரியமாட்டார்களாயின் அவர்களைத் தவிர்த்து அவற்றை புரிய முடியுமானவர்களுக்கு மட்டும் அதனைப் போதிப்பது' என்று வேறு ஓர் தலைப்பை தனது ஸஹீஹுல் புகாரியில் இட்டு அதன் கீழ் சில ஹதீஸ்களை இட்டிருக்கிறார்கள்.
எனவே மக்களது அறிவுத்தரம், வயது, பால் வித்தியாசம், பிரதேச வேறுபாடுகள், அவ்வப் பிரதேச தேவைகள், கொள்கைப் பின்னணிகள், உடனடித் தேவைகள் போன்றவற்றை கவனத்தில் எடுத்து உபன்னியாசங்கள் அமைக்கப்பட வேண்டும். இருக்கும் பிரச்சினைகளது வீரியத்தை மேலும் அதிகரிக்காமலும் சிந்தனைச் சிக்கலையும் மார்க்கத்தில் அவநம்பிக்கையும் தோற்றுவிக்காமலும் இருக்க வேண்டும்.
தற்கால சூழலில் இளைஞர் சமுதாயம் கல்வியிலும் ஒழுக்கத்திலும் வீழ்ச்சியிலிருக்கிறது. குடும்ப உறவுகள் சீர்குலைந்திருக்கின்றன. அல்லாஹ், மறுமை, குர்ஆன், ஸுன்னா மீதான விசுவாசம் தளர்வடைந்துள்ளது. இதற்கெல்லாம் தொலைத் தொடர்பு சாதனங்கள் பெரிதும் பங்களித்துள்ளன.
மக்கள் நாஸ்திகம், சுயநலம், அற்ப இன்பங்கள் என்பவற்றில் மூழ்கித் திளைக்கிறார்கள். அறிஞர்களுக்கும் அறிவுக்கும் சமூக சேவகர்களுக்குமுள்ள முக்கியத்துவம் குறைந்து, நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், பணம்படைத்தவர்கள் தான் 'ரோல் மொடல்களாக' ஆக்கப்பட்டு விட்டார்கள். இபாதத்களில் ஈடுபடுவோரது தொகை ஓரளவு அதிகரித்திருந்தாலும் அவற்றை அறிவுத் தெளிவோடும் பயபக்தியோடும் அவை தரப்பட்ட நோக்கத்தை புரிந்த நிலையிலும் மேற்கொள்வோரது தொகை குறைவாகும். நோன்பு, தொழுகை, ஹஜ், உம்ரா என்பன வெறும் சடங்குகளாகத் தான் நிறைவேற்றப்படுவதாகத் தெரிகிறது.
எனவே குத்பாக்கள், பயான்களது தலைப்புக்களை தெரிவு செய்யும் போது அடிப்படையான தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி ஈமான், இபாதத்கள், அஹ்லாக்குகள், அறிவுஞானம், குடும்ப உறவுகள் போன்ற அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிப்போமாக!
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல் (நளீமி)
சிரேஷ்ட விரிவுரையாளர், ஜாமியா நளீமிய்யா
Post a Comment