அரசாங்கத்தின் சதி முறியடிப்பு, ரணிலின் கருத்து பொய்யென நிரூபிப்பு, சஜித் எடுத்துரைப்பு
தேர்தலில் முறைகேடு செய்யும் அரசின் முயற்சியை முறியடிக்கும் வகையில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதோடு, உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு பணம் விடுவிக்கப்படாமல் இருக்க அரசாங்கம் மேற்கொண்ட சதி இதன் மூலம் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அக்மீமன பிரதேசத்தில் நேற்று (03) பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முடக்குவதை தவிர்க்குமாறு நிதி அமைச்சின் செயலாளர், நிதி அமைச்சர், சட்டமா அதிபர் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரச அச்சகருக்கு நிதி விடுவிக்காதிருப்பதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையையும் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாகவும், மக்களின் இறையாண்மை மற்றும் ஜனநாயகத்திற்காக வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு இதுவாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியை அணுகி தேர்தலை நடத்த வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கெஞ்சுவதாக கூறிய ஜனாதிபதியின் அபத்தமான கருத்துக்கள் இதன் மூலம் பொய்யானவை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இன்று வழங்கிய தீர்ப்பின் மூலம், நாட்டு மக்களின் வாக்குரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்த ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்த முற்போக்கு முன்னெடுப்பாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
Post a Comment