தடுத்துவைக்கும் முயற்சி படுதோல்வி, இன்றுதான் ஹாதியா விடுதலையானார்,
- BY: M.F.M.Fazeer -
கல்முனை மேல் நீதிமன்றின் பிணை உத்தரவின் பின்னரும், பாத்திமா ஹாதியா, தொடர்ந்தும் விளக்கமறியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு தலைமை வகித்ததாக கூறப்படும் பிரதான தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹஷீமின் மனைவியான பாத்திமா ஹாதியாவை பிணையில் விடுவித்து நேற்று முன் தினம் (15) கல்முனை மேல் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், 48 மணி நேரம் கடந்த நிலையில் சற்று முன்னர் அவர் சிறையில் இருந்து செல்ல அனுமதிக்கப்பட்டார்.
கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொஸ்கியின் பிணை உத்தரவின் பின்னரும், பாத்திமா ஹாதியா, தொடர்ந்தும் சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பில் விளக்கமறியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததை சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலைகள் ஆணையாளர் ( நிர்வாகம்) சந்தன ஏக்கநாயக்க ஒருவன் செய்திச் சேவையிடம் உறுதிப்படுத்தியிருந்தார்.
கோட்டை நீதிமன்றில் உள்ள வழக்கில் அவரை ஆஜர் செய்ய வேண்டும் என்பதால் இவ்வாறு தடுத்து வைத்துள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் 'ஒருவன்' செய்திச் சேவையிடம் குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும், ஹாதியாவுக்கு வேறு வழக்குகள் எதுவும் இல்லை எனவும், கோட்டை நீதிமன்றில் இருக்கும் பி அறிக்கை பிரகாரம் தொடுக்கப்பட்ட வழக்கே கல்முனை மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டதாகவும் ஹாதியாவின் சட்டத்தரணிகள் ஒருவன் செய்திச் சேவையிடம் தெரிவித்தனர்.
தடுத்து வைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் :
எவ்வாறாயினும் பாத்திமா ஹாதியா, சிறைச் சாலை பேச்சாளர் கூறியதைப் போல இன்று கோட்டை நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவில்லை. மாற்றமாக அவரை L95839/21 எனும் வழக்கு கோவையின் கீழ் நீர் கொழும்பு நீதிமன்றில் சிறைச்சாலை அதிகாரிகள் ஆஜர் செய்தனர்.
ஒருவன் முன்னெடுத்த தேடலில், அந்த வழக்கிலக்கம், கட்டுவாபிட்டிய தேவாலயம் மீதான குண்டுத் தாக்குதல் குறித்த வழக்கிலக்கம் என்பதும், அவ்வழக்கு நீதிவான் நீதிமன்றில் நிறைவு செய்யப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்ற சிறப்பு டரயல் அட்பார் அமர்வு முன்னிலையில் 24 பேருக்கு எதிராக வழக்கு விசாரணையின் கீழ் இருப்பதும் தெரியவந்தது.
அந்த கோவையில் பாத்திமா ஹாதியா சந்தேக நபராகவோ பிரதிவாதியாகவோ பெயரிடப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் இன்று -17- பாத்திமா ஹாதியா நீர் கொழும்பு நீதிவானின் உத்தியோகபூர்வ அறையில் ஆஜர் செய்யப்பட்டார். இதன்போது சி.ஐ.டி. அதிகாரி ஒருவரும் முன்னிலையாகியுள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த வழக்கில் ஹாதியாவை சந்தேக நபராக பெயரிடவும், அவருக்கு விளக்கமறியல் உத்தரவை பிறப்பிக்கவும் நீதிவான் மறுத்துள்ளார். இதனால் சி.ஐ.டி.யின் முயற்சி தோல்வியடைந்துள்ளது.
மனித உரிமைகள் ஆணைக் குழுவும் களத்தில் :
இந்நிலையில் ஹாதியா, எந்த சட்ட ரீதியிலான உத்தரவுகளும் இன்றி தடுத்து வைத்திருப்பது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவும் அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் எழுத்து மூலம் விளக்கம் கோரியுள்ளது.
இந்நிலையில் ஹாதியாவின் சட்டத்தரணிகளான ருஷ்தி ஹபீப் மற்றும் ரிஸ்வான் உவைஸ் ஆகியோர் இன்று நீர் கொழும்பு நீதிமன்றிலும் ஆஜராகி, ஹாதியாவின் நலன் தொடர்பில் விடயங்களை முன் வைத்துள்ளனர்.
பின்னர் அவர்கள் சிறைச்சாலை திணைக்களத்துடனும் நிலைமையின் பாரதூரம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
முயற்சிகள் தோல்வியடைந்ததால் விடுவிக்க இணக்கம் :
இந்நிலையில், ஹாதியாவை தொடர்ச்சியாக தடுத்து வைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்ததால், நிலைமை மோசமடைவதை உணர்ந்த சிறைச்சாலைகள் திணைக்களம் சற்று முன்னர் அவரை விடுவிக்க நடவடிக்கை எடுத்தது.
முன்னதாக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதிக்கும் ஏப்ரல் 26 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சாரா ஜஸ்மின் என்றழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன் என்பவர் வெடிபொருட்களை தயாரித்தமை மற்றும் அவற்றை சேகரித்து வைத்திருந்தமை தொடர்பில் நிந்தவூரில் வைத்து அறிந்திருந்தும் (சாரா ஜெஸ்மின் தெரிவித்தன் ஊடாக ), அந்த தகவலை பொலிஸாருக்கு அறிவிக்காமை குறித்து பாத்திமா ஹாதியாவுக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் 5ம் அத்தியாயத்தின் அ, ஆ பிரிவுகளின் கீழ் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எச்.சி. 653/ 21 எனும் குறித்த குற்றப் பகிர்வுப் பத்திரம் கடந்த 2021 நவம்பர் 12 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த குற்றப் பகிர்வுப் பத்திரத்தில், கோட்டை முன்னாள் நீதிவான் ரங்க திஸாநாயக்க, சி.ஐ.டி. அதிகாரிகள், ஒரு இராணுவ வீரர் உள்ளடங்களாக 30 சாட்சியாளர்கள் பட்டியலிடப்பட்டுள்ளதுடன், சான்றாவணமாக ஒரே ஒரு ஒப்புதல் வாக்கு மூலம் மட்டும் நிரலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment