மக்களுக்கு கடல் மணலை, விற்பனை செய்ய திட்டம்
இவ்வருடம் இரண்டு மில்லியன் கனமீற்றர் கடல் மணலை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைவாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
கழுவி தேவையான தரத்தில் தயாரிக்கப்பட்ட கடல் மணலின் கனசதுரத்தை பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்யுமாறு இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
முத்துராஜவெல கடற்கரையிலிருந்து நீர்கொழும்பு வரை 10-15 கிலோமீற்றர் தூரத்தில் கடலில் இருந்து நிலத்திற்கு கடல் மணல் அள்ளப்படும்.
இந்த கடல் மணல் அகழ்வுத் திட்டத்தினால் கொழும்பிலிருந்து நீர்கொழும்பு வரையான கடற்பரப்பில் வாழும் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மீனவ சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அந்த மீனவ பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்யுமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
அதற்கு முன்னதாக, இது தொடர்பில் அரசியல் அதிகாரிகள், பிரதேசத்தின் மதத் தலைவர்கள் மற்றும் மீனவ சங்கங்களுக்கும் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மீனவ சமூகத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 200 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்தப் பணத்தை அத்தியாவசியத் தேவையுடைய மக்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் அமைச்சர் கடுமையாக வலியுறுத்தினார்.
கடலில் இருந்து குழாய்கள் மூலம் ஏற்றப்படும் மணலை சம்பந்தப்பட்ட இடத்துக்கு கொண்டு வந்து, திறந்த வெளியில் மணல் திட்டுகளாக சேமித்து, மணலை இயந்திரத்தில் செலுத்தி, கழுவி, சுத்தம் செய்து, தேர்வு செய்து உலர்த்துதல் ஆகிய பிரிவுகளாக நடைபெறும்.
கழுவி சுத்தம் செய்து உலர்த்தப்படும் உப்பு இல்லாத கடல் மணலை பொறியாளர்களின் மேற்பார்வையில் தேவையான தரத்தில் தயாரிக்கின்றனர். அதன் பின்னர் கெரவலப்பிட்டிய – முத்துராஜவெல மணல் விற்பனை நிலையத்தில் கடல் மணல் விற்பனை செய்யப்படும்.
கடல் மணலைப் பெறுவதற்கு முன்னர் கரையோரப் பாதுகாப்பு அதிகாரசபை, நாரா நிறுவனம் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை போன்ற நிறுவனங்களிடமிருந்து சுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார்.
Post a Comment