Header Ads



இது பாரதூரமான குற்றமாகும்



உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை தடுத்து நிறுத்தி ஜனாதிபதித் தேர்தலுக்கு  செல்வதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இலக்காகும். அவர் அதற்காகவே தயாராகிக் கொண்டிருக்கின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.


எனினும், அரசியலமைப்பு ரீதியில் அவ்வாறு அவரால் தேர்தலை நடத்த முடியுமா என்பது பிரச்சினைக்குரிய விடயமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  


கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,


340 உள்ளூராட்சி சபைகளையும் நிர்வகிக்கும் அதிகாரம் ஆணையாளர்கள் வசமாகவுள்ளது. அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.


உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதில் காணப்படும் ஒரேயொரு தடை ஜனாதிபதியும் அவர் தலைமையிலான அரசாங்கமுமாகும். இதை தவிர தேர்தலுக்கு வேறு எந்த தடையும் இல்லை.


உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாது பிரதேச சபைகளின் தலைவர்களிடம் முழு அதிகாரத்தையும் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.


தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் முழுக் கடன் தொகையும் கிடைக்கப்பெற்றுள்ளதைப் போன்று கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இதன்போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் உள்ளடக்கங்கள் எவையும் இதுவரையில் வெளிப்படுத்தப்படவில்லை. சர்வதேசத்துடனான எந்தவொரு இணக்கப்பாடும் இறுதியாக்கப்படும் முன்னர் அது தொடர்பில் நாட்டுக்கு அறிவிக்கப்பட வேண்டும். ஆனால் அரசாங்கம் அவ்வாறு எதனையும் செய்யவில்லை. எனவே இது பாரதூரமான குற்றமாகும்.


தற்போது நாட்டுக்கு டொலர் கிடைக்கப் பெறுகின்றமையால் ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. எனினும், எமக்கு கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்ட பின்னர் இறக்குமதி தடைகள் முற்றாக நீக்கப்படவுள்ளன.


அவ்வாறு இறக்குமதி தடைகள் நீக்கப்பட்டால் ரூபாவின் பெறுமதி பாரியளவில் சரிவடையும்.  எனவே டொலர் வருவாயினால் எவ்வித பயனையும் பெற முடியாத நிலைமையே ஏற்படும்.


தேர்தலைக் காலம் தாழ்த்துமாறு நாம் எந்தவாரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்திடமோ ஜனாதிபதியிடமோ கேட்கவில்லை. எனினும் தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு அதுவாக காணப்படுகின்றது. அவர்களுக்கு அரசாங்கத்துடன் இரகசிய கூட்டணி இருக்கலாம். ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியிடம் அவ்வாறு எந்தவொரு இரகசிய திட்டமும் இல்லை.


எவ்வாறிருப்பினும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை தடுத்து நிறுத்தி ஜனாதிபதித் தேர்தல்களை தடுத்து நிறுத்தி ஜனாதிபதித் தேர்தலுக்கு செல்வதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இலக்காகும்.


அவர் அதற்காகவே தயாராகிக் கொண்டிருக்கின்றார். அரசியலமைப்பு ரீதியாக அவரால் இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்க முடியுமா என்பதை நீதிமன்றத்தின் ஊடாகவே அறிய முடியும் என குறிப்பிட்டார். tw

No comments

Powered by Blogger.