Header Ads



புனித றமழானை, எப்படி வரவேற்பது...?



- Ash-Sheikh Agar Muhammed -


நாமெல்லாம் மலர இருக்கும் அருள்மிகு றமழானை வரவேற்க காத்திருக்கின்ற இந்த வேளையில் சில முக்கியமான விஷயங்களை உங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.


றமழான் என்பது மறுமை வியாபாரிகளின் பருவ காலம் (Season). பருவ காலத்தில் உலக வியாபாரிகள் எப்படி, எவ்வாறு மும்முரமாக, முழு மூச்சாக வியாபாரத்தில் ஈடுபடுவார்கள் என்பதை நாம் நன்கு அறிவோம். அதே போன்றுதான் முஃமீன்கள் றமழான் காலத்தில் மறுமை வியாபாரத்தில் முனைப்புடன் ஈடுபட வேண்டும்.


ஆரம்பமாக றமழானுக்கு தயாராகும் வகையில் அவசர அவசரமாக மனிதர்களுடனான உறவுகளை சீர்செய்து கொள்ள வேண்டும்.


யாருடனும் எவருடனும் பகைமை இருக்கும் நிலையில், சண்டை, சச்சரவுகள் நிலவும் நிலையில், வீணான முரண்பாடுகளும் மோதல்களும் காணப்படும் நிலையில் இந்த றமழானை நாம் சந்திக்கலாகாது.


வெறுப்பு, கோபம், அதிருப்தி, பகைமை, பொறாமை, தப்பெண்ணம் முதலான அசுத்தங்களைக் களைந்து சுத்தமான உள்ளத்தோடு றமழானை சந்திக்க வகைசெய்வோம்.


அடுத்து, வெறும் வாயும் வயிறும் நோன்பு நோற்கும் றமழானாக மட்டுமன்றி நாவு, கண்கள், காதுகள் உட்பட எல்லா உறுப்புகளும் நோன்பு நோற்கின்ற றமழானாக இந்த றமழான் அமைய வேண்டும் என்பதை உத்தரவாதப்படுத்துவோம்.


இந்த வகையில் பொய், புறம் பேசுவதில்லை; கோள் சொல்லுவதில்லை; தர்க்க, குதர்க்கங்களில் ஈடுபடுவதில்லை; சண்டை, சச்சரவுகளில் ஈடுபடுவதில்லை; யாருடைய உள்ளத்தையும் நோவிப்பதில்லை; புண்படுத்துவதில்லை; வீண் பேச்சுக்கள் பேசுவதில்லை; வீணாண காரியங்களில் பங்கேற்பதில்லை; அரட்டை அடிப்பதில்லை; வீணாக இரவில் விழித்திருப்பதில்லை; பகலில் அதிகம் தூங்குவதில்லை. மொத்தத்தில் நோன்பின் பயனைக் கெடுக்கும் எந்தவொரு செயலிலும் ஈடுபடுவதில்லை என்று உறுதி பூணுவோம்.


குறிப்பாக றமழான் படைப்புகளுடனான உறவைக் குறைத்து படைப்பாளனுடனான உறவை கூட்டிக்கொள்ள வேண்டிய ஒரு காலம் என்ற வகையில் தொலைக்காட்சி, வானொலி, தொலைபேசி, சமூக வலைத்தளங்கள் முதலானவற்றுடனான தொடர்பை அறுத்துக் கொள்வோம்; குறைந்தபட்சம் குறைத்துக் கொள்வோம். தவிர்க்க முடியாத நிலையில் அத்தியவசிய தேவைகளுக்காகவும் ஆன்மிகத் தேவைகளுக்காகவும் மாத்திரம் மிகக் கவனமாக இவற்றை பயன்படுத்துவோம்.


மேலும்  நல்லோர் வழிநின்ற நமது முன்னோர்கள் றமழான் வந்து விட்டால் தமது முழு கவனத்தையும் அல்குர்ஆனில் குவிப்பார்கள். உஸ்மான் (றழி) றமழானில் தினமும் ஒரு முறை அல்குர்ஆனை ஓதி முடிப்பார்கள். றமழானில் இமாம் ஷாபிஈ, இமாம் அபூ ஹனிபா ஆகியோர் அறுபது தடவைகளும், கதாதா (றஹி) பத்து தடவைகளும் அல்குர்ஆனை ஓதி முடிப்பார்கள். 


இமாம்களான ஸுஹ்ரி,ஸுப்யானுஸ் ஸௌரி போன்ற ஹதீஸ் துறை அறிஞர்கள் றமழான் வந்து விட்டால் அவர்களது ஹதீஸ் வகுப்புகளை இடைநிறுத்தி விட்டு முழுமையாக குர்ஆனின் பக்கம் திரும்பி விடுவார்கள். நாமும் இந்த றமழானில் அல்குர்ஆன் திலாவத்தை நமது முதல் தர அமலாக அமைத்துக் கொள்வோம். பல முறை அல்குர்ஆனை ஓதிமுடிக்க முயற்சி செய்வோம். குறைந்த பட்சம் ஒவ்வொரு நாளும் ஓரிரு ஜுஸ்உகளையாவது ஓதுவோம். ஒவ்வொரு நாளும் அதன் சில வசனங்களையாவது கற்க முயல்வோம்.


அல்குர்ஆனை திருத்தமாக ஓத கற்றுக் கொள்ள றமழான் காலம் மிகவும் பொருத்தமானது. அவ்வாறே அல்குர்ஆனின் சில ஸூறாக்களையாவது இந்த றமழானில் மனனமிட உறுதிகொள்வோம்.


"யார் றமழானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகின்றாரோ அவர் முன்செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்" என்ற நபி வாக்கை மனதிற் கொண்டு,


ஐங்காலத் தொழுகைகளை ஜமாஅத்தோடு தொழுவதோடு முன், பின் ஸுன்னத்தான தொழுகைகளையும் நிறைவேற்றுவோம். 


ழுஹா, தறாவீஹ், கியாமுல் லைல், வித்ர் முதலான தொழுகைகளையும் தவறாது தொழுது வருவோம்.


அவ்வாறே காலை, மாலை திக்ருகளை ஓதுவதோடு துஆ, தௌபா, இஸ்திஃபார் முதலானவற்றில் அதிகம் ஈடுபடுவோம்.


நபி (ஸல்) அவர்கள் றமழானில் வேகமாக வீசும் காற்றை விட அதிகமாக அள்ளி, அள்ளி கொடுப்பார்கள்; தர்மம் செய்வார்கள். எனவே நாமும் ஸகாத், ஸதகா, ஹதிய்யா என்று எல்லா வழிகளிலும் வகைகளிலும் தர்மம் செய்வோம்; உற்றார், உறவினர்கள், அண்டை, அயலவர்கள், ஏழை, எளியவர்கள் என எல்லோருக்கும் உதவுவோம். ஸதகா செய்யாத நிலையில் இந்த றமழானில் ஒரு நாள் கூட கழியாமல் இருக்கட்டும்.


இறுதியாக ஒரு வழிகாட்டல்:


எதிர்வரும் றமழானை வினைத்திறனும் விளைத்திறனும் கொண்ட, எல்லா வகையிலும் பயன்மிக்க றமழானாக அமைத்துக் கொள்ள நமது நாளாந்த செயற்பாடுகளுக்கான ஒரு time table ஐ-நேரசூசியை- தயார் செய்து கொள்வோம்.


அன்பானவர்களே,


றமழானை அடைந்தும் அதில் பாவமன்னிப்பைப் பெறத்தவறிய துர்ப்பாக்கியவான்களாக நானோ நீங்களோ ஆகிவிடக் விடக்கூடாது.


 ஒரு புதிய மனிதனாக மாற, ஒரு புதிய பாதையில், ஒரு புதிய பயணத்தைத் தொடர இந்த றமழான் நம் ஒவ்வொருவருக்கும்  துணை நிற்க வேண்டும் என்று துஆ செய்து விடை பெறுகின்றேன்.

No comments

Powered by Blogger.