Header Ads



சமரசத்திற்கு முயற்சிக்கும் திலினி பிரியமாலி


காசோலை மோசடி குறித்து திலினி பிரியமாலிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சிய விசாரணைக்கான தினமாக எதிர்வரும் ஜூன் மாதம் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெடிகே, செவ்வாய்க்கிழமை (28) நிர்ணயித்தார்.


2013ஆம் ஆண்டு தங்காலை பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான காரை கொள்வனவு செய்ததற்காக   மூடப்பட்ட கணக்கிலிருந்து 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலையை வழங்கி மோசடி செய்தார் என்று திலினிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.


கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பிரதிவாதி சமரசமாகச் செல்வதற்கு தயாராக இருப்பதாக அவருடைய சட்டத்தரணி தெரிவித்தார்.


எனினும், சமரச தீர்வு தொடர்பில் இதுவரை இணக்கப்பாடு எட்டப்படவில்லை என்று முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றுக்கு அறிவித்ததை அடுத்தே விசாரணைக்கு திகதி நிர்ணயிக்கப்பட்டது.


இதேவேளை, நிதி மோசடி குற்றச்சாட்டு குறித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திகோ நிறுவனத்தின் தலைவர் திலினி பிரியமாலி தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.