ஓய்வு பெற்றார் யூனூஸ் கே. றஹ்மான்
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கிலுள்ள தோப்பூர் கிராமத்தில் ஓய்வு பெற்ற கிராமத்தலைவர் யூனூஸ்லெப்பை, நாச்சியாப்பிள்ளை தம்பதிகளின் 12 ஆவது மகனாக 1962ம் ஆண்டு நவம்பர் மாதம் முதாலாம் திகதி பிறந்து தன்னுடைய ஆரம்பக் கல்வியை தான் பிறந்த தோப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள அல்- ஹம்றா மஹா வித்தியாலயத்திலும், உயர்தர கல்வியை மூதூர் மத்திய மஹா வித்தியாலயத்திலும் கற்றார். அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்தில் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட தையல் பயிற்சி போதனாசிரியை றசீனா கே. றகுமான் என்பவரை திருமணம் செய்து அஷ்பாக் அஹமட் எனும் ஆண் மகனுடன் வாழ்ந்து வருகிறார்.
பாடசாலை காலத்தில் தீ, தென்றல், வாடா மலர், சுரபி போன்ற கையெழுத்துப் பத்திரிகைகளின் ஆசிரியராகவும், ஆசிரியர் குழு உறுப்பினராகவும் கடமையாற்றியதோடு பல பேச்சு போட்டிகளில் மாவட்ட மட்டத்தில் பரிசு பெற்ற இவர், மூதூர் பிரதேசத்தின் சிறந்த மேடை அறிவிப்பாளராகவும் திகழ்ந்தார். அத்தோடு பத்திரிகைகளுக்கும், வானொலிக்கும் கவிதைகளையும், சிறுகதைகளையும் எழுதி வந்துள்ளார். 1992ம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபன யாழ்பிராந்திய தமிழ் ஒலிபரப்பின் மூலம் பயிற்சி அறிவிப்பாளராக தனது ஊடக பயணத்தை ஆரம்பித்த இவர், 1994ம் ஆண்டு தொடக்கம் 1998ம் ஆண்டு வரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன கண்டி மலையக வானொலி சேவையில் பகுதி நேர அறிவிப்பாளராக கடமையாற்றினார்.
இக்காலப்பகுதியில் இவரால் தயாரித்து ஒலிபரப்பப்பட்ட மலை முற்றத்தில், மலையக சிறுகதைகள் ஆகிய நிகழ்ச்சிகளை கேட்டு அதன் தரத்தினை உணர்ந்த இந்திய கல்கண்டு, குமுத சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் திரு.லேணா தமிழ் வாணண் இவருக்கு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என மலையக அமைப்புக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது சிபாரிசின்பேரில் மலையக கலை கலாசார பேரவை 1998ம் ஆண்டு ரத்ன தீபம் விருது வழங்கி கௌரவித்தது. அதனைத் தொடர்ந்து 1998ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் தேசிய சேவையின் பகுதி நேர அறிவிப்பாளராக கடமையாற்றினார். 2000ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பவளவிழாவில் சிறந்த சேவையாளருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 2004ம் ஆண்டு ஊடகத்துறை அமைச்சு வழங்கிய புலமைப்பரிசு பெற்று சவுதி அரேபியா இமாம் முஹம்மத் பின் சுஹூத் பல்கலைக்கழகத்தில் புதிய ஊடக தொடர்பாடல் பயிற்சி நெறியை பூர்த்தி செய்தார்.
2009ம் ஆண்டு தொடக்கம் 2013ம் ஆண்டு வரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பகுதிநேர அறிவிப்பாளராகவும், உதவித் தயாரிப்பாளராகவும் கடமையாற்றிவந்தார். 2015ஆம் ஆண்டு முதல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தபான பிராந்திய சேவையான அக்கரைப்பற்றில் இயங்கிவரும் பிறை எப்.எம் வானொலியில் முழு நேர அறிவிப்பாளராக தனது பணியை தொடங்கினார்.
யூனூஸ் கே. றகுமான் 30வருட ஒலிபரப்புத் துறையில் நேயர்களின் விருப்பத்திற்குரிய ஒலிபரப்பாளனாய் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
எம்.எல்.சரிப்டீன்
Post a Comment