ஒரே கவலையாக உள்ளது, தவறுகளை சரி செய்ய முயற்சிக்கிறோம்
பரபரப்பாக நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி கடைசி வரை வெற்றி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டபோதும் போட்டியின் கடைசி பந்தில் தோல்வியை சந்தித்தது. இதனால் இந்த டெஸ்ட் தொடரில் தோல்வியை தவிர்ப்பதற்கு கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையிலேயே இலங்கை அணி இன்று களமிறங்கவுள்ளது.
இந்தத் தோல்வியின் காரணமாக இலங்கை அணியால் உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு பறிபோனது.
“துரதிஷ்டவசமாக எம்மால் (இறுதிப் போட்டிக்கு) முன்னேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. என்றாலும் இது இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் என்பதோடு நாம் எமது கெளரவத்திற்காக ஆடுகிறோம்” என்று நேற்று (16) நடந்த செய்தியாளர் மாநாட்டில் இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்தார்.
“போட்டியை வென்று தொடரை சமன் செய்யும் ஆர்வத்தோடு வீரர்கள் உள்ளனர்” என்றும் கருணாரத்ன கூறினார்.
கிறைஸ்சேர்ச்சில் நடந்த முதல் டெஸ்ட்டில் இலங்கை அணி களத்தடுப்பில் செய்த தவறுகள் பெரும் தாக்கத்தை செலுத்தியது. குறிப்பாக சதம் பெற்று நியூசிலாந்து அணியை வெற்றி வரை அழத்துச் சென்ற கேன் வில்லியம்சன் 33 ஓட்டங்களை பெற்றிருந்தபோது இலங்கை விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்ல அவரது பிடியெடுப்பு ஒன்றை தவறிவிட்டிருந்தார்.
“எம்மால் நன்றாக செயற்பட முடியாத சிறு விடயங்கள் இருந்தன, அது தான் ஒரே கவலையாக உள்ளது. ஆனால் நாங்கள் தவறுகளை சரி செய்ய முயற்சிக்கிறோம்” என்றார் கருணாரத்ன.
குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களால் வில்லியம்சன் மற்றும் நியூசிலாந்து ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களுக்கு சவால் விடுக்க முடியும் என்று கருணாரத்ன நம்பிக்கை தெரிவித்தார்.
முதல் டெஸ்ட் போட்டியில் அசித்த பெர்னாண்டோ மொத்தம் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார். “எம்மால் எந்த நேரத்திலும் நியூசிலாந்து ஆரம்ப வரிசைக்கு சவால் விடுக்க முடியும். அவர்களின் சில வீரர்கள் கூட இலங்கையர்களிடம் இருந்து இப்படியான பந்துவீச்சு நெருக்கடியை எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்கள்” என்றும் கருணாரத்ன கூறினார். “இது ஒரு சாதக நிலை” என்றார் அவர்.
இன்றைய போட்டி நடைபெறும் வெளிங்கடனின் பேசின் ரிவர்ஸ் மைதானத்திலேயே கடந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து அணி ஒரு ஓட்டத்தால் வெற்றியீட்டி இருந்தது.
“கடந்த முறை இந்த மைதானத்திற்கு அதிக ரசிகர்கள் திரண்டார்கள். அவர் டெஸ்ட் கிரிக்கெட் பற்றி பேசினார்கள்” என்று நியூசிலாந்து அணித் தலைவர் டிம் செளதி நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
வெளிங்டனில் இன்று மழைவீழ்ச்சி மற்றும் கடும் காற்று பற்றி எதிர்வுகூறப்பட்டிருக்கும் நிலையில் நாணய சுழற்சி தீர்க்கமானதாக அமையும்.
இன்றைய போட்டியில் இலங்கை அணியில் ஒரு மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளது. விக்கெட் காப்பாளர் திமுத் கருணாரத்னவுக்கு பதில் நிஷான் மதுஷ்க அழைக்கப்படலாம்.
அதேபோன்று தனஞ்சய டி சில்வாவை சுழற்பந்து வீச்சுக்கு பயன்படுத்தி நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை இன்றைய போட்டிக்கு களமிறக்குவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றபோதும் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அவ்வாறு நிகழும்பட்சத்தில் விஷ்வ பெர்னாண்டோ இன்றைய போட்டியில் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இது தொடர்பில் ஆடுகளத்தை அவதானித்த பின் அணித் தலைவர், பயிற்சியாளர் மற்றும் தேர்வுக் குழு பிரதிநிதிகள் இணைந்து முடிவொன்றை எடுப்பார்கள்.
மறுபுறம் நியூசிலாந்து அணி பல ஆண்டுகளின் பின்னர் இன்றைய போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் டப் பிரேஸ்வெல்லை களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உபாதை காரணமாக வேகப்பந்து வீச்சாளர் நீல் வக்னர் விலகிய நிலையில் அவருக்கு பதிலாகவே பிரேஸ்வெல் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளாார்.
இலங்கை அணி நியூசிலாந்து மண்ணில் அரிதான டெஸ்ட் தொடர் வெற்றி ஒன்றை பறிகொடுத்திருக்கும் நிலையில் கடைசி போட்டியில் வென்றால் அங்கு 2006 ஆம் ஆண்டு தொடக்கம் நீடிக்கும் தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment