Header Ads



"மதத்தின் அடிப்படையில் விமர்சிப்பது மிகவும் பரிதாபமானது, அவர்கள் முதுகெலும்பில்லாதவர்கள்"


 "ஒருவர் சார்ந்த மதத்தின் அடிப்படையில் அவரை விமர்சிப்பது ஒரு மனிதன் செய்யக் கூடிய மிகவும் பரிதாபமான செயல். அவர்கள் முதுகெலும்பில்லாதவர்கள். அவர்கள் மீது கவனம் செலுத்தி வாழ்க்கையில் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்க விரும்பவில்லை"


- இவை 2021-ம் ஆண்டு இருபது ஓவர் உலகக்கோப்பைப் போட்டி ஒன்றில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியுற்ற போது, அணியில் இடம் பெற்றிருந்த முகமது ஷமியை சமூக ஊடகங்களில் ரசிகர்கள் விமர்சித்த போது அப்போதைய கேப்டன் விராட் கோலி உதிர்த்த வார்த்தைகள்.


இந்த பின்னணியில்தான் சமீபத்தில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டில் முகமது ஷமியைக் குறிவைத்து 'ஜெய் ஸ்ரீராம்' என்று சில ரசிகர்கள் முழக்கமிட்டது தொடர்பான இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மாவின் எதிர்வினை உற்று நோக்கப்படுகிறது.


குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற அந்த டெஸ்டின் முதல் நாளில் எல்லைக்கோடு அருகே நின்றிருந்த முகமது ஷமியை நோக்கி சில ரசிகர்கள் அவ்வாறு முழக்கமிட்டார்கள்.


அடுத்து வந்த இரு நாட்களில் சமூக ஊடகங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதுவே பேசுபடுபொருளாக மாறிப் போனது. அந்த காட்சி அடங்கிய வீடியோவை பலரும் பகிர்ந்ததால் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் அது வைரலாகிப் போனது.


நான்காவது டெஸ்டின் இறுதியில், அதாவது ஐந்தாவது நாள் ஆட்டநேரம் முடிந்த பிறகான பரிசளிப்பு விழாவின் போது இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா, இதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்தார்.


"ஷமியை நோக்கி ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடப்பட்டது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இப்போதுதான் முதன் முறையாக கேள்விப்படுகிறேன். அங்கே என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது" என்று அவர் பதில் தந்தார்.


இதன் தொடர்ச்சியாகவே, முகமது ஷமிக்கு இதற்கு முன்பு நிகழ்ந்த இதேபோன்றதொரு நிகழ்வை ரசிகர்கள் பலரும் நினைவுகூர்ந்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


அது 2021-ம் ஆண்டு இருபது ஓவர் உலகக்கோப்பை தருணம்...


அது வரையிலும் உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை என்ற வரலாற்றை தன் வசம் வைத்திருந்த இந்திய அணி முதன் முறையாக அந்த அணியிடம் தோற்றுப் போனது. அதுவும் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியாக அது அமைந்தது.


கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணியின் வேகப்பந்து வீச்சில் முதுகெலும்பாக திகழ்ந்து வரும் முகமது ஷமிக்கு அன்றைய தினம் மோசமானதாக அமைந்துவிட்டது. 3.5 ஓவர்கள் பந்து வீசிய அவர் 43 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை. அந்தப் போட்டியில் இந்தியா சார்பில் அவரே அதிக ரன்களை விட்டுக் கொடுத்த பவுலராக இருந்தார்.


உலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானிடம் முதன் முறையாக இந்திய அணி தோல்வியுற்றதை ஜீரணித்துக் கொள்ள முடியாத ரசிகர்களின் அதிருப்தி முகமது ஷமி மீது திரும்பியது. பாகிஸ்தானுடனான தோல்விக்கு முகமது ஷமியையும், அவர் சார்ந்த மதத்தையும் தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் பலதரப்பட்ட விமர்சனங்களை ரசிகர்கள் முன்வைத்தனர்.


ரசிகர்களிடம் இருந்து சற்றும் எதிர்பாராத வகையில் வந்த எதிர்வினையை, அடுத்து வந்த செய்தியாளர் சந்திப்பில் அப்போதைய கேப்டன் விராட் கோலி துணிச்சலாக எதிர்கொண்டார்.


"ஒருவர் மீது அவர் சார்ந்த மதத்தின் அடிப்படையில் தாக்குதல் நடத்துவது ஒரு மனிதன் செய்யக்கூடிய மிக மோசமான செயல். களத்தில் வெற்றிக்காக நாங்கள் எவ்வளவு தூரம் கடுமையாக முயன்றோம் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. கடந்த சில ஆண்டுகளில் ஷமி போன்ற ஒருவர் இந்தியாவுக்கு எத்தனை போட்டிகளில் வெற்றி தேடித் தந்துள்ளார் என்பது அவர்களுக்குப் புரியவில்லை.


"உண்மையில், அந்த நபர்கள் மீது கவனம் செலுத்தி என் வாழ்க்கையில் ஒரு நிமிடத்தை கூட வீணாக்க நான் மட்டுமல்ல, ஷமியோ அல்லது அணியில் உள்ள வேறு யாருமோ விரும்பவில்லை" என்று விராட் கோலி கடுமையாக எதிர்வினையாற்றினார்.


விராட் கோலி மட்டுமின்றி, இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் பலரும் முகமது ஷமிக்கு பக்கபலமாக குரல் கொடுத்தனர். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், முன்னாள் அதிரடி வீரர் சேவாக் உள்பட பலரும் முகமது ஷமியை ஆதரித்தும், விளையாட்டின் இயல்பு குறித்தும் தங்களது கருத்துகளை சமூக ஊடகங்களில் உடனடியாக பதிவு செய்தனர்.


இந்த வேளையில், 2021-ம் ஆண்டில் இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இனவெறி தாக்குதலை எதிர்கொண்ட போது அப்போதைய பொறுப்பு கேப்டன் ரஹானே தனக்கு உறுதுணையாக இருந்தது பற்றி வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் மனம் திறந்துள்ளார்.


தனியார் சேனலுக்கு நேர்காணல் அளித்துள்ள முகமது சிராஜ், ""அந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் என்னை நோக்கி கருப்புக் குரங்கு என்று ரசிகர்கள் சிலர் குறிப்பிட்டதை நான் பொருட்படுத்தவில்லை. ஆனால், அடுத்த நாளும் அது தொடர்ந்த போது எதிர்த்து நிற்க முடிவு செய்தேன்." என்றார்.


"இனவெறி தாக்குதல் குறித்து நடுவரிடம் முறையிட தீர்மானித்த நான் அதுகுறித்து கேப்டன் ரஹானேவிடம் தெரிவித்தேன். இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வரை நீங்கள் வேண்டுமானால் களத்தில் இருந்து வெளியே இருக்கலாம் என்று நடுவர்கள் கூறினர். ஆனால் கேப்டன் ரஹானேவோ, நாங்கள் கிரிக்கெட்டை நேசிக்கிறோம், மதிக்கிறோம், நாங்கள் ஏன் களத்தை விட்டு வெளியேற வேண்டும்? அவர்களை வெளியேற்றுங்கள்? நாங்கள் ஏன் வெளியேற வேண்டும்? என்று திட்டவட்டமாக கூறினார்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.


தற்போது, அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்திய வீரர் முகமது ஷமியை நோக்கி ஜெய் ஸ்ரீராம் என்று முழங்கிய ரசிகர்கள் மீது குஜராத் கிரிக்கெட் சங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது. அதேநேரத்தில், ரசிகர்களின் செயல்கள், விமர்சனங்களுக்குப் பதிலளித்து தேவையில்லாமல் சர்ச்சைகளை பெரிதாக்கக் கூடாது என்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகள் காரணமாக இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா அதுபோன்ற பதிலை அளித்திருக்கலாம் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர்.

No comments

Powered by Blogger.