Header Ads



முஸ்லிம்களின் குடியேற்றத்தை எதிர்க்கும் சிறீதரன்


தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்குமிடையில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்துவதற்கான கைங்கரியத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்க கட்டவிழ்த்துவிட்டிருக்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.


கிளிநொச்சி தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் அண்மையில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர், அதன் முதல் கட்டம்தான் பச்சிலைப்பள்ளி பகுதியில் 100 ஏக்கர் காணிகளை முஸ்லிம் சகோதரர்களுக்கு வழங்க எடுக்கப்படுகின்ற முயற்சி எனத் தெரிவித்தார்.


மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் காணி சீர்திருத்த குழுவிற்கு சொந்தமான 100 ஏக்கர் காணிகளில் உடனடியாக முஸ்லிம் சகோதரதர்களை குடியேற்றுவதற்கான திட்டம் ஒன்றை ரணில் அரசாங்கம் தன்னுடைய முகவராக இருக்கின்ற ஆளுநருக்கூடாக செயற்படுத்த முனைவதாக நாங்கள் அறிகின்றோம்.


மிக முக்கியமாக யாழ்ப்பாண மாவட்டத்திலே 12ஆயிரம் பேர் காணியற்றவர்களாக இருக்கின்றார்கள். 4000பேர் வரையானவர்கள் சொந்த இடம் இல்லாமல் இருக்கின்றார்கள்.


இந்த நிலையில் கிளிநொச்சிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடைப்பட்ட தோம்பு முறையிலான சட்டங்களைக்கொண்ட பச்சிலைப்பள்ளி பகுதியில் ஆதி காலங்களில் அதிக காணிகளை வைத்திருந்த தமிழ் மக்களிடம் பெறப்பட்ட காணிகள் காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் காணி வங்கி ஒன்றில் சேகரித்து வைக்கப்பட்டிருந்தது.


இப்பொழுது குறித்த காணியில் முஸ்லிம்களை குடியமர்த்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதன் அடிப்படை நோக்கமானது தமிழ் மக்களிற்கும் முஸ்லிம் மக்களிற்குமிடையில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்துவதற்கு தான்.


நான் முஸ்லிம் சகோதரர்களிடம் பகிரங்கமாக ஓர் வேண்டுகோளை விடுக்கின்றேன். தமிழ் மக்களிடமும், முஸ்லிம் மக்கிடமும் இன்றும் சுமுகமான உறவு நிலை ஏற்படாத சூழல் காணப்படுகின்றது. கடந்த காலங்களில் இரண்டு பகுதியினாலும் ஏற்பட்ட காயங்கள் இதற்கு காரணமாகின்றது.


விடுதலைப் புலிகள் முஸ்லிம் சகோதரர்களை இங்கிருந்து அனுப்பினார்கள் என்ற செய்தியை அவர்கள் சொல்லிக்கொண்டதும், யுத்தம் நிறைவு பெற்ற பின்னர் தமிழ் மக்கள் எவரும் கொலை செய்யப்படவில்லை எனவும், முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் கக்கிம் ஐக்கிய மனித உரிமைகள் பேரவைக்குச் சென்று தமிழ் மக்களிற்கு எதிராக கோசம் எழுப்பிய நாட்களும் உண்டு.


அதேபோல, தான் தமிழ் மக்களின் காணிகளை பறித்தேன் எனவும், ஆயுத குழுக்களை உருவாக்க தமிழ் மக்களை அழித்தேன் எனவும் அவர்களின் இடங்களை அழித்தேன் எனவும் கிஸ்புல்லா குறிப்பிடுகின்றார்.


அதேவேளை, கல்முனையில் தமிழ் மக்கள் நூற்றுக்கு நூறுவீதம் வாழுகின்ற பிரதேச செயலகத்தை தரமுயர்த்தவதற்கு முஸ்லிம் காங்கிரசும் சில முஸ்லிம் சகோதரர்களும் தடையாக இருக்கின்றார்கள்.


இவ்வாறான சூழ்நிலைகள் இருக்கின்றபொழுது, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் கிட்டத்தட்ட 400 முஸ்லிம் குடும்பங்களை 100 ஏக்கர் காணியில் குடியேற்ற முனைதல் என்பது அடிப்படையில் தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் பிரச்சினை உடையவர்களாக மாற்றுவதற்கும், தொடர்ந்தும் அவர்களிற்கிடையில் பிரச்சினை எழுவதற்கான களத்தை ரணில் விக்ரமசிங்க போடுகிறார் என்பது வெளிப்படையானது.

No comments

Powered by Blogger.