ரூபாய் மதிப்பின், உயர்வு தற்காலிகமானதா..? பேராசிரியர் கூறும் முக்கிய விடயம்
இதன்படி, அமெரிக்க டாலர் ஒன்றின் கொள்வனவு விலை 351 ரூபா 72 சதமாகவும், விற்பனை விலை 362 ரூபா 95 சதமாகவும் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவிக்கின்றது.
இலங்கை வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை குறுகிய காலத்திற்கு செலுத்தாதிருக்கின்றமை, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தமை, இறக்குமதி கட்டுப்பாடுகள், ஏற்றுமதி வருமானம் சற்று அதிகரித்துள்ளமை, வெளிநாட்டு பணியாளர்களின் வருமானத்தின் வருகை அதிகரித்துள்ளமை மற்றும் உலக வங்கியிடமிருந்து கிடைக்கப் பெறுகின்ற உதவித் திட்டம் ஆகியவற்றினால் கிடைக்கப் பெற்ற டாலரினால் நாட்டின் கையிருப்பு அதிகரித்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் எம்.கணேஷமூர்த்தி தெரிவிக்கின்றார்.
அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்கு உதவி வழங்கும் வகையில், 400 மில்லியன் டாலரை வழங்க உலக வங்கியின் முதலீட்டு பிரிவான சர்வதேச நிதிக் கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பானது சந்தையில் ஒரு முன்னேற்றகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பேராசிரியர் கூறுகின்றார்.
''முக்கியமான காரணம், 400 மில்லியன் டாலரை, இலங்கையிலுள்ள 3 வங்கிகளின் ஊடாக வழங்கவுள்ளதாக உலக வங்கி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. உதவியாக வழங்கப்படும் இந்த தொகையை இறக்குமதிகளுக்காக பயன்படுத்த முடியும் என்ற ஒரு அறிவிப்பு வந்துள்ளது. என்னை பொறுத்த வரையில், ஏற்றுமதியில் கிடைத்த அதிகரிப்பு என்றும் நான் சொல்ல மாட்டேன். அந்நிய செலாவணி வந்தமைக்கான அதிகரிப்பு என்று சொல்வதையும் நம்பமாட்டேன். உலக வங்கி உதவி தொகையை வழங்குவதாக கூறியுள்ளது. இந்த அறிவிப்பானது, சந்தையில் ஒரு சாதகமான மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. சந்தையில் நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளது. அதனாலேயே ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது." என பேராசிரியர் எம்.கணேஷமூர்த்தி குறிப்பிடுகின்றார்.
இந்த ரூபாவின் பெறுமதி அதிகரிப்பை சாதகமாக பார்க்க முடியுமா? என பிபிசி தமிழ், பேராசிரியர் எம்.கணேஷமூர்த்தியிடம் வினவியது.
''பார்க்கலாம். ஆனால், இது தற்காலிகமானது. வழக்கமான நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் செல்லுமாக இருந்தால், இது அனைத்தும் ஆவியாகி விடும். ஏனென்றால், இலங்கை இப்போது கடனை திருப்பி செலுத்தவில்லை. இறக்குமதிகளை மிகவும் கட்டுப்படுத்தி வைத்துள்ளார்கள். அதனால் தான், ரூபாவின் பெறுமதி அதிகரிப்பதை போன்று காட்டுகின்றதே தவிர, பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு, ரூபாவின் பெறுமதி அதிகரிக்கவில்லை. இன்னுமொரு காரணம் இருக்கின்றது. இதுவரை காலமும் பணத்தை அரசாங்கம் அச்சிட்டது. ரூபாவின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, டாலருக்கான கேள்வி அதிகரிக்கும். ரூபாவின் நிரம்பல் அதிகரிக்கின்றது, அவ்வாறான நிலையில் டாலர் வரவில்லை என்றால், டாலரின் பெறுமதி அதிகரிக்கும். இப்போது ரூபா அச்சிடப்படுவதில்லை. ரூபா அச்சிடாமையினால், ரூபாவின் நிரம்பல் குறையும் அல்லவா?. டாலரின் பெறுமதி குறைவடைவதற்கு அதுவும் ஒரு காரணமாக அமைகின்றது." என அவர் கூறுகின்றார்.
அவ்வாறாயின், நாடு உண்மையாகவே பொருளாதாரத்திலிருந்து மீளவில்லையா என பிபிசி தமிழ் அவரிடம் கேள்வி எழுப்பியது.
''நிச்சயமாக இல்லை. இதுபோலியாக உருவாக்கப்பட்ட ஒரு நிலைமை. இதனை ஒரு சாதகமான நிலைமையாக பார்க்க முடியாது. இதுவொரு தற்காலிகமான நிலைமை. இலங்கையின் நிலைமைகள் வழமையான நிலைக்கு திரும்புகின்ற போது, சில மாற்றங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. உலக வங்கியினால் வழங்கப்பட்ட இந்த உதவியானது, ஒரு முறை மாத்திரமே வழங்கப்படும். இந்த பணம் பயன்படுத்தப்பட்டதன் பின்னர், மீண்டும் பழைய நிலைக்கு செல்வதற்கான சாத்தியம் உள்ளது." என அவர் தெரிவிக்கின்றார்.
இந்த காலப் பகுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டாலர் கடனுதவி கிடைக்கும் பட்சத்தில், இன்று காணப்படுகின்ற நிலைமையையே தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் எம்.கணேஷமூர்த்தி குறிப்பிடுகின்றார்.
Post a Comment