ஆடிப்போன ஆளும்கட்சி, இந்திய - அமெரிக்க ஆதரவுடன் ரணில், சவேந்திர சில்வாவுக்கு எதிராகவும் பிரச்சாரம்
- Siva Ramasamy -
தேர்தலுக்குரிய நிதியை ஒதுக்கப்பட்டபடி வழங்குமாறு உயர்நீதிமன்றம் விடுத்த உத்தரவால் ஆடிப்போயிருக்கிறது ஆளுங்கட்சி.
தேர்தல் நடத்த ரணில் தயங்குகிறார் என்பது போலவும், தேர்தலை சந்திக்க தயார் என்றும் ஆளுங்கட்சி பிரமுகர்கள் கூறினாலும் உள்வீட்டு நிலைமை அப்படியல்ல.
உயர்நீதிமன்றம் கூறியபடி நிதியை வழங்கினாலும் , இனி அறிவிக்கப்படும் திகதியில் தேர்தல் நடக்கும்வரை அது நடக்குமா என்பதில் உறுதியில்லை.
உள்ளூராட்சித் தேர்தல் நடத்துவதை விட ஜனாதிபதித் தேர்தலுக்கு செல்வதை விரும்பும் ரணில் , அப்படியொரு தேர்தல் நடந்து அதில் தோற்றால் எஞ்சியுள்ள காலம்வரை பதவியில் தொடரலாமா என்று ஆலோசித்திருக்கிறார்.. ஆனால் வேறொருவர் வெற்றி பெற்றால் அவர் பதவியேற்பார்.. ரணிலால் தொடர முடியாது.. தவிர இது கோட்டாவுக்கு கிடைத்த மக்கள் ஆணை என்பதால் இடையில் நாடாளுமன்றம் தீர்மானித்த ஜனாதிபதி ஒருவர் தனது பதவிக்காலத்தை தீர்மானிக்க முடியாது என்ற இக்கட்டு நிலையும் ரணிலுக்கு இருக்கிறது..
அப்படியானால் ரணில் என்ன செய்வார்?
ரணிலுக்கு இப்போது உள்ளூரில் பெரும் ஆதரவு இல்லை என்றாலும் உலகின் ஆதரவை அவர் பெற்று வருகிறார்.. அமெரிக்காவுடன் மிக நெருக்கம்.. சுருக்கமாகச் சொல்லப்போனால் அமெரிக்காவுக்கு திருகோணமலையில் கடற்படைத் தளம் ஒன்றை அமைக்க அனுமதி கொடுக்க முன்னர் அதன் கள விஜயத்தினையே ரணில் நேற்றுமுன்தினம் மேற்கொண்டிருந்தார்.. விமானப்படை ஹெலியில் வழமைக்கு மாறாக திருகோணமலை கடற்படைத்தளத்தை அண்டிய பகுதிகளை அவர் பார்வையிட்டதன் பின்னணியில் பல முக்கிய காரணங்கள் இருக்கின்றன.
ரணில் திருமலைக்குச் செல்ல முன்னர் அங்கு சென்ற இலங்கைக்கான சீனத் தூதுவர், சில ஆராய்வுகளை மேற்கொண்டார் என்பதையும் கவனிக்குக.. நாங்களும் இங்கே நிற்கிறோம் என்ற செய்தி தான் அது.
இடையில் திருமலையில் உள்ள மேலும் சில எண்ணெய்க்குதங்களை இந்தியாவுக்கு வழங்கப்போகிறது அரசு.
ஆக, அமெரிக்கா, இந்தியாவுடன் அணைந்து சென்று சீனாவையும் பகைக்காமல் காய்களை நகர்த்தி தனது அரசியல் இருப்பை உறுதி செய்ய முனைகிறார் ரணில்.. பௌத்த பிக்குகள் எவரும் ரணிலுக்கு எதிராக இதுவரை வீதியில் இறங்கவில்லை.. அப்படி இறங்கும் எவரும் மேற்குலக நாடுகளில் கால்வைக்க முடியாத நிலை உருவாகலாம்.. மேற்குலகம் கண்ணசைத்தால் குறிப்பாக அமெரிக்கா , இந்தியா கூறினால் எள் என்றால் எண்ணெய்யாக ரணிலுடன் நிற்பார்கள் தமிழ் , முஸ்லிம் அரசியல்வாதிகள்.
இடையில் ஜெனரல் சவேந்திர சில்வா , அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக இறங்கலாமென கருதப்படுவதால், அவர் மீதான விசாரணை அறிக்கையை பகிரங்கப்படுத்தி அவரை மக்கள் வெறுக்கும் வேலைகளையும் ஆளுங்கட்சி செய்து வருகிறது.
கூட்டிக்கழித்துப் பார்த்தால் தனது அரசியல் அதிகாரத்தை தக்கவைக்க ரணில் எந்த லெவலுக்கும் செல்வார்.. சென்றுள்ளார் என்று தெரிகிறது.
சிங்களவர்கள் எதனையும் விரைவில் மறந்துவிடுவார்கள் என்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, எல்லா காய் நகர்த்தல்களையும் செய்கிறார் ரணில்.
Post a Comment