Header Ads



அன்று எலும்பு முறிந்த சிறுவன், இன்று எண்பு முறிவு வைத்திய நிபுணர் (என் இறைவா உனக்கு நன்றி செலுத்துவோரில் என்னையும் சேர்த்து வை)


13 வயது சிறுவன், மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து செல்லும் போது, இன்னொரு மோட்டார் சைக்கிள் வந்து மோதியதில், தூக்கி எறியப்பட, இடது கையும் காலும் உடைந்து போனது. அப்படியே ஆட்டோவுக்குள் தூக்கி போடப்பட்டு, காத்தான்குடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் போது, உடைந்த கால், தொங்கிக் கொண்டிருந்தது.


காத்தான்குடியிலிருந்து மட்டக்களப்புக்கு அம்பியூலன்சில் அனுப்பப்பட்டு, அன்று நள்ளிரவு வரை யாரும் வந்து பார்க்கவும் இல்லை. கடும் வலியில் துடித்துக் கொண்டிருந்த போது, ஒரு வைத்தியர் வந்து எட்டிப் பார்த்துவிட்டு, ஏதோ வாய்க்குள் முனு முனுத்துவிட்டு , சாப்பிட வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றார். 


அடுத்த நாள் வார்ட்டினுள் வைத்து காலுக்கும் கைக்கும் கொங்ரீட் பென்டேஜ் போடப்பட்டது. அதனால் ஏற்பட்ட வலிக்கு வீரிட்டு அழுததையும் யாரும் கவனிக்கவில்லை.


2 கிழமைகளில் கிளினிக் கூட்டி வருமாறு வீட்டுக்கு அனுப்பப்பட, வீட்டிலிருந்து கிளினிக்கிற்கு எவ்வாறு கொண்டு செல்வது என்பதே அந்தக் குடும்பத்திற்கு பெருத்த கவலையாய் இருந்தது. 


கடைசியில் ஒரு வேனை செட் பண்ணினார்கள். அது மட்டக்களப்பு மார்கட்டிற்கு மரக்கறி ஏற்றிச் செல்லும் வேன். வேன் முழுக்க மரக்கறி ஏற்றப்பட்டு, முன் சீட்டில் பேஷன்ட் ஏற்றப்பட்டு, உடையாத கையால் லீக்ஸ் கட்டு மேலே உழுந்துவிடாமல் பிடித்துக் கொண்டே, மட்டக்களப்பு மார்கட்டை அடைந்து, அங்கே மரக்கறிகளை இறக்கிவிட்டு, ட்ரைவர் களைப்பிற்காக சாப்பிட்டு டீயும் அடித்துவிட்டு, கிளினிக்கை அடைந்த போது, 10 மணி ஆகியிருந்தது. 


"டேய், உங்களுக்கெல்லாம் டைமுக்கு வரத் தெரியாதாடா?" என்ற வரவேற்புடன் தொடங்கிய உபசரிப்பு, ஸ்டெச்சரில் அந்த சிறுவனை தூக்கி போடுவதில் இருந்து, வைத்தியர் எட்டிப் பார்த்து, முகத்தையும் பார்க்காமல் யாரிடமோ எதோ சொல்லிவிட்டுச் சென்று, எக்ஸ் ரே எடுக்கச் சென்று அதை எடுத்து, திரும்பக் காட்டி முடியும் வரை தொடர்ந்தது.


இப்படியாக அலைந்து, கால் கை உடைந்த பாவத்தை போக்கி, அவை ஒட்டி எடுக்க 3 மாதங்கள் போயின. 


இது வேறு யாருக்கும் நடந்ததல்ல, அந்த சிறுவன் நான்தான்.


அன்று சிறுவனாக இருந்த நான், என்பு முறிவு வைத்திய நிபுணராக இருக்கிறேன். மற்றப்படி அநேகமான விடயங்கள் மாறாமலே இருக்கின்றன. 


ஒரு பேஷன்ட் ஒரு கிளினிக்கிற்கு வருவது என்பது எவ்வளவு கஷ்டமானது, எவ்வளவு செலவு மிக்கது என்பதை அனுபவத்தில் கண்டதால்தான், ஸ்ட்ரைக் நாளிலும் கிளினிக்கில் போய் குந்தியிருக்கச் சொல்கிறது இந்த மனசு.  பதின்ம வயது சிறுவர்களை கண்டவுடன், மரக்கறி  வேனில் நானிருக்கும் விம்பம் மனதில் வந்துவிடுகிறது. 


"என்னிறைவனே, உனக்கு நன்றி செலுத்துவோரில் என்னையும் சேர்த்து வைப்பாயாக! என்பதே எனது பிரார்த்தனை.


Dr Ahamed Nihaj

MBBS, MD-Ortho, DSICOT, FEBOT, FRCSEd (Tra & Orth), FRCS ( Eng)

Consultant orthopaedic surgeon

Teaching hospital, Batticaloa

No comments

Powered by Blogger.