ரணிலுக்கு உண்மையிலே நாட்டுப்பற்று இருந்தால், இப்படிச் செய்ய வேண்டும்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நாட்டுப்பற்று உண்மையாகக் காணப்படுமாயின் அவர் நாடாளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத்தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என மக்கள் பேரவை சபையின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தற்போது பாரிய போராட்டம் காணப்படுகின்றது.
தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ள நிலையில் தேர்தலைத் தொடர்ந்து பிற்போட அரசாங்கம் பாரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
அரசாங்கத்தின் நோக்கத்துக்கமைய உள்ளூராட்சி சபைத் தேர்தல் தற்போது பிற்போடப்பட்டுள்ளது.
மாகாண சபைகளாலும், உள்ளூராட்சி சபைகளாலும் அரச செலவுகள் மாத்திரம் மிகுதியாகுகின்றதே தவிர நாட்டுக்கு எவ்வித பயனும் கிடைக்கப்பெறவில்லை.
பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தி 8000 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதால் அரசாங்க கட்டமைப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நாட்டுப்பற்று உண்மையாகக் காணப்படுமாயின் அவர் நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலை நடத்த வேண்டும்.
இந்த நாடாளுமன்றத்துக்கு மக்கள் ஆணை சிறிதேனும் கிடையாது. நாட்டு மக்கள் 225 உறுப்பினர்களையும் திருடர்கள் என கடுமையாக விமர்சிக்கிறார்கள். பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண மக்களின் ஆதரவு அவசியம்.
ஆகவே, நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி புதிய அரசைத் தோற்றுவிக்க வேண்டும். மக்கள் ஆணை இல்லாத இந்த அரசாங்கத்துக்கு சர்வதேசம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு இந்த மாதம் கிடைக்கும் என அரசாங்க குறிப்பிடுவதை நம்ப முடியாது என தெரிவித்துள்ளார்.
Post a Comment