Header Ads



கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் - சாணக்கியன் எச்சரிக்கை


இன்றைய (07) தினத்திற்குள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காய்வாளரை நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படவில்லை என்றால் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்பது 1993ஆம் ஆண்டு வர்த்தமானி ஊடாக பிரதேச செயலகமாக அறிவிக்கப்பட்ட ஒரு பிரதேச செயலகம். இதற்கு கணக்காய்வாளர் இல்லை என்று சொல்வதோ அல்லது நியமிக்கப்படவில்லை என்று சொல்லுவதோ ஒரு அலட்சியமான பதில்.


இலங்கையில் பிரதேச செயலகம் ஒன்றுக்கு கணக்காய்வாளர் தேவையில்லை என்று நீங்கள் எவ்வாறு கூறலாம். இது முற்றுமுழுதாக ஒரு தவறான விடயம். உங்களுடைய பொது நிர்வாக அமைச்சினுடைய செயல்பாடுகள் மிகவும் மோசமாகவுள்ளன.


மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களை நடத்துவது இல்லை. மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களில் எடுக்கப்படாத பல தீர்மானங்களை, மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் என்ற அடிப்படையில் செயற்படுத்துகின்றார்.


உங்களுடைய பகுதியிலுள்ள பிரதேச செயலகத்திற்கு கணக்காய்வாளர் இல்லை என்றால் அது தேவையில்லாத விடயம் என நீங்கள் கூறுவீர்களா. 29 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு பிரதேச செயலகம். அங்கு நிதியினை கையாள முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.


கடந்த 2019ஆம் ஆண்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காய்வாளரை நியமிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார். ஆனால் இதுவரை நியமிக்கப்படவில்லை.


நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார் தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஒரு இரவில் இதனை செயற்படுத்துவோம் என்று. அதேபோன்று இராஜாங்க அமைச்சர்களான வியாழேந்திரன், பிள்ளையான் போன்றவர்கள் கூறினார்கள் கணக்காய்வாளரை நியமிக்காவிட்டால் நிர்வாகத்தினை முடக்குவோம் என்று. ஆனால் இன்று அவர்கள் அமைதியாக இருக்கின்றார்கள். அதேபோன்று கருணா அம்மானும் இதுகுறித்து பேசினார் ஆனால் இதுவரை எதுவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.


இன்றைய தினத்திற்குள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காய்வாளரை நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படவில்லை என்றால் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்.“ என தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.