Header Ads



நிலநடுக்கம் குறித்து இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு


இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்கள் குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.


இலங்கை அமைந்துள்ள இந்திய - அவுஸ்திரேலிய தட்டுக்கும் மேலே அமைந்துள்ள ஆசிய தட்டுக்கும் இடையில் நேற்று பகல் முழுவதும் பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அதன் சிரேஷ்ட புவியியலாளர் தனுஷ்க ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.


“இலங்கையில் இயங்கி வரும் 4 நில அதிர்வு அளவீடுகளும் இந்த நிலநடுக்கத்தை பதிவு செய்திருந்தாலும், பொதுமக்கள் எங்களிடம் எந்தவிதமான முறைப்பாடும் செய்யவில்லை. இந்த நிலநடுக்கங்கள் பற்றிய ஆய்வில் நாம் குறிப்பிடக்கூடிய காரணிதான் நேற்று நாள் பூராகவும் இலங்கை அமைந்துள்ள இந்திய-அவுஸ்திரேலிய தட்டு மற்றும் மேலே உள்ள ஆசிய தட்டுக்கு இடையே 4-5 ரிக்டர் அளவில் பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த நிலநடுக்கங்களின் அதிர்வே இலங்கை எல்லையில் உணரப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள தேவையில்லை.


திருகோணமலை, கோமரன்கடவல பிரதேசம் மற்றும் கிரிந்த, பலடுபான கடற்கரைப் பகுதியில் இரண்டு சிறிய நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.


திருகோணமலை, திம்பிரிவெவ, கோமரன்கடவல பிரதேசத்தில் இன்று (19) அதிகாலை 3.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


ரிக்டர் அளவில் 3.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.


இதேவேளை, நேற்று மாலை 06.46 மணியளவில் கிரிந்த - பலடுபான கடற்கரையை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


ரிக்டர் அளவில் 2.6 ஆக பதிவாகி இருந்தது.


இரண்டு நிலநடுக்கங்களும் பூமியின் மேற்பரப்பில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும், அவை இந்நாட்டின் நில அதிர்வு நிலையங்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன. நிலநடுக்கம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியர் அதுல சேனாரத்ன பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.


“இதுவரை காலமாக ஏற்பட்ட நிலநடுக்கங்களின் ரிக்டர் அளவுகோலைப் பார்த்தால், கடந்த 30-40 ஆண்டுகளில் 4 க்கும் குறைவான நிலநடுக்கங்களே ஏற்பட்டுள்ளன. எனவே பெரிய நிலநடுக்கங்களை எதிர்பார்க்க முடியாது. ஆனால் 2, 2.5, 3, 3.5 போன்ற நிலநடுக்கங்கள் எதிர்காலத்திலும் நடக்கலாம்."


நேற்றும் இன்றும் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கங்களுக்கு மேலதிகமாக, பெப்ரவரி 10ஆம் திகதி முதல் நாட்டில் பல நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.


மொனராகலை, புத்தல, வெல்லவாய, கும்புக்கன மற்றும் ஒக்கம்பிட்டிய உள்ளிட்ட பல பிரதேசங்களில் இருந்து இந்த நிலநடுக்கங்கள் பதிவாகி இருந்தன.

No comments

Powered by Blogger.