'விஷம் கலந்த ஐஸ்கீறிம்' குறித்து எச்சரிக்கும் இம்தியாஸ்
தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டமூலத்திற்கு சர்வதேச ஜனநாயக அமைப்புகள் மற்றும் சர்வதேச நாடுகளிடம் இருந்து வந்த கடுமையான எதிர்ப்பின் காரணமாக புதிய சட்டமூலத்தை கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
தேர்தல் மூலம் மக்களின் கருத்து வெளிப்படுவதற்கான வழிகளை மூடுவதற்கு பல சூழ்ச்சிகள் நடத்தப்படும் தற்போதைய சூழலில் தேர்தலுக்கு அப்பால் அரசியலமைப்பு பிரகாரம் மக்களின் கருத்துக்கள் வெளிப்படும் ஏனைய வழிகளையும் புதிய சட்டமூலத்தின் ஊடாக மூடுவதற்கு முனைவதாகவே இந்த சட்டமூல ஷரத்துகள் மூலம் புலப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அன்று முதல் இன்று வரை பல தடவைகள் பயங்கரவாத தடைச்சட்டத்தை தனது குறுகிய அரசியல் இலாபத்திற்காக மாத்திரமே பயன்படுத்தியுள்ளனர்.
இந்த சட்டமூலத்தினால் பயங்கரவாத சந்தேக நபர்கள் மாத்திரமின்றி ஊடகவியலாளர்கள்,சமூக ஆர்வலர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்திற்கு எதிரான விமர்சன ரீதியான கருத்துகளை முடக்குவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அவசரகால சட்டத்தை பிறப்பித்து நினைத்த போக்கில் ஆட்சி நடத்த முடியும். தற்போது அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தில் ஆர்ப்பாட்டங்கள்,பொதுக்கூட்டங்கள்,பேரணிகளை தடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் புதிய சட்டமூலத்தில் ஆர்ப்பாட்டங்கள்,பேரணிகளுக்குத் தடை விதிக்கும் அதிகாரம் பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு வழங்கப்பட்டுள்ளது.இந்த ஷரத்து நாட்டை பொலிஸ் இராஜ்ஜியமாக மாற்றும் ஆபத்து உள்ளது.இது மிகவும் பாரதூரமானதாகும்.
எனவே இந்த புதிய சட்டமூலம் தேசிய பாதுகாப்பு தொடர்பாக அழகிய வார்த்தைகளால் அலங்கரிக்கப்பட்டாலும் குறுகிய அரசியல் நோக்கில் ஜனநாயகத்தை அடக்குவதற்காக கொண்டுவரப்படும் “விஷம் கலந்த ஐஸ்கீறிம்” ஆக இருக்குமா என்பதை கவனமாக அலசி ஆராய வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment