Header Ads



இஸ்ரேலியர்கள் வரலாற்றிலேயே மிகப்பெரிய போராட்டம், ஈரான் - சவூதி ஒப்பந்தம் குறித்தும் பேச்சு


 நீதித்துறை அமைப்பை மாற்றியமைப்பதற்கான அரசாங்கத் திட்டங்களுக்கு எதிராக லட்சக்கணக்கான இஸ்ரேலியர்கள் அணி திரண்டுள்ளனர். இது அந்த நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய போராட்டம் என்று அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.


பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்த மாற்றங்கள், நீதிமன்றங்களின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் என்றும், அரசாங்கத்தின் கிளைகளுக்கு இடையே சமநிலையை மீட்டெடுக்கும் என்றும் கூறுகிறார். ஆனால் அது, ஜனநாயகத்தை அச்சுறுத்துவதாக எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.


சனிக்கிழமை நடைபெற்ற பேரணி ஒன்றில், எதிர்க்கட்சித் தலைவர் யேர் லேபிட் இது இஸ்ரேலின் "மிகப்பெரிய நெருக்கடி" என்று கூறினார்.


சனிக்கிழமையன்று, 5,00,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேல் முழுவதும் தெருக்களில் இறங்கியதாக ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இதை ஹாரெட்ஸ் செய்தித்தாள் "நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம்" என்று அழைத்தது.


டெல் அவிவ் நகரில் சுமார் 2,00,000 பேர் திரண்டிருந்தனர், பலர் இஸ்ரேலின் தேசியக் கொடியை ஏந்தியிருந்தனர்.


நகர அணிவகுப்பில் பங்கேற்ற தமிர் கைட்சப்ரி, "இதுவொரு நீதித்துறை சீர்திருத்தம் அல்ல. இதுவொரு புரட்சி, இது இஸ்ரேலை முழு சர்வாதிகாரத்திற்குக் கொண்டு செல்கிறது. இஸ்ரேல் எனது குழந்தைகளுக்கான ஜனநாயகமாக இருக்க விரும்புகிறேன்," என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறினார்.


பேரணி வழியாகச் சென்ற காவல்துறைத் தலைவர் அமிச்சாய் எஷெட்டை எதிர்ப்பாளர்கள் கைதட்டிப் பாராட்டினர்.


பிதமர் நெதன்யாகுவின் அரசாங்கம் முன்னதாக மாவட்டத் தளபதியை நீக்க முயன்றது. ஆனால் அந்த நடவடிக்கை நாட்டின் அட்டர்னி ஜெனரலால் தடுக்கப்பட்டது.


சனிக்கிழமையன்று, 50,000 பேர் கொண்ட ஒரு கூட்டம், வடக்கு நகரமான ஹைஃபாவில் அணிவகுத்துச் சென்றது. இது அரசாங்கத் திட்டங்களுக்கு எதிரான நாடு தழுவிய போராட்டத்தின் 10வது வாரம்.


தெற்கு நகரமான பேவர் ஷேவாவில் பேசிய எதிர்கட்சித்தலைவர் லபிட், நாடு முன்னோடியில்லாத நெருக்கடியை எதிர்கொள்கிறது என்று எச்சரித்தார்.


"பயங்கரவாத அலை நம்மைத் தாக்குகிறது, நமது பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது, பணம் நாட்டைவிட்டு வெளியேறுகிறது. இரான் நேற்று சௌதி அரேபியாவுடன் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் இந்த அரசாங்கம் இஸ்ரேலிய ஜனநாயகத்தை நசுக்குவதில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது," என்று அவர் கூறினார்.


புதிய சீர்திருத்தங்கள், நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பதில் அரசாங்கத்திற்கு தீர்க்கமான செல்வாக்கைக் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. மேலும், நிர்வாகத்திற்கு எதிராக தீர்ப்பளிக்கும் அல்லது சட்டத்தை முறியடிக்கும் உச்ச நீதிமன்றத்தின் திறனைக் கட்டுப்படுத்துகின்றன.


இந்தப் பிரச்னை இஸ்ரேலிய சமுதாயத்தில் ஆழமான பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய ராணுவத்தின் முதுகெலும்பாகத் திகழும் ரிசர்வ் படையினர், தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக, பணிக்குச் செல்வதைத் தவிர்க்க உள்ளதாக மிரட்டி வருகின்றனர்.


கடந்த திங்கட்கிழமை, எதிர்பாராத நடவடிக்கையாக ஓர் உயரடுக்கு இஸ்ரேலிய விமானப்படை பிரிவில் உள்ள டஜன் கணக்கான ரிசர்வ் போர் விமானிகள் தாங்கள் பயிற்சிக்கு வரப்போவதில்லை என்று கூறினர். பின்னர் அவர்கள் போக்கை மாற்றிக் கொண்டு தங்கள் தளபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டனர்.


வியாழன் அன்று, சாலைகளை மறித்த எதிர்ப்பாளர்கள், நெதன்யாகு நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தடுக்க முயன்றனர். பின்னர் அவர் ரோம் புறப்பட்டார்.


அரசியல் எதிரிகளால் போராட்டங்கள் தூண்டிவிடப்படுவதாகக் கூறி, சலசலப்பை எதிர்கொள்வதில் இஸ்ரேலிய அரசாங்கம் உறுதியாக நிற்கிறது.


ஏற்கெனவே, நாடாளுமன்றம் வழியாகச் செல்லத் திட்டமிட்ட சீர்திருத்தங்கள் நீதித்துறையை அரசியலாக்கும் சர்வாதிகார அரசாங்கத்திற்கு வழிவகுக்கும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.


ஆனால், நீதிமன்றங்கள் தங்கள் அதிகாரங்களை மீறுவதைத் தடுக்கும் வகையில் சீர்திருத்தங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் கடந்த தேர்தலில் அவை இஸ்ரேலிய மக்களால் வாக்களிக்கப்பட்டதாகவும் நெதன்யாகு கூறுகிறார்.

No comments

Powered by Blogger.