Header Ads



நமது வீடு, நமது குழந்தைகளுக்கு பாதுகாப்பாக உள்ளதா..? (இதை செக் பண்ணுங்க)


- விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி  -


2 மணி நேரங்களுக்கு முன்னர்

"ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்த 4 வயது குழந்தை உயிரிழப்பு"

"வீட்டில் மின்சாரம் தாக்கியதில் 7 மாத குழந்தை பலி"

அண்மையில் நாளிதழ்களில் இடம்பெற்ற செய்திகள் இவை. இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது இதுவே முதல்முறையல்ல. மாடியில் இருந்து குழந்தைகள் தவறி விழுவது, குழந்தைகளை மின்சாரம் தாக்குவது, குடிநீர் தொட்டியில் விழுந்து குழந்தைகள் மூழ்குவது என இப்படியான நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன.


குழந்தைகளுக்குப் பலத்த காயத்தையோ, உயிரிழப்பையோ ஏற்படுத்தும் இதுபோன்ற விபத்துகள் அதிகமாக நடப்பது இரண்டு இடங்கள் என ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.


குழந்தைகளுக்கு ஏற்படும் அதிர்ச்சி குறித்த ஆய்வின்போது(Trauma Research in Paediatrics) வெளியிடப்பட்ட தகவலில், "சாலை விபத்து மற்றும் உயரத்தில் இருந்து தவறி விழுவது ஆகிய இரண்டு காரணங்களால்தான் குழந்தைகளுக்கு தலையில் மோசமான காயங்கள் ஏற்படுகின்றன," எனத் தெரிய வந்துள்ளது.


சென்னை, பெங்களூரூ ஆகிய இரு நகரங்களில் உள்ள 10 குழந்தைகள் நல மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஜூலை 2020 முதல் செப்டெம்பர் 2022 வரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் விவரங்கள் இதற்காக ஆய்வுக்கு உட்படுப்பட்டன.


குறிப்பிட்ட இந்தக் காலகட்டத்தில், அடிபட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில்(ICU) 260 குழந்தைகள் வரை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதில், 45% குழந்தைகள் ஐந்து வயதிற்கு உட்பட்டோராகவும், 20% சிறார்கள் 5 முதல் 10 வயதிற்கு உட்பட்டவர்களாகவும் இருந்தனர்.


மேலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 70% பேர் தலையில் அடிபட்டதற்காக வந்தவர்கள் என்று இந்த ஆய்வு முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.


இதுமட்டுமின்றி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 10% பேர் உயிரிழந்ததாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.


குழந்தைகளுக்கு மோசமான காயங்களை ஏற்படுத்துவதில் சாலை விபத்து, உயரத்திலிருந்து கீழே விழுவது, சூடான திரவங்களை உடலில் கொட்டிக் கொள்வது, மின்சாரம் தாக்குவது ஆகியவைதான் முதன்மை காரணங்களாக உள்ளன என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.


குழந்தைகளுக்கு ஏற்படும் விபத்துகளில் சாலை விபத்துகளைத் தவிர பெரும்பாலான விபத்துகள் வீட்டிலேயே ஏற்படுகின்றன. குழந்தைகள் பிறப்பது முதல் பள்ளிக்கு செல்லும் வரை அவர்கள் அதிகம் வாழ்வது வீட்டில்தான், அப்படிப்பட்ட இடங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக ஏன் இருப்பதில்லை என்று குழந்தைகள் நல மருத்துவர் ஷோபனாவிடம் பிபிசி தமிழ் கேட்டது.


"நம் நாட்டில் இருக்கும் பெரும்பாலான வீடுகள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான முறையில் கட்டப்பட்டவை அல்ல(Child Proof Home)" என்றார் ஷோபனா.


"இந்தியாவில் உள்ள வீடுகளில் கட்டப்பட்டுள்ள பால்கனி முழுவதுமாக மூடாமல் பாதி திறந்து இருக்கும் வகையில் உள்ளன. இதனால் இதிலிருந்து குழந்தைகளால் எளிதாகத் தவறி விழ வழி ஏற்படுகிறது.


அதேபோல பெரும்பாலான வீடுகளில் உள்ள மின் சுவிட்ச்(Electric Switch) குழந்தைகளுக்கு எட்டும் தூரத்தில் தரையில் தாழ்வாக இருக்கின்றன. இதன்மூலம் மின்சாரத் தாக்குதலுக்கு குழந்தைகள் எளிதில் உள்ளாக நேரிடும்.


கதவு இடுக்குகள், மேஜையின் முனைகள், மூடியில்லாத தண்ணீர்த் தொட்டி என நமது வீட்டிலுள்ள பல அம்சங்கள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான வகையில் இருப்பதில்லை," என்று அவர் பேசினார்.


இளம் தம்பதிகளான சிவகுரு, செல்வியின் பிரதான பணியே 2 வயதாகும் தனது பெண் குழந்தையைக் கவனித்துக் கொள்வது மட்டுமே. தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இந்தத் தம்பதி, வீட்டிலிருந்தபடியே அலுவலகப் பணியுடன் குழந்தையையும் சேர்த்து கவனித்துக் கொள்கிறார்கள்.


குழந்தைகளுக்குப் பாதுகாப்பான வகையில் அவர்களது வீடு இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த சிவகுரு, "முதலில் நான் சென்னையில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் 7வது மாடியில் தங்கியிருந்தேன். என் குழந்தை நடக்கத் தொடங்கும் வரை எந்த பிரச்னையும் ஏற்படவில்லை.


ஆனால், என் குழந்தை நடக்கத் தொடங்கிய பிறகு வீட்டிலுள்ள ஒவ்வொரு பொருளையும் சென்று பார்க்கத் தொடங்கினாள். ஆர்வ மிகுதியால் அனைத்தையும் தொட்டு உணர ஆசைப்பட்ட என் குழந்தைக்குப் பாதுகாப்பான முறையில் அந்த வீடு இல்லை.


வீட்டின் பால்கனி சுவரில் இருந்த கிரில் தடுப்பு 3 அடி தான் இருந்தது. ஒருநாள் என் மகள் தலையை வெளியே நீட்ட முயற்சி செய்தாள். நாங்கள் பதறிப்போய் உடனடியாக அவளைத் தூக்கினோம்.


உடனடியாக வீட்டின் உரிமையாளரிடம் கூறி அந்த பால்கனியை சுற்றி கம்பி அமைத்துத் தரக் கோரினேன். ஆனால், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் அதை மாற்ற அனுமதிக்கவில்லை. அனைத்து வீடுகளும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் எனக் கூறி, வேண்டுமென்றால் வலையை மாட்டிக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கினர்.


இதனால் அந்த வீட்டைக் காலி செய்து புது வீட்டுக்குக் குடிபெயர்ந்து வந்துள்ளேன். குழந்தையின் பாதுகாப்பு கருதி, தரைத்தளத்தில் இப்போது வீடு எடுத்துள்ளேன்," என்று சிவகுரு தெரிவித்தார்.


குழந்தைகளுக்கு பாதுக்காப்பான வகையில் வீடுகள் கட்டப்படுகிறதா என்று பிபிசி தமிழிடம் பேசிய பில்டர்ஸ் அசோசியேசன் அமைப்பின் நிர்வாகி செல்வராஜிடம் கேட்டோம். "தனியாக இது போன்ற வசதி ஏதும் செய்யப்படுவது கிடையாது" என்றார் அவர்.


தொடர்ந்து பேசிய அவர், "குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பால்கனியில் கிரில் கம்பி அமைக்கும்போது 2 அடி சுவரின் மேல் இரண்டரை அடிக்கு கிரில் கம்பி அமைக்க வேண்டும். அதேபோல கம்பிகளுக்கு இடையே இடைவெளி அதிகம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்," என்றார்.


"பால்கனிக்கு செல்லும் கதவுகளை உள் பக்கத்தில் இருந்து மட்டுமே பூட்டும் வசதியுடன் அமைக்க வேண்டும். இல்லையென்றால் குழந்தைகள் தவறுதலாகத் தங்களை வெளியே வைத்து பூட்டிக் கொள்ளும் ஆபத்து உள்ளது" என்றும் தெரிவித்தார்.


ஆனால் இந்தக் கட்டுமானங்கள் அனைத்தும் தனிநபர்கள் தேவையின் அடிப்படையிலேயே செய்யப்படும் என்றும், வெகுசிலர் மட்டுமே இது போல இப்போது கேட்பதாகவும் கூறினார்.


அரசின் சார்பாக வழிகாட்டுதல் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும்போது, குழந்தைகளுக்காக விளையாட்டுப் பூங்கா அமைக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வீடுகளை எப்படி அமைக்க வேண்டும் என்ற வழிமுறை ஏதுமில்லை," என்று தெரிவித்தார்.


வீடுகளை குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் பாதுகாப்பாக அமைப்பதே 'Child Proof homes'. இந்த வழக்கம் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளில் பரவலாகக் காணப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இது தொடக்க நிலையிலேயே உள்ளது என்கிறார் மும்பையைச் சேர்ந்த குழந்தைகள் பாதுகாப்பு நிபுணரான ரச்சிதா அகர்வால்.


வீடுகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான பொருட்களை வடிவமைத்து விற்பனை செய்து வரும் ரச்சிதா, வீடுகளை குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் பாதுகாப்பானதாக மறுகட்டமைப்பு செய்வதற்கான ஆலோசகராகவும் செயல்படுகிறார்.


இவர் நடத்தும் நிறுவனத்தின் இணைய தளத்தில் குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் வீடுகளை எப்படி மாற்றுவது எனப் பல தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.


வீடுகளில் உள்ள கட்டில், மேசை உள்ளிட்டவற்றின் மூலைகளில் குழந்தைகள் மோதிக் கொள்ளாமல் இருக்க அந்த இடங்களை ரப்பர் துண்டுகள் கொண்டு மூடி வைக்கவேண்டும்.


கதவுகள் தானாக மூடிக் கொள்வதைத் தடுக்க இடையில் ஒரு தடுப்பு போன்ற ஒன்றை வைத்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.


கதவுகளில் உள்ள கைப்பிடிகள் உதவியுடன் குழந்தைகள் தாழிட்டுக் கொள்ளாமல் இருக்க அவற்றை உறை கொண்டு மூடி வைக்க வேண்டும்.


மின்சார ஸ்விட்ச்களை டம்மி பிளக் கொண்டு மூடி வைக்க வேண்டும். இதன்மூலம் குழந்தைகள் அதில் கை வைத்து விளையாடுவதைத் தவிர்க்க முடியும்.


கதவு இடுக்குகளில் கையை நசுக்கிக் கொள்ளாமல் இருக்க, அந்த இடங்களை பிளாஸ்டிக் போர்டு கொண்டு மூடி வைக்க வேண்டும்.


கட்டிலை ஜன்னலை ஒட்டிப் போடக்கூடாது, அப்படி அமைத்தால் கட்டில் மீது ஏறி ஜன்னலை குழந்தைகளால் எளிதாக திறக்க முடியும்.

பெண்கள் பொதுவெளியில் மேலாடையின்றி குளிக்க பெர்லின் அனுமதி: ஜெர்மன் மக்கள் நிர்வாணமாக இருப்பதை விரும்புவது ஏன்?


வீடுகளில் ஏற்படும் சிறு சிறு விபத்துகளில் இருந்து குழந்தைகளை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என குழந்தைகள் நல மருத்துவர் ஷோபனா பிபிசி தமிழிடம் சில ஆலோசனைகளைப் பகிர்ந்து கொண்டார்.


கட்டிலில் இருந்து குழந்தைகள் விழாமல் இருக்க, அவர்கள் நடக்கத் தொடங்கும் வரை, தரையில் மெத்தை விரித்து படுக்க வைக்கலாம்.


கட்டிலில் படுக்க வைத்தால் சுற்றிலும், கம்பி போன்ற தடுப்பு அமைப்பதன் மூலம் உருண்டு விழுவதைத் தவிர்க்க முடியும்.


நடக்கத் தொடங்கும் வயதில் தடுமாறி மேசைகளில் முனைகளில் மோதி நெற்றியில் காயம் ஏற்படக்கூடும். இதைத் தவிர்க்க edge covers பயன்படுத்தி மேசைகளின் முனைகளை மூடி வைக்க வேண்டும்.


சமையலறைக்குள் குழந்தைகள் நுழைவதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும். அவர்களைத் தடுக்கும் வகையில் சிறிய கேட் போன்ற அமைப்பை வீட்டில் ஏற்படுத்திக் கொள்ளலாம்.


படிகளை குழந்தைகள் தனியாகப் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. பெரியவர்கள் துணையுடன் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.


பால்கனி, கட்டில், படிக்கட்டு போன்ற இடங்களில் அமைக்கும் கிரில் கம்பிகளில் அதிக இடைவெளி இல்லாமல், வலை போன்ற அமைப்பில் அதை அமைக்க வேண்டும்.


சூடான பொருட்கள், கூர்மையான பொருட்களை குழந்தைகளுக்கு எட்டும் தூரத்தில் வைக்கக்கூடாது. அவற்றை முடிந்தவரை மேசையின் நடுப்பகுதியில் வைக்க வேண்டும்.


குளியலறை, கழிவறைகளின் கதவுகள் எப்போதும் மூடியிருக்க வேண்டும்.


பயன்படுத்திய நேரம் போக எப்போதும் வாளியில் உள்ள தண்ணீரை கீழே ஊற்றிவிட வேண்டும். வாளியில் தண்ணீர் இருந்தால் குழந்தைகள் அதில் மூழ்க வாய்ப்புள்ளது.


கழிவறைகளை சுத்தம் செய்யும் பினாயில் உள்ளிட்ட திரவங்களை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்க வேண்டும். மேலும் அவற்றைப் பயன்படுத்திய குளிர்பான பாட்டில்களில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.


தொடர்ந்து பேசிய மருத்துவர் ஷோபனா, "குழந்தைகளைப் பாதுகாக்கும் பல பொருட்கள் இப்போது இணையத்தில் பரவலாக விற்பனைக்கு உள்ளன. நகரங்களில் குடும்பத்தினர் துணையின்றி தனியாக வசிக்கும் பெற்றோர்கள் இப்போது குழந்தைகளுக்குப் பாதுகாப்பாகத் தங்கள் வீடுகள் இருக்க வேண்டும் எனக் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். இது ஆரோக்கியமான போக்கு," என்றார்.


BBC

No comments

Powered by Blogger.