என்னைக் கடத்தி படுகொலை செய்வதே நோக்கம்: இம்ரான் கான் குற்றச்சாட்டு
பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் இருந்தபோது வெளிநாட்டுப் பயணத்தில் முக்கியப் பிரமுகரிடமிருந்து பெற்ற பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் தனது சொந்த கணக்கில் சேர்ந்ததாக பாகிஸ்தான் அரசு குற்றம் சுமத்தியது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. எனினும், இந்தக் குற்றச்சாட்டை இம்ரான் கான் திட்டவட்டமாக மறுத்தார்.
இந்த நிலையில், வழக்கில் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் இம்ரான் கானை கைது செய்ய பாகிஸ்தான் போலீஸார் இன்று அவரது இல்லம் சென்றனர். இதனைத் தொடர்ந்து இம்ரான் கான் இல்லத்தை அவரது ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.
மேலும், கூட்டத்தை கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி தடியடி நடத்தியதைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. இதனைத் தொடர்ந்து போலீஸார் அங்கிருந்து வெளியேறினர். போலீஸார் வெளியேறியதைத் தொடர்ந்து பிடிஐ கட்சி ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ட்விட்டரில் வீடியோ பதிவிட்டு இம்ரான் கான் கூறியது: “நான் இந்த நாட்டு மக்களுக்கு ஒன்றைக் கூறி கொள்கிறேன். அவர்கள் மீண்டும் என்னை நோக்கி வருவார்கள், அவர்கள் எங்கள் மக்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசுவார்கள் , பிற பொருட்களை கொண்டு தாக்குவார்கள்... ஆனால், அவ்வாறு செய்வதற்கு அவர்களிடம் எந்த நியாயமும் இல்லை என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். என்னைக் கடத்தி படுகொலை செய்வதே பாகிஸ்தான் போலீஸின் நோக்கம்” என்று தெரிவித்தார்.
Post a Comment