Header Ads



இலங்கை தொடர்பான முக்கிய குழு முன்வைத்துள்ள அறிக்கை


 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான முக்கிய குழு தமது அறிக்கையை முன்வைத்துள்ளது.


பிரித்தானியாவை தலைமையாகக் கொண்ட இந்தக்குழுவில், கனடா, மலாவி, மொண்டெனேகுரோ, வடக்கு மாசிடோனியா மற்றும் அமெரிக்கா ஆகியன உள்ளடங்கியுள்ளன.


இந்த அறிக்கையின்படி, இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான சமீபத்திய உறுதிமொழிகளைத் தாம் வரவேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அமைதியான போராட்டங்களுக்குக் கடுமையான பதில்கள் குறித்த தமது அதிருப்தி அப்படியே இருப்பதாக முக்கிய குழு குறிப்பிட்டுள்ளது.


அமைதியான முறையில் ஒன்றுகூடல் மற்றும் ஒன்றுபடுவதற்கான சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமைகளை இலங்கை பாதுகாக்க வேண்டும். போராட்டம் தொடர்பான எந்த வன்முறைக்கும் பொறுப்புக் கூற வேண்டும். மனித உரிமைகளின் பாதுகாப்பை ஊக்குவிப்பதில் குடியியல் சமூகம் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.


மேலும் எந்தவொரு எதிர்கால சட்டத்தின் மூலமாகவும் குடியியல் சமூகத்தின் முக்கியமான பணிக்கான இடத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைத் தாம் வலியுறுத்துவதாக இலங்கை தொடர்பான முக்கிய குழு தெரிவித்துள்ளது.


சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துதல் மற்றும் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் உணரப்படவேண்டும். இதில் நிறுவனங்கள் மற்றும் நிர்வாக அமைப்புகளின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது உட்பட இலங்கையர்களின் நம்பிக்கையைப் பேணுவதற்கு முக்கியமாகத் தேர்தல் முறைமையும் அடங்கும் என்றும் முக்கிய குழு குறிப்பிட்டுள்ளது.


நீண்ட காலமாக இருந்து வரும் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளல் மற்றும் ஊழலுக்குத் தீர்வு காணுமாறு இலங்கை அதிகாரிகளைத் தாம் வலியுறுத்துவதாகவும் அந்த குழு தெரிவித்துள்ளது.


இலங்கை அரசாங்கம் செப்டெம்பர் மாதம் சபைக்கு வழங்கிய உறுதிமொழிகளைக் குறிப்பிட்டுள்ள, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான முக்கிய குழு, அனைத்து சமூகங்களுக்கும் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் என்ற இலக்குடன், உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துதல் உள்ளிட்ட நிலைமாறு கால நீதியின் முக்கியத்துவத்தைத் தாம் வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளது.


பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக இலங்கையின் சர்வதேசக் கடப்பாடுகளுடன் ஒத்துப்போகும் சட்டத்தைக் கொண்டு வருவதன் முக்கியத்துவத்தையும் அந்த குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அதேநேரம் உயர்ஸ்தானிகர் மற்றும் அவரது அலுவலகத்துடன் இணைந்து பணியாற்றுமாறு முக்கிய குழு இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.