Header Ads



இம்ரான் கான் தலைமறைவா..?


பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்து வந்த அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான், பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அடுத்து பதவி விலகினார். 


தனது ஆட்சிக்காலத்தில் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு பல்வேறு நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றது தொடர்பாக பெடரல் ஏஜென்சி நடத்திய விசாரணையில் 10-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் துவங்கி வெளிநாட்டு நிதி பெற்றது தெரியவந்தது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 


இதையடுத்து தேர்தல் ஆணைய அலுவலகம் முன் இம்ரான் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இது தொடர்பான வழக்கில் இம்ரான் கான் மீது வழக்குப்பதியப்பட்டு எந்நேரமும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாயின. 


 இந்த நிலையில் இம்ரான்கான், 'தோஷகானா' எனப்படும் மாநில டெபாசிட்டரியில் இருந்து பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசுகளை சட்டவிரோதமாக விற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து வந்த விருந்தினர்கள் பரிசளித்த மூன்று விலையுயர்ந்த கைக்கடிகாரங்களை விற்றதன் மூலம் அவர் 36 மில்லியன் ரூபாய் சம்பாதித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு பதிலளித்த இம்ரான்கான், 21.56 மில்லியன் ரூபாய் செலுத்தி அரச கருவூலத்தில் இருந்து வாங்கிய அன்பளிப்பை விற்று 58 மில்லியன் ரூபாய் சம்பாதித்ததாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளார். 


மேலும் அவர், பரிசுகள் என்னுடையது, எனவே அவற்றை என்ன செய்தேன் என்பது எனது விருப்பம் என்று கூறினார். 


 நிலையில் சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகத் தவறியதால் கோர்ட்டு அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டை பிறப்பித்தது. இதையடுத்து இன்று கைது வாரண்டுடன் இம்ரான்கானை கைது செய்த இஸ்லாமாபாத் போலீசார் லாகூரில் உள்ள ஜமான் பார்க் இல்லத்திற்கு வந்தனர். 


ஆனால் அவர்கள் வந்தபோது இம்ரான்கான் வீட்டில் இல்லை. எனவே அவரை கைது செய்ய முடியவில்லை. அவரது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கட்சித் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் இல்லத்திற்கு வெளியே கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. இம்ரான்கானுக்கு எதிரான காவல்துறை நடவடிக்கையை 'நீதியின் கேலிக்கூத்து' என்று அவரது கட்சி கூறியுள்ளது. மேலும் தற்போதைய அரசு தேர்தலை தாமதப்படுத்துவதற்காக சட்டம் ஒழுங்கு சூழ்நிலையை உருவாக்குவதாக குற்றம் சாட்டியுள்ளது. "இம்ரான் கானைக் கைது செய்வதற்கான எந்தவொரு முயற்சியும் நிலைமையை மோசமாக்கும். இந்த திறமையற்ற மற்றும் பாகிஸ்தான் எதிர்ப்பு அரசாங்கத்தை நான் எச்சரிக்க விரும்புகிறேன், பாகிஸ்தானை மேலும் நெருக்கடிக்குள் தள்ள வேண்டாம்" என்று அக்கட்சியின் துணைத்தலைவர் சவுத்ரி கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.