Header Ads



முஸ்லிம்களிடமுள்ள அச்சத்தை அகற்ற வேண்டும் - இம்தியாஸ் Mp


களுத்தறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான ஒரு நாள் தலைமைத்துவ மற்றும் திறன் விருத்தி செயலமர்வு மாவட்டத் தலைவர் எம் எம் எம் ஜௌபர் தலைமையில்  கொழும்பு ஸம் ஸம் நிறுவன கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.


இலங்கைக்கான பலஸ்தீன நாட்டு தூதுவர் கலாநிதி ஸுஹைர் எம் எச் டார்ட் செய்ட் பிரதம அதிதியாகவும்,  பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.


இச்செயலமர்வில் முஸ்லிம் லீக்கின் வரலாறு தொடர்பாக அதன் முன்னாள் தலைவர்களில் ஒருவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என் எம் அமீன் குறிப்புரை நிகழ்த்தியதோடு, ஊக்குவிப்பு மனித வள மேம்பாட்டு பேச்சாளர் அஷ்ஷெய்க் யாஸிர் லாஹிர் நளீமி, கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை பேராசிரியர் கலாநிதி எம் டி எம் மஹீஸ் மற்றும் பாராளுமன்றத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் எம் அஜிவதீன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.


களுத்துறை மாவட்ட சமூகப் பிரச்சினைகளை அடையாளம் கண்டு ஆறு மாதங்களுக்குட்பட்ட நான்கு சமூக குழு ஆய்வு செயற்திட்டமும்(Community Need Assessment) இதன் போது வளவாளர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டன. 


களுத்துறை மாவட்டத்தில் சகல பிரதேச செயலகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்கற்கைகளில் ஈடுபடும் இளைஞர் யுவதிகள் இதில் பங்கேற்றிருந்தனர்.


இந்நிகழ்வில் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்கள் ஆற்றிய உரையின் சாரம்சம்;


1977 – 1979 ஆம் ஆண்டு காலப்குதியில் மக்கள் விடுதலை முன்னணி அடிமட்ட அரசியல் கட்சியாக செயற்பட்டு வந்தது. எமது இளைஞர் சமூகம் அதுபோன்ற அடிப்படைவாத, வன்முறை செயற்பாடுகளுக்கு செல்லாமல் தவிர்ப்பதற்காக எமது தலைவர்கள் முஸ்லிம் சந்ததியினரின் எதிர்காலம் பற்றி சிந்தித்து இந்த முஸ்லிம் லீக் திட்டத்தை ஆரம்பித்தார்கள்.


சரியான விடயங்களைச் செய்தால் சமூகம் எம்மை நம்பும். நம்பிக்கையை கொடுத்தால் சமூகம் எமக்கு உதவும். சமூகத்தின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டுமெனில் சரியான நேர்மையான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அனைவருக்கும் வாயப்பளிக்க வேண்டும். சகலரும் தலைவர்களாக வேண்டும்.நான் இல்லை நாம் என்ற கருத்தோட்டம் சகலரின் மனதிலும் தோற்றம் பெற வேண்டும்.


எமது எதிர்காலத்தை நாங்களே திட்டமிட வேண்டும். அந்த திட்டத்தினூடாக முன்னோக்கிச் செல்ல வேண்டும். முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களுக்கு சுமையான சமூகம் இல்லை. சொந்த உழைப்பில் நிலைத்திருக்க கூடிய சமூகத்தை உருவாக்க நாம் எமது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். நூறு வீதம் சகல திட்டங்களையும் செய்ய முடியாவிட்டாலும், ஒரு அடியாவது முன்வைக்க வேண்டும். ஆனால், இதற்கான வெற்றி கிடைக்கும் போது அரசியல் கட்சிகள் உள்ளிட்ட வேறு எவரும் அதில் பங்கெடுக்க முடியாது.


ஒவ்வொரு கிராமத்திற்கும் திட்டமிடல் இருக்க வேண்டும், தேவைப்பாடுகள் இருக்கும், தனித்துவமான பிரச்சினைகள் இருக்கும், முன்னுரிமைகள் இருக்கும் இவற்றை நாம் அடையாளம் கண்டு வகுத்து முன்னோக்கி பயணிக்க வேண்டும். முஸ்லிம் லீக்குக்கு வரும் போது தத்தமது அரசியல் கட்சிகள், இஸ்லாமிய இயக்கங்கள் உட்பட வேறு சிந்தனை போக்குகளை விடுத்து, நாம் அனைவரும் முஸ்லிம்கள் என்ற பொதுவான அடையாளத்துடன் வர வேண்டும் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.


முஸ்லிம் லீக்கின் முதலாவது மகளிர் பிரிவை களுத்தறையிலிருந்து ஆரம்பிப்போம்.


இன்று இங்கு வந்திருக்கின்றவர்கள் 35 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களில் உள்ளங்களில் இன்று குடியிருப்பது அச்சம் நிறைந்த ஒரு வகையான சூழல். அதனை அகற்ற வேண்டும். அச்சமின்றி பேசுங்கள், செயல்படுங்கள்,இலங்கை  முஸ்லிம்களுக்கு தனித்துவமான அடையளம் உண்டு. அதை நாம் வெளிப்படுத்த வேண்டும். அச்ச உணர்வை அகற்றி நாம் மீண்டும் இயல்பு நிலைக்குள் பிரவேசிக்க வேண்டும். ஜனநாயக சூழலை இந்நாட்டில் ஏற்படுத்த வேண்டும்.இதன் மூலம் தான் இந்நாட்டில் சிறந்த தலைமைத்துவங்களை உருவாக்க முடியும். இதனை அகற்றுவதற்கு நாங்கள் ஜனநாயக ரீதியான வழிமுறைகளையே கையாள வேண்டியுள்ளது.


நாங்கள் 1968 ஆம் ஆண்டு இந்த அமைப்பை ஆரம்பிக்கின்ற பொழுது மக்கள் விடுதலை முன்னணி உடைய அச்சுறுத்தல் காணப்பட்டது.அது குறித்து பிரஸ்தாபித்தோம். இன்று இளைஞர்கள் மத்தியில் குடிகொண்டுள்ள அச்ச உணர்வு   குறித்து பிரஸ்தாபிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.இது ஜனநாயக நாடு.இது ஏகாதிபத்திய நாடு அல்ல.எனவே ஜனநாயக நாட்டில் சகலரும் சம உரிமை பெற்று வாழ வேண்டும் என்கின்ற தோற்றபாட்டை நாம் ஏற்படுத்த வேண்டும்.ஏனையவர்களைப் போல் நாமும் நாட்டுக்கு பங்களிக்க முடியுமானவர்கள் என்பதை கான்பிக்க வேண்டும். எமது தனித்துவத்தை பாதுகாத்துக் கொண்டு எம்மால் இந்நாட்டுக்காக பனியாற்ற முடியும். 


நாம் இந் நாட்டுக்கு நாங்கள் பாரமானவர்கள் அல்லர். இந்நாட்டில் வாழ்வதற்கான சகல உரிமைகளையும் கொண்டவர்கள்.அதேபோன்று இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு முன்மாதிரியான ஒரு சமூகமாக நாங்கள் காட்சி அளிக்க வேண்டும். அதற்கான அடித்தளத்தை இட வேண்டும். அதனை ஏனைய சமூகங்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு நாங்கள் செயல்படுத்த வேண்டும்.


இலங்கையின் சுதந்திரத்தோடு மலை நாட்டு மக்களது காணிகள் கைப்பற்றப்பட்டன. அவற்றிற்கு எதிராக போராடினார்கள். எனவே வெள்ளையர்கள் அவர்களுடைய காணிகளை ஆதிக்கம் செலுத்தி வைத்திருந்தார்கள். அந்த வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரத்திற்கு பின்னர் காணிகளை விடுவிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. கமிஷன்கள் உருவாக்கப்பட்டன.


இது இவர்களுக்கு மட்டும் இந்த நாட்டில் இருக்கின்ற பிரச்சினைகள் அல்ல. முஸ்லிம்களுடைய காணிகளும் சில போதும் கையகப்படுத்தப்பட்டதையும் வரலாறுகள் கூறிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக இலங்கையில் கத்தோலிக்க பாடசாலைகளில் கல்வி உயர்நிலையில் காணப்பட்டன. அப்பாடசாலையில் கற்றவர்கள் பல்வேறு உயர் பதவிகள் பெற்றுச் சென்றனர்.


அதனை அவதானித்த சிங்கள தலைவர்கள் தங்களுடைய சமூகம் சார்ந்தவர்களும் அப்படியான பதவிகளுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக சிங்கள பாடசாலைகளை ஆரம்பித்தார்கள்.இதில் ராகுல,ஆனந்த,நாலந்த போன்ற பாடசாலைகளை உதாரணங்களாக கூறலாம்.இதனை அவதானித்த டீ பி ஜாயா உட்பட முஸ்லிம் தலைவர்களும் அப்போதைய நிலையில் முஸ்லிம் பாடசாலைகளின் அவசியத்தை உணர்ந்து முஸ்லிம் பாடசாலைகளை உருவாக்கினார்கள்.அந்த வகையிலேயே நாடு தழுவிய  முறையில் சாஹிரா கல்லூரிகள் உருவாக்கப்பட்டன.


இவ்வாறு உருவாக்கப்பட்ட பாடசாலைகளில் தரமான கல்விகள் வழங்கப்பட்டன.புதிய கற்பிதங்கள் வழங்கப்படன. நவீன கல்வி போதிக்கப்பட்டன.


அந்த கல்விகள் தங்களுடைய அடையாளத்தை இல்லாமல் ஆக்காத நிலையில் நடத்தி வரப்பட்டதை நாம் இங்கு குறிப்பிட வேண்டும். எமது தனித்துவம் விட்டுச் செல்லாமல் இருப்பதே இதன் நோக்கமாக அமைந்திருந்தது.அவ்வாறு உருவாக்கப்பட்ட பாடசாலைகள் இன்றும் தரமான கல்விகளை வழங்கி வருவதை நாம் காணுகிறோம்.


முஸ்லிம் சமூகத்தில் யுகத்திற்கு ஏற்ற விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட வேண்டும்.அப்போதே எமது இருப்பு நிலைபெறும்.காலத்திற்கேற்ற புதிய தலைமுறைகள் இதிலிருந்தே தோற்றம் பெறும். எனவே முஸ்லிம் இளைஞர்கள் தமது அச்ச உணர்வுகளை விடுத்து இந்நாட்டில் ஜனநாயகப் பிரவேசங்களுக்கு நுழைய வேண்டும்.


முஸ்லிம் லீக் பாராளுமன்றத்தில் கூட்டிணைக்கப்பட்ட ஓர் அமைப்பு.இந்த முஸ்லிம் லீக்கை இந்நாட்டு இளைஞர் யுவதிகள் நன்கு பயன்படுத்துங்கள்.இந்நாட்டில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட டீ.பி ஜாயா போன்றவர்கள் இதனை ஆரம்பித்தனர்.இதில் பதியுதீன் மஹ்மூத் போன்ற பலர்,பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சமூகத்திற்காக இதில் ஒன்றிணைந்து செயற்பட்டனர்.


முஸ்லிம் லீக் இந்நாட்டு முஸ்லிம்களுக்குரிய ஜனநாயக கட்டமைப்பு.எமது தனித்துவத்தோடு,அதே போன்று காலத்திற்கேற்ற புதிய சவால்களுக்கு  முகம் கொடுத்து அச்சமின்றி சமூக இயக்கவியலை நெறிப்படுத்த இதில் இணைந்து கொண்டு தமது பங்களிப்பை வழங்குமாறும் அழைப்பு விடுத்தார்.

No comments

Powered by Blogger.