காதி நீதிவான் மீது தாக்குதல்: யார் கூறுவது உண்மை..? புனித ரமழான் மாதத்தில் இது தேவையா..??
- ஏ.ஆர்.ஏ.பரீல் -
நாட்டில் சட்டமியற்றும் உயரிய சபையின் உறுப்பினர் ஒருவருக்கும், நீதி வழங்கும் நீதிவான் ஒருவருக்கும் இடையில் நடந்த சம்பவம் ஒன்று சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
காதி நீதிவான் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரினால் வீட்டுக்கு அழைத்துத் தாக்கப்பட்டுள்ளார். புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் வீட்டுக்கு அழைத்து தன்னை தலையில் தாக்கி காயங்களுக்குள்ளாகியதாக புத்தளம் நீதிப்பிரிவுக்கு புதிய காதி நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கும் எம்.ஆர்.மொஹமட் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை முன்வைத்துள்ளார். இதேவேளை காதி நீதிவானாக நியமிக்கப்பட்டிருக்கும் எம்.ஆர்.மொஹமட் தன்னை தாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமும் முறைப்பாடொன்றினைப் பதிவுசெய்துள்ளார்.
இந்தச் சம்பவம் பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் மகளினது வீட்டில் இடம்பெற்றுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் வீட்டுக்கு அழைத்து வீட்டின் கதவினை தாழிட்டு அவரும் அவரது மருமகனும் சேர்ந்து தாக்கி காயங்களுக்குள்ளாக்கியதாக காதி நீதிவான் பொலிஸில் முறைப்பாடு செய்து புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி பெற்றார். இந்நிலையில் காதி நீதிவான் தன்னைத் தாக்கியதாகவும், அதனால் தனது நெஞ்சு வலிப்பதாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்ததுடன் தான் வைத்தியசாலையில் அனுமதி பெறப்போவதாகவும் கூறி பொலிஸ் நிலையத்திலிருந்தும் அலி சப்ரி ரஹீம் வெளியேறிச் சென்றுள்ளார்.
நடந்தது என்ன?
இச்சம்பவம் கடந்த 26 ஆம் திகதி இரவு 10 மணியளவில் பாரா-ளுமன்ற உறுப்பினரின் மகளது வீட்டில் இடம் பெற்றுள்ளது. எம்.ஆர்.மொஹமட் புத்தளம் நீதிப்பிரிவின் காதி நீதிபதியாக கடந்த முதலாம் திகதி முதல் நியமனம் பெற்றார். புத்தளம் மாவட்டத்தின் காதி நீதிபதியாக நியமிக்கப்பட்டதும் அவர் தனது பணியினை தொடர்வதற்காக பிரதேச பள்ளிவாசல், உலமா சபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் கோரினார்.
இதன் அடிப்படையில் கடந்த 26 ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமை தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் இரவு 10 மணிக்கு வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அழைப்பின்படி அவர் மேலும் இருவருடன் அலிசப்ரி ரஹீமின் மகளது வீட்டுக்குக் சென்றார். அங்கு அவர் மாத்திரம் வீட்டுக்குள் அழைக்கப்பட்டார்.
காதி நீதிவான் எம்.ஆர்.மொஹமட் சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு பின்வருமாறு தெரிவித்தார்.
‘‘நான் காதி நீதிபதியாக நியமனம் பெற்றதும் கடந்த 15 ஆம் திகதி ஆரம்ப நிகழ்வொன்றினை நடத்தினேன். அப்போது மக்களிடம் இருந்து எனக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதன் எதிர்வலையே இந்தச் சம்பவம் என்று நினைக்கிறேன்.
நான் கடந்த 26 ஆம் திகதி காதி நீதிமன்றத்தின் துப்புரவு பணிகளில் ஈடுபட்டேன். எனது வருகைக்கு பின்னால் புத்தளம் காதி நீதிமன்றம் தொடர்பில் முன்பிருந்த தவறான கருத்துகள் மாற்றம் பெற்றன. நல்லபிப்பிராயம் ஏற்பட்டது. எனது புகழ் பரவியதையடுத்து அலி சப்ரிக்கு பிடிக்கவில்லை. அன்று 26 ஆம் திகதி அவரை சந்தித்து கலந்துரையாட தொலைபேசி மூலம் நேரம் ஒதுக்கி இரவு 10 மணிக்குச் சென்றேன். என்னுடன் மேலும் இருவர் அங்கு வந்தனர்.
அன்று என்னுடன் சென்ற இருவரை வெளியே வைத்துவிட்டு என்னை மாத்திரம் உள்ளே அழைத்து கதவை மூடினார். கதவை மூடியவிதத்தில் ஏதோ நடக்கப்போகிறது என்று அறிந்து கொண்டேன். பாராளுமன்ற உறுப்பினர் சில கேள்விகளைக் கேட்டார். காதி நீதிபதியாவதற்கு உமக்கு என்ன தகுதி இருக்கிறது? எப்படி இந்தப் பதவியை எடுத்தீர்? என்று கேட்டார்.
நான் பலதார மணம் செய்த ஒருவன். இந்நிலையில் தேவையில்லாத கதைகளை கதைத்தார். பெரியபள்ளி நிர்வாகம் என்னை இந்த ஊரிலிருந்து அடித்து விரட்டும்படி கூறியிருப்பதாகவும் கூறினார். நான் அவரது ஒவ்வொரு கேள்விக்கும் அறிவுபூர்வமாகப் பதில் வழங்கினேன்.
காதி நீதிபதி பதவியைப் பெறுவதற்கு நான் அரசியல் ஆதரவு பெறவில்லை. இந்த சம்பவத்தின் பின்னால் அடாவடித்தனமும், சில மெளலவிமார்களும், மாபியாக்களும், அரசியலுமே இருக்கிறது. காதி நீதிபதி பதவியை செய்யவிடாது இவர்கள் குழப்புகிறார்கள். இதுவே அடிதடியில் முடிந்தது.
பாராளுமன்ற உறுப்பினர் என்னை புத்தளத்திலிருந்து வெளியேறுமாறு கூறியிருந்தார். மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. காதி நீதிபதி பதவியை தொடரக்கூடாது. இங்கிருந்து வெளியேறி விடு என்று அச்சுறுத்தினார்.
நான் வெலிகமையைச் சேர்ந்தவன். பிறந்த இடம் அது. புத்தளத்திலே வசிக்கிறேன். நானே அவருக்கு முதலில் பேசினேன். அவர்தான் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். நோன்பு திறப்பதற்கு முன்பே போன் பண்ணினேன்.
புத்தளம் பள்ளிவாசல் என்னை காதி நீதிவானாக நியமிக்காது வேறொருவரை நியமிக்கும் படி பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எதற்காக பள்ளிவாசல் நிர்வாகம் கடிதத் தலைப்பினை உபயோகப்படுத்த வேண்டும் என்பது அவர்களுக்கே தெரியாது. பாராளுமன்ற உறுப்பினருக்கு பள்ளிவாசல் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் பொய்யானவை.
கடிதத்தில், என்மீது பிள்ளை தாபரிப்பு வழக்கொன்று தொடரப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அப்படி ஒரு வழக்கே இல்லை. இது பொய்யான தகவலாகும்.
புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனது கடந்த அங்குரார்ப்பண நிகழ்வின் பின்பு பள்ளி நிர்வாகமும் ஜம்இய்யத்துல் உலமா சபையும் என்னுடன் கூட்டம் ஒன்றினை நடாத்தியது. இந்தப் பதவியை எவ்வாறு செய்யப்போகிறீர்கள்? என்று வினவினார்கள். சுமுகமாக கலந்துரையாடலொன்று நடந்தது. ஆனால் இதற்கு முன்பு பள்ளிவாசல் நிர்வாகமும் என்னை நியமிக்க வேண்டாம் என்று கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்கள். இது முனாபிக்தனமான விடயமாகும். என்னை நியமிக்க வேண்டாமெனக் கோருவதற்கு பள்ளிவாசல் நிர்வாகம் கடிதத் தலைப்பை பயன்படுத்த முடியாது.
என்னிடம் அறிவுப்பலம் இருக்கிறது. பள்ளிநிர்வாகம் எதிர்ப்பதற்கு காரணம் என்னவென்று தெரியாது. எனது கருத்து இஸ்லாத்துக்கு மாற்றமில்லை.
பாராளுமன்ற உறுப்பினர் அடித்த அடியில் எனது கண்ணுக்குப் பக்கத்திலிருந்து வழிந்த இரத்தம் முகம் வழியாக ஓடியது.
பாராளுமன்ற உறுப்பினருடன் புத்தளம் மக்களுக்கு முன்னிலையில் இது தொடர்பில் எந்த இடத்திலும் நேரடி விவாதத்துக்கு தயாராக இருக்கிறேன். அவர் கேட்ட கேள்விகள் தரமற்றவை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு தான் தாக்கப்பட்டமை தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழு, காதி நீதிபதிகள் போரம், சி.ஐ.டி., மனித உரிமைகள் ஆணைக்குழு என்பவற்றுக்கு முறையிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மொஹிதீன் ஜும்ஆ
மஸ்ஜித் (பெரிய பள்ளி)
புத்தளம் பெரிய பள்ளிவாசலான மொஹிதீன் ஜும் ஆ மஸ்ஜித் தற்போது காதி நீதிவானாக நியமிக்கப்பட்டிருக்கும் எம்.ஆர்.முஹமட்டை புத்தளம் வலய காதிநீதிபதியாக நியமிக்கக் கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமுக்கு கடந்த 1ஆம் திகதி கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
எம். ஆர். மொஹமட் சிலாபம் பகுதியில் இரண்டாம் விவாகம் செய்துள்ளார். அவர் மாத்தறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். காதி நீதிமன்றில் இவருக்கு எதிராக பிள்ளை தாபரிப்பு வழக்கொன்று நிலுவையில் உள்ளது. இவர் காதி நீதிபதியாக நியமிக்கப்பட்டால் இப்பதவியின் கெளரவத்துக்குப் பங்கம் ஏற்படும் எனவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இக்கடிதத்தை பள்ளிவாசல் நிர்வாக சபையின் உபதலைவர் ஏ.எம்.எம்.பஸால் அனுப்பி வைத்துள்ளார்.
நீதிச்சேவை ஆணைக்குழுவின்
செயலாளருக்கு கடிதம்
பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம், எம்.ஆர். மொஹமட்டை புத்தளம் வலய காதி நீதிபதியாக நியமிக்க வேண்டாம் என நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
கடிதத்தில் புத்தளம் பெரிய பள்ளிவாசல் தனக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் விபரங்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இக்கடிதம் கடந்த 5ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடிதத்தில் புத்தளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அனைத்து தகுதிகளையும் கொண்ட எம்.எஸ்.அப்துல் முஜீப் என்பவரை காதிநீதிபதியாக நியமிக்கும் படியும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும்
நீதியமைச்சருக்கும் கடிதம்
பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது போன்ற கடிதங்கள் ஜனாதிபதி மற்றும் நீதியமைச்சருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இக்கடிதங்கள் மூலமும் எம்.ஆர். மொஹமட் காதி நீதிபதியாக நியமிக்கப்படக் கூடாது என்ற கோரிக்கையே முன் வைக்கப்பட்டுள்ளது.
அலிசப்ரி ரஹீம் எம்.பியின் விளக்கம்
புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் சமூக வலைத்தள மொன்றுக்கு நடந்த சம்பவம் தொடர்பில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
‘காதிநீதிபதி நோன்பு திறக்கும் நேரத்தில் 6.15 மணிக்கு என்னை சந்திக்க வேண்டுமென போன் பண்ணினார். நான் ஜனாஸா வீட்டுக்குப் போகவேண்டியுள்ளது. இரவு 8.30 மணியளவில் வாருங்கள் என்றேன்.
வீட்டுக்கு வந்தார். என்ன விடயம்? என்று கேட்டேன். நான் காதிநீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளேன் என்றார். என்ன செய்ய வேண்டும்? என நான் கேட்டேன். ஒன்றும் செய்யத் தேவையில்லை என்றார். பின்பு அவரைப்பற்றி பெருமையாக கூறினார். கதைத்துக் கொண்டே இருந்தார். தான் பெரிய ஆள் என்றார். யாரினதும் உதவியைப் பெற்று பதவிக்கு வரவில்லை என்றார்.
நான் பொறுமையாக இருந்தேன். பின்பு உங்களுக்கு எதிராக முறைப்பாடு வந்திருக்கிறது என்று அவருக்கு நான் கூறினேன். நீங்கள் பலதார மணம் செய்திருக்கிறீர்கள் என்றேன். தான் விவாகரத்து பெற்றதன் பின்பே மறுமணம் செய்திருக்கிறேன் என்று பதிலளித்தார்.
நீங்கள் பதவிக்கு தகுதியானவர் இல்லை என பெரிய பள்ளி முறைப்பாடு செய்திருக்கிறது. அதற்குரிய நடவடிக்கை எடுத்துள்ளேன் என்றேன். ெபரிய பள்ளியிலிருந்து யார் முறைப்பாடு செய்தது என்று என்னிடம் கேட்டார். பெயரை கேட்டார். நிர்வாகம் என்றேன்.
பள்ளிவாசல் ஆட்களை இந்த இடத்தில் கூப்பிட்டு விசாரிக்க வேண்டுமென அடம் பிடித்தார். விசாரிப்பது எனது வேலையல்ல. முறைப்பாடு தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு எழுதியிருக்கிறேன். நீங்கள் தகுதியில்லாத ஒருவர் எனக் குறிப்பிட்டுள்ளேன்
உடனே விசாரிக்க வேண்டும் என்றார். அடம்பிடித்தார். உடனே வெளியில் இறங்கு என்றேன். அவர் வெளியே இறங்க மாட்டேன் என்றார். நீ மடையன் வெளியே போ என்றேன். அவர் என்னைத் தள்ளிவிட்டார். நான் எழுந்து அவரைத் தள்ளிவிட்டேன். இது தான் நடந்தது.
நானும் எனது மருமகனும் அவரை அடித்ததாகக் கூறுவதெல்லாம் பொய். அவர் யாரென்றே முன்பு எனக்குத் தெரியாது. காதி நியமனத்துக்கு நாம் வேறொருவரை சிபாரிசு செய்திருந்தோம்.
புத்தளம் பெரிய பள்ளிவாசலே இவர் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளது. இவர் தகுதியானவர் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
நகைப்புக்குள்ளாகியுள்ள முஸ்லிம் சமூகம்
முஸ்லிம் சமூகத்தில் காதி நீதிபதியும் மக்கள் பிரதிநிதியும் புனித ரமழான் தினத்தில் இவ்வாறு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டமை நகைப்புக்குரியதாகவுள்ளது.
ஏனைய சமூகங்களிடம் எமக்குத் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.எமக்குள் ஏற்படும் முரண்பாடுகளை நாம் பேச்சுவார்த்தைகள் மூலம் கலந்துரையாடியே தீர்வு பெற்றுக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து அடிதடியில் இறங்குவது ஒது போதும் அனுமதிக்க முடியாது.
சிகிச்சை பெற்று வெளியேறினார்
பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமினால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் கடந்த 26ஆம் திகதி அனுமதிக்கப்பட்டிருந்த காதி நீதிவான் எம்.ஆர்.மொஹமட் கடந்த 27ஆம் திகதி இரவு 7 மணியளவில் சிகிச்சையின் பின்பு அங்கிருந்தும் வெளியேறினார். பொலிஸ் அறிக்கை மற்றும் வைத்திய அறிக்கையைப் பெற்றுக் கொண்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.- Vidivelli
Post a Comment