இலங்கை பிக்குகளில் பின்னால் உள்ள, அந்நிய சக்தி - தமிழ்நாட்டு அரசியல்வாதி தெரிவிப்பு
அரசியலமைப்பின் 13ஆவது சீர்த்திருத்தத்தை நடைமுறைப்படுத்த முடியாது, அதனை எரிப்போம் என்று கூறும் பௌத்த துறவிகளின் பின்னால் ஏதோ ஒரு அந்நிய சக்தி இருக்கலாம் என இந்தியாவின் இந்து மக்கள் கட்சியின் நிறுவுனரும், அதன் தலைவருமான அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை இந்திய திருநாடு இலங்கையிடம் முன்வைத்திருக்கின்றது.
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், பாரத பிரதமர் நரேந்திர மோடி இவர்களெல்லாம் தொடர்ந்து இதனை வலியுறுத்தி வருகின்றார்கள்.
ஆனால், உடனடியாக இலங்கையில் அதற்கொரு நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. இங்கு இருக்கக் கூடிய பௌத்த துறவிகள் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த விட மாட்டோம் என தெரிவித்து இங்கிருக்கும் அரசியல் கட்சிகளுக்கு ஓர் அழுத்தத்தை பிறப்பிக்கின்றார்கள்.
சொல்லப்போனால் ஒட்டுமொத்த பௌத்த மக்களினுடைய பிரதிநிதிகள் அவர்கள் மட்டுமே அல்ல. அதாவது 13ஆவது சீர்த்திருத்தத்தை எரிக்கின்றேன் என்று சொல்பவர்கள் மட்டும் அல்ல. அவர்கள் வேறு ஏதோ அந்நிய சக்திகளால் தூண்டிவிடப்பட்டு இதனை செய்கின்றார்கள். இதற்குள் ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கின்றது.
உண்மையாக 13ஆவது திருத்தம் என்பது பௌத்தர்களுக்கு எதிரானதா என்று கேட்டால் கிடையாது. சிங்கள மக்களுக்கும் எதிரானது கிடையாது. இது ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளே ஒரு தீர்வு.
13ஆவது திருத்தம் வலியுறுத்தப்படுவது இன்று நேற்று அல்ல. ஜெயவர்த்தன அவர்கள் ராஜிவ் காந்தியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். இந்த ஒப்பந்தத்தில் இரண்டு நாட்டினுடைய பிரதிநிதிகள் கையெழுத்திட்டுள்ளனர்.
எனவே இதனை நடைமுறைப்படுத்த வேண்டியது இலங்கையினுடைய பொறுப்பாகும், சில மத சார்பானவர்கள் ஏதோ சொல்கின்றார்கள் என்பதற்காக அதனை நடைமுறைப்படுத்தாமல் தவிர்க்க முடியாது.
Post a Comment