Header Ads



சட்டத்துறையில் 50 வருடத்தைப் பூர்த்தி செய்த MM சுஹைருக்கு சட்டத்தரணிகள் சங்கம் பாராட்டு


சட்டத்துறையில் ஐம்பது வருடங்களைப் பூர்த்தி செய்தவர்களைக் கௌரவிக்கும் முகமாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்துபசார நிகழ்வு கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் ஓக் மண்டபத்தில் நடைபெற்றது.


சட்டத்துறையில் ஐம்பது அல்லது அதற்கு மேற்பட்ட வருடகாலங்களைப் பூர்த்தி செய்த 26 பேர் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர். சட்டத்துறையில் ஐம்பது வருடங்களைப் பூர்த்தி செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரியவினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். ஜூலியானா மார்கரெட் கொஸ்வத்த, வோல்டர் லெஸ்லி டி சில்வா, ரத்னசபாபதி ஆறுமுகம் ஜெகதீசன், உபாலி ஏ குணரத்ன பி.சி., கனகரத்தினம் கணேசயோகன், விஜய நிரஞ்சன் பெரேரா பிசி., வெர்ணன் மணிலால் பெர்ணான்டோ, நீதியரசர் ஜே.அசோக நிஹால் டி சில்வா பி.சி, டபிள்யு.டி.ஜே. செனவிரத்ன, நீதியரசர் டி.ஜே.டி.எஸ். பாலபட்டபெந்தி ஆகியோரும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.


சட்டத்துறையில் ஐம்பது வருடங்களைப் பூர்த்தி செய்துள்ள ஜனாதிபதி சட்டத்தரணி எம்எம் சுஹைர், 1972 மே 03 ஆம் திகதி அப்போதைய பிரதம நீதியரசர் எச்.என்.ஜி.பெர்ணான்டோ மற்றும் நீதியரசர் சி.பி.வல்கம்பாய முன்னிலையில் உயர் நீதிமன்ற வழக்குரைஞராக இணைந்து கொண்டார். 1972 ஆம் ஆண்டு மே 22 ஆம் திகதி இலங்கையின் முதலாவது குடியரசு யாப்பு பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் உயர்ந்த சட்டமாக மாறிய கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வாவினால் உருவாக்கப்பட்ட புதிய குடியரசு யாப்பின் கீழ் உபாலி குணரத்ன மற்றும் எம்.எம்.சுஹைர் ஆகியோர் சட்டத்தரணிகளாக சத்தியப்பிரமாணம் செய்த முதலாவது சட்டத்தரணிகள் ஆனார்கள்.


சுஹைர் இலங்கைச் சட்டக் கல்லூரியின் (1968-1970) பழைய மாணவராவார். இலங்கை சட்டக் கல்லூரியின் சிறந்த அதிபராக காலஞ்சென்ற ஆர்.கே.டப். குணசேகர அப்போது கடமையாற்றியிருந்தார். சட்டக் கல்லூரியில் அவர் ஆசிய பௌன்டேசனின் புலமைப் பரிசிலை வென்றார். அது 1968 – 70 வரையான அவரது சட்டக் கல்விக்கான செலவை ஈடு செய்வதாக அமைந்தது. 1970 இல் சட்டக் கல்லூரி மாணவர் ஒன்றியத்தின் பத்திரிகை ஆசிரியராகத் தெரிவாகியதோடு 1971 இல் சட்டக் கல்லூரி முஸ்லிம் மாணவர் மஜ்லிஸின் தலைவராகவும் தெரிவானார்.


வழக்கறிஞராக இருந்து பின்னர் பிரதம நீதியரசரான எஸ் சர்வானந்தா மற்றும் வழக்கறிஞராக இருந்து உச்ச நீதிமன்ற நீதியரசரான மால்கம் பெரேரா ஆகியோரிடம் பயிற்சி பெற்றார்.


2001 இல் ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமனம் பெற்ற சுஹைர், உச்ச நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் மூல நீதிமன்றங்களிலும் குற்றவியல் வழக்குகள், அடிப்படை உரிமை வழக்குகள் மற்றும் மனு விண்ணப்பங்கள் போன்ற அனைத்து வழக்குகளிலும் துடிப்புடன் செயலாற்றினார்.


1973 இல் சுஹைர் அரச வழக்கறிஞராக சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்தார். கடமையாற்றிய முதலாவது வருடத்திலேயே குற்றவியல் மேன்முறையீடொன்றுக்காக சுஹைர் வாதாடியதைக் கண்ட அப்போதைய சிரேஷ்ட அரச வழக்கறிஞர் நீதியரசர் பத்மநாதன் ராமநாதன், சுஹைரை சட்டமாஅதிபர் திணைக்களத்தில் இணைவதற்கு ஊக்குவித்தார். முதல் ஐந்து வருடங்களில் சிவில் தரப்பிலும் அடுத்த ஐந்து வருடங்களில் குற்றவியல் தரப்பிலுமாக பத்து வருடங்கள் அவர் அரசுக்காக சேவையாற்றினார். இலஞ்ச வழக்குகள், கொலை வழக்குகள் மற்றும் பயங்கரவாதத் தடுப்பு வழக்குகளிலும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததோடு குற்றவியல் மேன்முறையீடுகளிலும் அவர் அரசுக்காக ஆஜராகியிருக்கிறார். 1981 இல் சிரேஷ்ட அரச வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட சுஹைர், 1983 ஜூலைக் கலவரத்தைத் தொடர்ந்து 1983 இல் மீண்டும் அதிகாரபூர்வமற்ற மன்றுக்கு மீளழைக்கப்பட்டார்.


அதிகாரபூர்வமற்ற மன்றில் உச்ச நீதிமன்றத்தின் ரிட் மனுக்களையும் குற்றவியல் வழக்குகளையும் கையாள்வதில் அவர் விரிவான நடவடிக்கைகளை முன்னெடுத்தார். 1994 முதல் 2000 வரையான காலப்பகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அப்போதைய தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபினால் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மக்கள் கூட்டணி அரசாங்கத்தின் தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பல பாராளுமன்றக் குழுக்களிலும் அவர் சேவையாற்றினார்.


2001 ஜூலை 23 இல் முன்னாள் பிரதம நீதியரசர் எஸ் சர்வானந்தா தலைமையில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவினால் நியமிக்கப்பட்ட இன வன்முறை (1981-1984) தொடர்பிலான உண்மையைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான எஸ்.எஸ்.சகபந்து, எம்.எம். சுஹைர் ஆகியோரும் உள்ளடங்கியிருந்தனர். 1983 ஜூலை சிங்கள-தமிழ் கலவரத்தை விசாரித்த இந்த ஆணைக்குழு, அனைவரும் அறிந்த யாழ்ப்பாண பொது நூலகம் எரிப்பு (31/5/1981), யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழு தேர்தல்கள் ( 4/6/1981), இனக் கலவரங்கள் (23/7/1983 முதல்), வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைகள் ( ஜூலை 25,26 1983) தொடர்பில் சாட்சியங்களை பதிவு செய்து அறிக்கையிட்டு 2003 இன் !!! ஆம் இலக்க அமர்வாவணமாக வெளியிடப்பட்டது. அப்போதைய அரச வழக்கறிஞரும் தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதியுமான நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் இந்தக் குழுவுக்கு உதவியாக இருந்ததோடு, இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர் எஸ்.எம்.ஜே. செனவிரத்ன செயலாளராகவும் கடமையாற்றினார்.


2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் சுஹைர் தேசியத் தொலைக்காட்சியான இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் ஆளுநர் சபைத் தலைவராகவும் கடமையாற்றினார். 2006 ஆம் ஆண்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஈரானுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்ட போதும், இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிரான பதற்ற நிலைகள் வளர்ந்து வந்ததைத் தொடர்ந்து 2012 இல் தனது பதவியை இராஜினாமா செய்தார்.


தற்போதும் தனது சட்டத்துறைப் பணிகளைத் தொடர்ந்து வரும் சுஹைர், வெலிகம அரபா மத்திய கல்லூரியினதும் (1952-1957), கொழும்பு சென்.ஜோன்ஸ் கல்லூரியினதும் (1957-1962), கொழும்பு ஸாஹிராக் கல்லூரியினதும் (1963-1965) பழைய மாணவராவார்.


பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய பி.சி., சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்னம் பி.சி., இலங்கை சட்டத் தரணிகள் சங்கத் தலைவர் சாலிய பீரிஸ், பாராட்டுக் குழுவின் தலைவர் ஜனபிரித் பெர்ணான்டோ, பாராட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சமத் பெர்ணான்டோ ஆகியோர் இந்த நிகழ்வில் உரையாற்றினர்.

No comments

Powered by Blogger.