பட்டமளிப்பு விழாக்கள் பற்றி 4 பரிந்துரைகளை முன்வைக்க ஆசைப்படும் முப்தி. யூசுப் ஹனிபா
இது அறபு மத்ரசாக்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடைபெறக்கூடிய ஒரு காலமாக இருந்து கொண்டிருக்கிறது. அதிதிகள் எந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வது என்று ஒரு தடுமாற்றத்தில் இருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல.
இந்த சந்தர்ப்பத்தில் பட்டம் பெற்று வெளியேறக்கூடிய இளம் உலமாக்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களுக்கும் பாடம் சொல்லி அறிவு புகட்டிய ஆசான்களுக்கும் அதிபர்களுக்கும் அங்கு பணிபுரியக்கூடியவர்களுக்கும் தம்முடைய நன்கொடைகள் மூலம் மத்ரசாக்களை வலுப்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய தனவந்தர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.
இந்த சந்தர்ப்பத்தில் என்னுடைய அனுபவம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வது பொருத்தம் என கருதுகின்றேன். இதுவரையில் பல நூறு பட்டமளிப்பு விழாக்களில் பேச்சாளராகவும் வளராளராகவும் நான் கலந்து கொண்டிருக்கிறேன்.
பட்டமளிப்பு விழா என அவற்றிற்கு பெயரிடப்பட்டிருந்தாலும் அன்று பட்டம் பெற்று வெளியேறக்கூடிய ஆலிம்களுக்கு சான்றிதழ் வழங்கி அவர்களை ஊக்குவிக்கின்ற நிகழ்வை விட அந்த கல்லூரிக்கு உதவிகள் செய்த தனவந்தர்களை பாராட்டுகின்ற நிகழ்வுகளாகத் தான் பெரும்பாலான பட்டமளிப்பு விழாக்கள் அமைந்திருக்கின்றன.
அத்தகைய தனவந்தர்கள் பாராட்டப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. நிச்சயம் அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே.
ஆனால் பட்டமளிப்பு விழா எனப்படுவது பட்டம் பெற்று வெளியேறக்கூடிய ஆலிம்களுடைய நிகழ்ச்சியாகும்.அந்த நிகழ்ச்சியிலே அவர்களுக்குரிய உபதேசங்கள் வழங்கப்படுவதோடு அவர்களுடைய பொறுப்புக்களை பற்றிய பாரதூரம் தெளிவுபடுத்தப்படுவதோடு அவர்களுடைய இலட்சியப் பயணத்தில் அவர்கள் எதிர்கொள்ள இருக்கின்ற சவால்கள் மற்றும் அதனை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகள் வழங்குகின்ற ஒரு நிகழ்வாகத்தான் பட்டமளிப்பு விழாக்கள் அமைய வேண்டும். ஆனால் பெரும்பாலான நிகழ்வுகள் அப்படி அமைவதில்லை என்பதே எனது அனுபவம்.
பெரும்பாலான விழாக்களுக்கு பிரதம பேச்சாளராக செல்லும்போது மத்ரஸாவினுடைய உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்கு அதனுடைய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குரிய நன்கொடைகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் உரையாற்றுமாறு பெரும்பாலும் கேட்டுக் கொள்வார்கள்.
எனவே பட்டமளிப்பு விழா தொடர்பாக நான்கு பரிந்துரைகளை இங்கே முன் வைக்க ஆசைப்படுகிறேன்.
1. பட்டமளிப்பு விழா என்பது முற்றிலும் பட்டம் பெற்று வெளியேறக் கூடிய ஆலிம்களை மையப்படுத்தியதாக அமைவது மிகவும் பொருத்தமாக அமையும்.
2. மத்ரஸாக்களுக்கு உதவி செய்யக்கூடிய தனவந்தர்களை அழைத்து எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நடவடிக்கைகளுடைய முன்னேற்றம், எதிர்கால திட்டங்கள், இதுவரை காலத்துக்குரிய கணக்காய்வுகளை முன்வைத்து தெளிவுகளை வழங்குவதோடு அவர்களது சேவைகளை பாராட்டுகின்ற, ஊக்குவிக்கின்ற ஒரு நிகழ்வு தனியாக நடைபெறுவது பொருத்தமானது.
3. நேர முகாமைத்துவம் பேணுவது. மத்ரஸாக்களில் நடைபெறுகின்ற பெரும்பாலான நிகழ்வுகளில் நேர முகாமைத்துவம் பேணப்படுவது மிக மிகக் குறைவாகும். எனவே நிகழ்வானது இரண்டு மணித்தியாலத்தை தாண்டாத நிகழ்வாக மிகவும் கச்சிதமாக வடிவமைக்கப்படுமாக இருந்தால் சிறப்பானதாகவும் அமையும்.
4. மத்ரசாக்களுடன் நல்லெண்ணம் கொண்டிருக்கக்கூடிய மாற்று மத சகோதரர்கள் இந்த விழாக்களில் பங்கெடுத்தல். மாற்று மதங்களைச் சேர்ந்த
மதகுருக்கள் அல்லது கல்விமான்கள் இந்த நிகழ்விலே கலந்து கொண்டு உரை நிகழ்த்துவதற்கு சந்தர்ப்பங்களை அமைத்துக் கொடுப்பது மத்ரஸா பற்றிய நல்லெண்ணம் அடுத்த சமூகங்களுக்கும் போய் சேர்வதற்கு வாய்ப்பாக அமையும்.
எனவே மேற்படி விடயங்களை எனது தாழ்மையான பரிந்துரைகளாக எடுத்துக் கொள்ளுங்கள்.எத்தி வைப்பது என்னுடைய பொறுப்பாகும் என்ற அடிப்படையில் மிகவும் தாழ்மையோடு உங்களுக்கு எனது பரிந்துரைகளை சமர்ப்பித்திருக்கின்றேன்.உங்களது விழாக்களில் இவற்றை நடைமுறைப் படுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
எங்களது அனைத்து நல்ல முயற்சிகளையும் எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.
முப்தி.யூசுப் ஹனிபா
Post a Comment