Header Ads



30 ஆண்டுகளாக ரஹ்மத் பதிப்பகம் - பாராட்டப்பட வேண்டிய நிறுவனர் எம். ஏ. முஸ்தபா


- அஷ்ஷைக் நாகூர் ளரீஃப் -


சென்னை ரஹ்மத் பதிப்பகம் கடந்த 30 ஆண்டுகளாக அரபு மொழியில் உள்ள மார்க்க மூலாதார நூல்களை தமிழ் உலகுக்கு கொண்டு வரும் அரும்பணியில் பெரும்பணியில் ஈடுபட்டு வருவதை உலகம் என்று ஆச்சரியமாக நோக்குகிறது.


ஒரு நிறுவனம் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக இவ்வாறான பணிகளில் அயறாது உழைத்து வருகின்றமை உண்மையில் வியப்பும் ஆச்சரியமும் தான்.


 என்றாலும் அல்லாஹ், அவனுக்காக என்ற தூய எண்ணத்துடன் ஒரு பணியை துவங்குகின்ற போது அதற்கு துணையாகவும் பக்கபலமாகவும் இருக்கின்றான் என்பதை இதன் ஊடாக எமக்கு அறிந்து கொள்ள முடிகின்றது. 


 உண்மையில் அல்லாஹ்வுடைய இறுதித்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது அருள் வாக்குகளை உலகறியச் செய்யவேண்டிய ஒரு பாரிய கடமையும் பொறுப்பும் உலக முஸ்லிம்களுக்கு இருக்கிறது.


அதிலும் குறிப்பாக 20 கோடி மக்களுக்கும் மேலதிகமாக வாழும் தமிழ் மொழியில் பேசும் சகோதரர்களுக்கு நபிகளார் உடைய இந்த செய்திகளை கொண்டு போய் சேர்க்க வேண்டிய பொறுப்பும் தார்மீக கடமையும் எங்களுக்கு இருக்கிறது.


இதனைக் கருத்தில் கொண்டே ஆரம்பமாக தமது அருமை தாயார் காலம் சென்ற  ரஹ்மா அவர்களின் நினைவாகவே இப்பணி துவங்கப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது.


 அல்குர்ஆனுக்கு அடுத்தபடியாக நோக்கப்படக்கூடிய ஸஹீஹுல் புகாரி என்ற கிரந்தமே முதலில் இவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.


 ஐந்து பாகங்களைக் கொண்ட ஸஹீஹுல் புகாரி என்ற ஹதீஸ் கிரந்தம் குர்ஆனுக்கு அடுத்ததாக உலக முஸ்லிம்களால் மதிக்கப்படக்கூடிய ஒரு பெரிய கிரந்தமாகும்.


 இவ்வாறான ஒரு கிரந்தத்தை மொழியாக்கம் செய்வதென்பது பாரிய சவால்மிக்க ஒரு காரியம் ஆகும்.


 அதனைத் தொடர்ந்து ஸஹீஹுல் முஸ்லிம் என்ற கிரந்தம் நான்கு பாகங்களிலும் அபூதாவூத் என்ற கிரந்தம் ஐந்து பாகங்களிலும் திர்மிதி என்ற கிரந்தம் 5 பாகங்களிலும் நசாயீ  என்னும் கிரந்தம் நான்கு பாகங்களிலும் அத்துடன் இப்னுமாஜா என்ற கிரந்த ஐந்து பாகங்களிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.


அது மாத்திரம் இன்றி அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது உடை, நடை, பாவனைகளை விவரிக்கும் ஷமாஇல் திர்மிதி என்ற நூலும் ஒரு பாகத்தில் முழுமையாக இவர்களின் ஊடாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.


அத்துடன் அல்லாஹ்வுடைய புனித வேதமாகிய அல்குர்ஆனுடைய பணிகளில் ஈடுபட துவங்கியுள்ளனர்.


 உலகில் தலைசிறந்த அல்குர்ஆன் விரிவுரை நூலாகிய தப்ஸீர் இப்னு கஸீர் என்ற பிரபல்யமான கிரந்தத்தை இவர்கள் 10 பாகங்களாக மொழியாக்கம் செய்துள்ளனர்.


 உண்மையில் தமிழ் உலகில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே இது நோக்கப்பட வேண்டும். 30 பாகங்களைக் கொண்ட அல்குர்ஆனை மொழியாக்கம் செய்வது என்பது பாரிய சவால் மிக்க ஒரு விடயமாக இருக்கையில், அதற்கான விளக்கவுரை நூலை மொழியாக்கம் செய்வதென்பது குறிப்பாக தமிழ் உலகில் இது முதலாவது சாதனையாகும்.


இவர்களது மொழிபெயர்ப்புகள் அனைத்துமே நேர்த்தியானதும் ஆழமானதுமான பல்லாண்டுகள் அனுபவம் பெற்ற மொழிபெயர்ப்பாளர்களின் ஊடாகவே  நடைபெற்றுள்ளன என்பதை அவர்களது வெளியீடுகளை வாசிக்கின்ற வாசகர்கள் இலகுவில் புரிந்து கொள்வார்கள்.


அதன் நிறுவனராக  இருக்கும் மதிப்புக்குரிய அல்ஹாஜ் எம். ஏ. முஸ்தபா அவர்கள் உண்மையில் பாராட்டத்தக்கவர்களே.


அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த அவர்கள் கொழும்பு சம்மான்கோட்டை பள்ளிவாசலில் ஜும்மா தொழுகையின் பின்னர் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


ரஹ்மத்  பதிப்பகத்தாரின் 30 ஆண்டுகளைக் கடந்த இப்பணிகளை அல்லாஹ் ஏற்று அருள் புரிவானாக!


 அவர்களது அன்புத் தாயார் ரஹ்மத் அவர்களது மண்ணறையை பொன்னரையாக மாற்றி அருள்வானாக!


 இவர்கள் அது இச்சேவையை ஏனையோரும் முன் மாதிரியாக கொள்ள எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!!

No comments

Powered by Blogger.