Header Ads



தமிழ் பாடசாலையில் 30 வருடங்களாக, ஆசிரியப் பணியாற்றிய சித்தி நஸீலா ஓய்வு பெறுகிறார்


 கல்விப்பணியில் இருந்து ஓய்வு பெறும் பசறை தமிழின் இன்னொரு ஆளுமை.


பது/பசறை தமிழ் மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) தனது மூன்று தசாப்த கல்விச் சேவையை பூர்த்தி செய்து ஓய்வு பெறும் ஒரு பெண் ஆளுமையாக AJ சித்தி நஸீலா அவர்களை குறிப்பிடலாம்.


1963.03.30 அன்று அப்துல் ஜப்பார், ஒஜிதா உம்மா ஆகியோருக்கு மகவாக  ஜனாபா சித்தி நஸீலா அவர்கள் பசறையில் ஜனித்தார்கள். 


தனது கல்வியை பசறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கற்றுத் தேர்ந்த இவர்கள் மர்ஹும் MPM ரஹீம்டீன் அவர்களுடன் இல்வாழ்வில் இணைந்தார்கள். 


1990.02.26 அன்று ஆசிரியர் நியமனத்தில் பது/ பசறை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்விச்சேவைக்கு உள்வாங்கப்பட்ட இவர்கள் இன்றைய தேதிவரை முப்பத்து மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக இக்கலையகத்திலேயே சேவையாற்றி ஓய்வு பெறுகிறார்கள். 


இதற்கமைய நான்கு அதிபர்களுக்கு கீழாக குறிப்பிட்ட மூன்று தசாப்தங்களிலும் இக்கலையகத்தில் நிகழ்ந்த வரலாற்று திருப்பங்களிலும் கலையகம் முகம் கொடுத்த அனைத்து சவால்களிலும் இவரது பங்கு நிச்சயம் இருந்திருக்குமென்பதில் எவ்வித ஐயமுமில்லை.


தேசிய கல்வி நிறுவகத்தின் கீழ் நடைமுறை படுத்தப்படும் ஆசிரிய பயிற்சிக்கான தொலைக் கல்வி மூலம் ஆசிரியப் பயிற்சியை

1995 - 1998 காலப்பகுதியில் நிறைவு செய்து ஆரம்ப கல்விக்கு பயிற்றப்பட்ட ஆசிரியராக நிலை உயர்ந்து தனது ஆசிரியப்பணியின் இன்னொரு மைல் கல்லை தாண்டினார்கள். 


இதற்கமைவாக 1990 ஆம் ஆண்டு தொடக்கம் முதலாம் இரண்டாம் தர வகுப்பாசிரியராக பது/ பசறை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு  வருகைதரும் சிறார்களை அரவணைத்து பாடசாலை வாழ்க்கையில் ஏட்டினை தொடக்கி வைத்த ஆசிரியப் பெருந்தகையாக ஜனாபா சித்தி நஸீலா ஆசிரியையை கொள்ளலாம். 


பசறை பிரதேசத்தில் அரச உத்தியோகம் போன்ற நல்ல நிலைமையில் உள்ள பெரும்பாலானவர்கள் பசறை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களாக உள்ள அதேவேளையில் ஆரம்ப வகுப்பாசிரியராக சித்தி நஸீலா அம்மையார் அவர்களின் வழிப்படுத்தலில் பாடசாலை வாழ்க்கையை தொடங்கியவர்களே அவர்களுள் பெரும்பாலானவர்கள் உள்ளனர் என்று கூறினாலும் மிகையாகாது.


கல்லூரியின் இடைநிலை பிரிவின் நலன்கருதி 1998 ஆம் ஆண்டில் ஆரம்ப பிரிவிலிருந்து நீக்கப்பட்டு தரம் 6,7 ஆகியவற்றின் தர இணைப்பாளராக அன்றைய அதிபரான திர P. ஆறுமுகம் ஐயா அவர்களால் நியமிக்கப்பட்டதுடன் மேற்படி வகுப்புகளுக்கு தமிழ், கணிதம் ஆகிய பாடங்களை போதித்ததுடன் க.பொ.த சாதாரண தர வகுப்புகளுக்கு மனைப்பொருளியல் பாடத்தையும் போதித்து மிகச்சிறந்த பெறுபேறுகளையும் பெற்றுக் கொடுத்தார்கள்.


மனைப்பொருளியல் துறையில் இவர்கள்  காட்டிய திறமை காரணமாக அன்று தொடக்கம் இன்றுவரை பாடசாலையில் நடைபெறும் அனைத்து விஷேட நிகழ்வுகளின் போதும் உபசரணை குழுவில் நியமிக்கப்பட்டார்கள். இயல்பிலேயே விருந்தோம்பல் குணத்தில் சிறந்த இவர்கள் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை செவ்வனே நிறைவேற்றி சிறப்பித்தார்கள். ஆரம்ப பிரிவுக்கான சத்துணவு செயல்திட்டத்தில் இவர் காட்டியிருந்த நேர்த்தி அன்றைய கல்வி அதிகாரிகளினது பாராட்டுதல்களுக்கும் இலக்கானது.


குறிப்பிட்ட இரண்டு மூன்று வருடங்கள் இடைநிலை பிரிவில் சேவையாற்றி மீண்டும் ஆரம்ப பிரிவுக்கு மாற்றப்பட்டதுடன் 2012 ஆம் ஆண்டிலிருந்து குறிப்பிட்ட சிலவருடங்களாக ஆரம்ப பிரிவின் பகுதித்தலைவராக செயலாற்றினார்கள்.


தனது சேவை காலத்தில் அதிகூடிய காலம் முதலாம் இரண்டாம் தரங்களின் வகுப்பாசிரியராக கடமையாற்றியதாக குறிப்பிடும் இவர்கள் 2012 ஆம் ஆண்டு மாத்திரம் தரம் ஐந்து வகுப்பாசிரியராக கடமையாற்றியதாக கூறுகிறார்.


இயல்பிலேயே சற்று கண்டிப்பான குணமுள்ள ஜனாபா சித்தி நஸீலா ஆசிரியை அவர்கள் பாடசாலை மாணவர்களது குறிப்பாக மாணவியர்களது ஒழுக்க விழுமியங்களில் ஒரு தாய் போல் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். மாணவ மாணவியர்கள் மாத்திரமல்ல பாடசாலைக்கு நியமனமாகி வரும் புதிய இளம் ஆசிரியர்களையும் ஒரு சிரேஷ்ட ஆசிரியராக  வழிப்படுத்துவதிலும் பின்னிற்க மாட்டார்கள். சொல்ல வேண்டியதை முகத்துக்கு நேரே சொல்லும் இவரது இயல்பு காரணமாக இவரது நாமம் இடைக்கிடை இளம் ஆசிரியர்கள் வாயில் விழுவதுவும் உண்டு.


ஆனாலும் ஆசிரியர்களது தனிப்பட்ட பிரச்சினைகளின்போது தேவையேற்படின் ஒரு குடும்ப அங்கத்தவர்போல எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி முன்னின்று உதவக்கூடிய பண்பாட்டைக் கொண்டவர்.


அதேசமயம் மிகுந்த விருந்தோம்பல் குணம் மிகுந்த இவர்கள் ஆசிரியர்களின் தேவை கருதி தன்னாலியன்ற உதவிகளை இனம் மதம் பாராமல் தாராளமாக செய்யக்கூடியவராக இருந்தார்கள். குறிப்பாக வேறு மாகாணங்களில் அல்லது தூர இடங்களில் இருந்து நியமனமாகிவரும் ஆசிரியைகள் நிச்சயம் இவரது விருந்தோம்பலை அனுபவித்திருப்பர். சந்தர்ப்ப சூழ்நிலை கருதி தன்னை ஒரு அன்னையாக பாவித்து தனது இல்லத்திலேயே அவர்களை தங்க வைத்து உதவிய சந்தர்ப்பங்களும் உள்ளது.


வரிய மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கான தேவைகளை தன்னால் இயன்ற அளவில்  இரகசியமாகவும் கண்ணியமாகவும் நிறைவேற்றிக் கொடுப்பார்கள்.


கணவரின் இழப்புக்கு பிறகும் பல தனிப்பட்ட சோதனைகளையும் வேதனைகளையும் தாண்டி தனது இரண்டு குழந்தைகளை கற்பித்து நல்ல நிலைக்கு ஆளாக்கி திருமணமும் செய்து வைத்து ஒரு ஆசிரியராக தனக்கு வழங்கப்பட்ட எல்லா பொறுப்புகளையும் செவ்வனே நிறைவேற்றி தனது கல்விச் சேவையில் இருந்து கௌரவமாக ஓய்வு பெறும் அப்துல் ஜப்பார் சித்தி நஸீலாவாகிய எல்லோராலும் சித்தி teacher என அன்புடன் அழைக்கப்படும் திருமதி ரஹீம்டீன் அவர்களுக்கு அவரது ஓய்வு ஆரோக்கியமானதாகவும் சிறப்பானதாகவும் அமைய வேண்டுமென்ற வாழ்த்துக்களுடன்;


வல்ல இறைவனான அல்லாஹ் அன்னவரது அனைத்து சேவைகளையும் பொருந்திக் கொண்டு நீண்ட ஆயுளையும் நிலைத்த ஆரோக்கியத்தையும் வழங்க வேண்டுமென்றும் பிரார்தித்துக் கொள்கிறேன்.

ஆமீன்.


MFM இர்ஷாட் 

2023.03.30

No comments

Powered by Blogger.