Header Ads



தற்காலிகத் தலைவராக வஜிர அராஜகம், சட்டவிரோதமாக 8 வர்த்தமானிகளுக்கு அங்கீகாரம்


கடந்த காலங்களில் விவாதங்களுக்கு வித்திட்ட அரச நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் ( COPF) நேற்றைய கூட்டத்தின் போது, தற்காலிக தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டு, 8 வர்த்தமானிகள் அங்கீகரிக்கப்பட்டதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. 


ஹர்ஷன ராஜகருணா மற்றும் சந்திம வீரக்கொடி ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெரிவுக்குழு கூட்டத்தில் இருந்து   வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.


கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை அரச நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவராக நியமிப்பதற்கு எதிர்க்கட்சி யோசனை  முன்வைத்திருந்த நிலையில், மயந்த திசாநாயக்கவை தலைவராக நியமிப்பதற்கு ஆளும் கட்சி தீர்மானித்திருந்தது. 


எனினும், மயந்த திசாநாயக்க அந்த பதவியிலிருந்து விலகிய நிலையில், எதிர்க்கட்சி மீண்டும் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் பெயரை பரிந்துரை செய்தது. 


இதற்கிடையில், நேற்று (02) கூடிய அரச நிதி தொடர்பான தெரிவுக்குழு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவை தற்காலிக தலைவராக நியமித்துள்ளது. 


அரச நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் விடுமுறை பெற்று அல்லது வருகை தராத சந்தர்ப்பத்தில் மாத்திரமே ஏற்கனவே உள்ள தலைவருக்கு பதிலாக குழுவில் அங்கம் வகிக்கும் ஒருவரை தற்காலிக தலைவராக நியமிக்க முடியும். ஒருவர் பதவியிலிருந்து விலகியதன் பின்னர் பதில் தலைவரை அவ்வாறு நியமிக்க முடியாது என  சந்திம வீரக்கொடி தெரிவித்தார். 


பாராளுமன்றத்திற்கு சட்டமூலமொன்று கொண்டுவரப்படுகின்ற சந்தர்ப்பத்தில், அதற்கு அரச நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் அனுமதி கிடைத்திருக்க வேண்டும். ஹர்ஷ டி சில்வாவின் தலைமையில் அரச நிதி தொடர்பான தெரிவுக்குழு செயற்படுகின்ற போது, கொண்டு வரப்படுகின்ற ஒவ்வொரு யோசனை தொடர்பிலும் சிந்தித்தே தீர்மானம் எடுக்கப்பட்டது. எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளுக்கான சட்டமூலங்களுக்கான அனுமதி நேற்று (02) பெறப்பட்டுள்ளது.  ஆளுங்கட்சியிலுள்ள வஜிர அபேவர்தன சட்டத்திற்கு முரணான வகையில் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரணாக தலைவர் கதிரையில் அமர்ந்து, சட்டமூலங்களை அங்கீகரித்துள்ளார்.  


என சந்திம வீரக்கொடி மேலும் தெரிவித்தார். 


இதேவேளை, நிதிக்குழுவின் செயற்பாடுகள் பாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளைகளுக்கு எதிராக அமைந்துள்ளதாக கலாநிதி ஹர்ஷ டி சில்வா ட்வீட் செய்துள்ளார். 


அரச நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் எதிர்க்கட்சியிலிருந்து நியமிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.