Header Ads



யாழ்ப்பாண மாநகர சபை முன்னாள் உறுப்பினர் M.K.M. காஸிம்


யாழ்ப்பாணம், சோனகத் தெருவில் மீரான் கண்டு – மைமூன் தம்பதியினருக்கு 1948 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதலாம் திகதி முஹம்மது காஸிம் பிறந்தார்.


முஹம்மது காஸிம் தனது ஆரம்பக் கல்வியை யாழ்.மஸ்ற உத்தீன் பாடசாலையில் ஐந்தாமாண்டு வரை கல்வி கற்றார். பின்னர் 06 ஆம் ஆண்டு தொடக்கம் 10ஆம் ஆண்டு  வரை யாழ்.மத்திய கல்லூரியில் கல்வி கற்றார்.


முஹம்மது காஸிம் வறுமை காரணமாக தனது படிப்பை தொடராது இடை நிறுத்திவிட்டார். அதன் பின்னர் முஹம்மது காஸிம் தனது மச்சானுடைய கே.என்.எம்.மீரான் ஸாஹிப் நகைக்கடையில் உதவியாளராக சேர்ந்தார். கன்னாதிட்டி வீதியில் அமைந்த கே.என்.எம்.மீரான் ஸாஹிப் நகைக்கடையில் முஹம்மது காஸிம் உதவியாளராக சேர்ந்து, காலம் போகப் போக நகை வியாபாரத்தில் நல்ல அனுபவசாலியானார். வாடிக்கையாளர்களுடன் நல்ல முறையில் பேசி அணுகி நகைகளை விற்கக் கூடியவராகவும் மச்சானுக்கு மிகவும் நம்பிக்கையாளராகவும் இடம்பெயரும் வரை 1990 வரை சேவை செய்தார்.


முஹம்மது காஸிம் சமூகத்தில் மக்களுடன் நல்ல முறையில் பழகக் கூடியவர். ஆதலால் முஹம்மது காஸிமை முஸ்லிம் வட்டாரத்தில் “மக்கள்” என்று செல்லமாக அழைப்பர்.  பிறருக்கு உதவி செய்யக் கூடியவராகவும் இருந்தார். யாழ்.முஸ்ஸிம் வட்டாரத்தில் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் வட்டாரத்தின்  அயலில் தமிழர்களின் சிறுபான்மை இனத்துக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையின் போது தனது உயிரையும் பொருட்படுத்தாது முஹம்மது காஸிம் முன்னின்று முஸ்லிம்களை பாதுகாத்த சம்பவங்களும் உண்டு.


முஹம்மது காஸிம் சமூகத்தில் அக்கரையுள்ளவராக இருந்ததால் யாழ். மாநகர சபையின் 19 ஆம் வட்டார வேட்பாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பாக 1979 இல் நிறுத்தப்பட்டார். முஹம்மது காஸிம் அமோக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அமோக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதற்கு காரணம் முஹம்மது காஸிமிற்கு தமிழ் மக்களின் வாக்குகளும் கிடைத்ததுதான் காரணம். முஹம்மது காஸிம் 1979 முதல் 1981 வரை யாழ்.மாநகர சபையின் ஓர் உறுப்பினராகவிருந்து மக்களுக்கு அளப்பரிய சேவைகள் புரிந்தார்.


நாவலர் வீதியில் தனியார் காணியில் அமைந்திருந்த பிரசவ விடுதியை மூடுவதற்கு யாழ்.மாநகர சபையில் பிரேரணை கொண்டு வரப்பட்டது. அப்போது யாழ் மாநகர சபை உறுப்பினர் முஹம்மது காஸிம் அந்த பிரேணையை கடுமையாக எதிர்த்து வாதாடி வெற்றி பெற்றார். பின்னர் புதிய சோனக தெருவில் நவீன முறையில் வசதியுடன் கூடிய புதிய பிரவச விடுதி கட்டி திறக்கும் வரை நாவலர் வீதியில் அமைந்த பிரவச விடுதி இயங்கியது என்றால் யாழ் மாநகர சபை உறுப்பினர் முஹம்மது காஸிமின் கடுமையான முயற்சிதான்.


காதி அபூபக்கர் வீதியில் அமைந்திருந்த தைக்கா பள்ளியில் பெண்களுக்கான தராவீஹ் தொழுகை மீரான் முஹிதீன் ஆலிம் அவர்களால் தொழுவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் காதி அபூபக்கர் வீதி இருளில் மூழ்கி காணப்பட்டது.


யாழ் மாநகர சபை உறுப்பினர் முஹம்மது காஸிம் யாழ். மாநகர  சபையின் அனுமதியுடன் தனியார் பங்களிப்புடன் காதி அபூபக்கர் வீதியில் மின் கம்பங்கள் முழுவதற்கும் டியூப்லைட் போடப்பட்டது போன்ற சேவைகள் குறிப்பிடத்தக்க விடயமாகும்.


முஹம்மது காஸிம் பள்ளிக்குடா பள்ளிவாசல் மீது மிகுந்த அக்கரை கொண்டதால் பள்ளிக்குடா பள்ளிவாசலுக்கு சற்று தொலைவில் விவசாயக் காணி விலைக்கு வாங்கி அக்காணியில் ஆடு,மாடு, பட்டி அமைத்து அதனையும் கவனித்துக் கொண்டு பள்ளிக்குடா பள்ளிவாசலின் நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டார்.


பூநகரியில் பள்ளிக்குடா பள்ளிவாசலில் சேகு சிக்கந்தர் ஒலியுல்லாஹ் அவர்களின் ஸியாரமும் அமைக்கப்பட்டிருந்தது. பள்ளிவாசலுக்கு மக்கள் வந்தால் தங்குவதற்கு 6 அறைகளைக் கொண்ட ஒரு கட்டிடமும் இருந்தது.


அந்தக் காலத்தில் யாழ்.முஸ்லிம்கள் பள்ளிக்குடா சென்று அறைகளில் தங்குவார்கள். தங்கும் காலங்களில் யாழ்.முஸ்லிம்கள் வேட்டையாடுவார்கள். குளத்தில் குளிப்பார்கள், பொழுது போக்கு விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள்.


இடம்பெயர்வு வரை 1990 வரை பள்ளிக்குடா பள்ளிவாசல் நிர்வாக சபையின் தலைவராக மர்ஹூம்  ஸலாம்ஸ் ஏ.எஸ்.எம். ராஸீக், இணைச் செயலாளராக பாரூக் மாஸ்டர், இஸ்மாயில் பாவா ஆகியோரும் தனாதிகாரியாக முஹம்மது காஸிமும் இருந்தனர்.


சுமூக நிலையின் பின்னர் பள்ளிக்குடா சென்ற போது பள்ளிவாசல், அறைகள் எல்லாம் அடையாளம் தெரியாத அளவில் அழிந்திருந்தன. பள்ளிவாசலுக்கு செல்லும் பாதைகள் பற்றைக்காடுகளாக காட்சி அளித்தது. தற்காலிகமாக பாதை துப்பரவாக்கப்பட்டு தொழுவதற்கும் வசதி செய்யப்பட்டது.2018 இல் பள்ளிக்குடா பள்ளி வாசலுக்கு நிர்வாகம் புதிதாக தெரிவு நடைபெற்றது. தலைவராக இஸ்முத்தீன், இணைச் செயலாளர்களாக ஸினாஸ் ஹம்ஸா, எப்,பாயிஸ் தனாதிகாரியாக முஹம்மது காஸிம் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். புதிய நிர்வாக சபை வக்பு சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


புதிய நிர்வாக சபையின் முயற்சியால் பள்ளிக்குடாவில் 10 குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளது. மேலும் 40 குடும்பங்களை அங்கு குடியேற்றி ஓர் அழகிய கிராமத்தை உருவாக்க முயற்சி செய்கின்றனர்.



பள்ளிக்குடாவின் புதிய நிர்வாக சபையின் ஆலோசகராக பிரபல சட்டத்தரணி எம்.றய்ஹான் அவர்கள் மிகவும் உதவியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.


புதிய நிர்வாக சபையினால் புதிய ஜூம்மா மஸ்ஜித் கட்டி திறந்து வைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்குடா ஜூம்மா மஸ்ஜித்தின் தோற்றத்தை படத்தில் காணலாம்.


அன்று முதல் இன்று வரை பள்ளிக்குடா ஜூம்மா மஸ்ஜித்தின் தனாதிகாரியாக விளங்கும் முஹம்மது காஸிம் பள்ளிவாசலுக்கு அருகாமையில் மக்கள் வந்து தங்கிச் செல்வதற்கு முன்னர் இருந்த மாதிரி  6 அறைகளைக் கொண்ட கட்டிடம் கட்டுவதற்கு முயற்சி செய்கின்றார்.


யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் முஹம்மது காஸிம் 74  வயது கடந்த நிலையிலும் சமூக சேவை செய்ய வேண்டும் என்று முயற்சி செய்வது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.


முஹம்மது காஸிம் அல்லாஹ்வின் அருளால் நோயின்றி நீடூழி வாழ பிரார்திக்கின்றோம். ஆமீன்.


- இக்பால் -



No comments

Powered by Blogger.