சிரிய பூகம்பத்தில் பிறந்த குழந்தை: DNA க்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைப்பு - பெயரும் மாற்றம்
சிரியாவின் ஜிண்டெரிஸ் பகுதியில் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி பூகம்பம் ஏற்பட்டபோது ஒரு தம்பதியும், அவர்களது நான்கு குழந்தைகளும் தங்கள் அடுக்குமாடி கட்டிடத்தை விட்டு வெளியேற முயன்றுள்ளனர். ஆனால், கட்டிடம் அவர்கள் மீது இடிந்து விழுந்ததாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். இதில் பெண்ணின் உடல் அருகே பச்சிளம் பெண் குழந்தை ஒன்று கிடந்தது. அப்பெண் இறக்கும் தருவாயில் இக்குழந்தையை பிரசவித்திருக்கலாம் என மீட்பு குழுவினர் நம்புகின்றனர். அக்குழந்தை 10 மணி நேரத்திற்கு பிறகு இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டது.
குழந்தை சிகிச்சை பெற்று வந்த அஃப்ரின் மருத்துவமனை அயா (அயா என்றால் அரபு மொழியில் அற்புதம் என்று பொருள்) என்று அக்குழந்தைக்கு பெயரிட்டது. இதற்கிடையில் குழந்தை அயாவை தத்தெடுக்க பலரும் விரும்புவதாக மருத்துமனை தெரிவித்தது. எனினும் குழந்தையை அதன் உறவினர்களிடம் ஒப்படைக்க விரும்புவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் குழந்தை அதன் மாமா மற்றும் அத்தையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. குழந்தையின் டிஎன்ஏ அதன் அத்தையின் டிஎன்ஏவுடன் ஒத்துப்போவதால் குழந்தை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு ,தாயின் அஃப்ராவின் பெயரையே உறவினர்கள் சூட்டியுள்ளனர்.
Post a Comment