"அவர்கள் உயிருடன் தான் இருக்கிறார்கள், ஆனால் இறைவனைத் தவிர காப்பாற்ற யாரும் இல்லை'
இந்தப் பகுதியின் கட்டுப்பாடு சிரியா அரசாங்கம், குர்திஷ் படையினர், மற்ற புரட்சிக் குழுக்கள் என மூன்று தரப்பிடமும் உள்ளது. நிலநடுக்கத்திற்கு முன்பிருந்தே, உறைய வைக்கும் குளிர், காலரா தொற்று நோய், மோசமான உள்கட்டமைப்பு ஆகியவற்றால் சிரியா அகதிகள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட அச்சத்தால் தங்களால் எங்கும் செல்ல முடியவில்லை என, அலெப்போ நகரைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர்.
ஜண்டைரிஸ் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தன் குடும்பத்தினர் 12 பேர் இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்ததாக, ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் தெரிவித்தார். தன்னுடைய குடும்பத்தினர் இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருப்பதாக, மற்றொரு நபர் தெரிவித்தார்.
"அவர்களின் குரல் கேட்கிறது. அவர்கள் உயிருடன் தான் இருக்கிறார்கள். ஆனால், காப்பாற்ற யாரும் இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
வடக்கு சிரியாவின் இட்லிப்பில் அமைந்துள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையில் கடந்த ஏழு ஆண்டுகளாகப் பணியாற்றியவர் பிரிட்டனை சேர்ந்த ஷஜுல் இஸ்லாம். பிபிசி ரேடியோ 4-இன் 'தி வேர்ல்ட் டுநைட்' நிகழ்ச்சியில் பேசிய அவர், தங்கள் மருத்துவமனை மிக மோசமான மரணங்களை இந்த நிலநடுக்கத்தால் சந்தித்துள்ளதாகத் தெரிவித்தார்.
"எங்கள் மருத்துவமனை நிரம்பியுள்ளது. சுமார் 300-400 பேர் தற்போது எங்கள் மருத்துவமனையில் உள்ளனர். ஒரு படுக்கைக்கு இரண்டு முதல் மூன்று பேர் உள்ளனர்," எனத் தெரிவித்தார்.
மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ள 40-45 பேரை, தான் ஐசியூவுக்கு அழைத்துச் சென்றதாக அவர் தெரிவித்தார். "மற்றவர்களிடமிருந்து வென்டிலேட்டரை அகற்றி, உயிர் பிழைக்க அதிக வாய்ப்புள்ளவர்களுக்குப் பொருத்துகிறோம். மருத்துவமனையின் நுழைவு வாயிலில் இருந்துகொண்டு யாரைக் காப்பாற்ற முடியும் என்பது குறித்து முடிவு செய்கிறோம்," எனத் தெரிவித்தார்.
சிரியாவில் நிலநடுக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாக இட்லிப் உள்ளது.
Post a Comment