Header Ads



ரகசியமாக உட்புகுந்த பைடன், யுக்ரேனியர்களை உசுப்பேத்தி விட்டு பறந்தார்


'நியூயார்க் டைம்ஸ்' செய்தியின்படி, போலந்து எல்லையில் மிகவும் ரகசியமான முறையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரயில் மூலம் யுக்ரேனுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


போலந்தில் இருந்து யுக்ரேனின் தலைநகர் கியவுக்கு பைடன் மேற்கொண்ட வருகை பாதுகாப்பு காரணங்களுக்காக மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டது. அதிபர் பைடன் தற்போது யுக்ரேனை விட்டுப் புறப்பட்டு விட்டதாக தெரிய வந்துள்ளது.கடந்த சனிக்கிழமை, பைடன் தனது மனைவி ஜில்லுடன் ஒரு உணவகத்தில் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு அமைதியாக வாஷிங்டனில் இருந்து புறப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.


நியூயார்க் டைம்ஸ் தனது செய்தியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வெள்ளை மாளிகை வெளியிட்ட அதிபரின் பயண நிரலின்படி அவர் திங்கள்கிழமை வாஷிங்டனில் தங்கியிருந்து மாலை வார்சாவுக்குச் செல்ல வேண்டும் என இருந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.


கடந்த ஓராண்டுக்கு முன்பு யுக்ரேன் மீது ரஷ்யா ஆக்கிரமிப்பு படையெடுப்பைத் தொடங்கிய பிறகு அந்நாட்டுக்கு அமெரிக்க அதிபர் செய்யும் முதலாவது பயணம் இதுவாகும். முன்னதாக, போலந்து அதிபர் ஆண்ட்ரேஜ் டுடாவை சந்திக்க பைடன் யுக்ரேனுக்கு அருகே உள்ள போலந்துக்கு சென்றிருந்தார்.


யுக்ரேன் அதிபர் வொலோடிமீர் ஸெலென்ஸ்கியை அவரது மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்துப் பேசினார். இந்தப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


யுக்ரேனிய குடிமக்களைப் பாராட்டிய ஜோ பைடன், ராணுவ பயிற்சியில் எந்த அனுபவமும் இல்லாமல் இந்த மக்கள் அற்புதமாகப் போராடியதாகக் கூறினார்."யுக்ரேனியர்களை மீண்டும் ஒருமுறை நான் பாராட்டுகிறேன். சாதாரண மற்றும் கடின உழைப்பாளியாக அவர்கள் திகழ்கிறார்கள். ஒருபோதும் ராணுவ பயிற்சி பெறவில்லை. ஆனாலும் களத்தில் அவர்கள் முன்னோக்கிச் சென்று போராடிய விதம் சிறந்த வீரத்திற்கு குறைவானது அல்ல. இப்போது உலகம் முழுவதும் அவர்களை அறிந்துள்ளது," என்று பைடன் கூறினார்.


யுக்ரேனிய அதிபரை சந்தித்த பிறகு அவரும் ஜோ பைடனும் ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பில் தோன்றி வெளியிட்ட கூட்டறிக்கையில், "ஜனநாயக உலகம்" இந்த "போரில்" வெற்றி பெற வேண்டும் என்று குறிப்பிட்டனர்.


யுக்ரேனுக்கு தொடர்ந்து அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று பைடன் தெரிவித்தார்.


ஸெலென்ஸ்கி பேசுகையில், "அமெரிக்க-யுக்ரேன் உறவுகளின் முழு வரலாற்றிலும் அதிபர் பைடனின் வருகை நிலைத்திருக்கும். நாம் ஏற்கெனவே சாதித்ததை இது காட்டுகிறது. இன்று நாங்கள் மிகவும் பயனுள்ள பேச்சுக்களை நடத்தினோம்," என்று கூறினார்.


இந்தப் பயணத்தின் தாக்கம் நிச்சயம் போராட்டக் களத்தில் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


டக்கத்தில் அமெரிக்கா யுக்ரேனுக்கு ஆப்ராம்ஸ் டாங்கியை வழங்க முடிவு செய்தது. அது இப்போது யுக்ரேனின் பாதுகாப்பு தளவாடங்களில் அங்கம் வகிக்கிறது.


நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்கள் குறித்தும் பைடனுடன் விவாதித்ததாக ஸெலென்ஸ்கி கூறினார்.


ஜோ பைடனின் பயணம் குறித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அதிபரின் கியவ் பயணம், யுக்ரேனின் ஜனநாயகம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான எங்கள் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது," என்று கூறப்பட்டுள்ளது.


மேலும் அதில், "யுக்ரேன் பலவீனமாக இருப்பதாகவும், ஐரோப்பா பிளவுபட்டதாகவும் நினைத்து புதின் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பு அந்நாட்டை தாக்கினார். எங்களை சோர்வடையச் செய்யலாம் என அவர் நினைத்தார். ஆனால் அவர் தவறு செய்தார்," என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.ஜோ பைடன் தமது மண்ணுக்கு வந்து சென்ற சில நிமிடங்களில் யுக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி தனது அதிகாரபூர்வ டெலிகிராம் கணக்கில் இருந்து, அமெரிக்க அதிபருடன் கைகுலுக்கும் படத்தை வெளியிட்டார்.

No comments

Powered by Blogger.