Header Ads



அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை அல்லாஹ் உயிர்த்தியாகிகளாக ஏற்று உயர்ந்த சுவர்க்கத்தை வழங்குவானாக


நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேசிய ஷூரா சபையின் அனுதாபச் செய்தி


தேசிய சூரா சபை துருக்கியில் இடம் பெற்ற நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தவர்களுக்கும் பொதுவாக துருக்கிய மக்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.


இதுபோன்ற இயற்கை அனர்த்தங்கள் அல்லாஹ்வின் ஏற்பாடுகளாகும். அல்லாஹ் அவற்றை நல்லவர்களுக்கு சோதனையாகவும் பாவிகளுக்கு தண்டனையாகவும் ஏனையோருக்கு படிப்பினையாகவும் ஏற்படுத்துகிறான் என்பதே எமது ஆழமான நம்பிக்கையாகும்.


அந்த வகையில் இந்த அனர்த்தத்தில் உயிரிழந்த அனைவரையும் அல்லாஹ் ஷஹீத் (உயிர்த்தியாகி) களாக ஏற்று அவர்களுக்கு உயர்ந்த சுவர்க்கத்தை வழங்குவானாக! காயப்பட்டவர்கள் கூடிய விரைவில் குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்று அல்லாஹ்வைப் பிரார்த்திக்கிறோம்.


சோதனைகள் பல வடிவங்களில் வரமுடியும். "நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களோடு இருக்கிறான்" என்ற அல்குர்ஆனுடைய வசனத்திற்கு அமைய இந்த சந்தர்ப்பத்தில் பொறுமை காப்பதுடன் அல்லாஹ்வின் சக்தியையும் வல்லமையையும் புரிந்து ஈமானை பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.


பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் ஆறுதல் கூறுவதோடு அவர்களது இழப்புகளை ஈடு செய்வதற்கு ஒவ்வொருவரும் தம்மாலான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். பல கட்டிடங்கள் முற்றாக சேதமடைந்து தரைமட்டமாகியுள்ளன.பலர் தொழிலை இழந்திருக்கிறார்கள். இன்னும் பலர் காயப்பட்டிக்கிறார்கள்.இன்னும் பலர் தமது உறவினர்களை இழந்து மிகப்பெரும் கவலையில் இருக்கிறார்கள்.


எனவே உடனடி நிவாரண உதவிகளையும் உளநிலையை பலப்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்குவதோடு இழந்த இல்லிடங்களையும் வியாபாரத் தலங்களையும் மீளவும் கட்டிக் கொள்வதற்கான உதவிகளையும் உளவள ஆலோசனைகளையும் மருத்துவ ரீதியான உதவிகளையும் வழங்குவது அனைவரதும் பொறுப்பாகும்.


இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் நிதானத்தோடும் அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்த்தும் நடந்து கொள்ள வேண்டும்.


வல்லவன் அல்லாஹ் பாதிக்கப்பட்ட அனைவரையும் பொருந்திக் கொண்டு பொறுமையை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு நற்கூலிகளை வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.


தேசிய ஷூரா சபை


07.02.2023

No comments

Powered by Blogger.