மன்னார் பிரதேச மு.கா. வேட்புமனு நிராகரிப்புக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
இந்த வழக்கு நீதியரசர்களான முர்து பெர்ணாண்டோ,யசந்த கோதாதொட, ஈ.ஏ.ஜீ.ஆர் அமரசேகர ஆகியோர் அடங்கிய குழாம் முன்னிலையில் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஜனாதிபதி சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன் எம்.பி மனுதாரர்கள் தரப்பில் வாதங்களை முன்வைத்தார்
மனுதாரர்களான முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், முன்னாள் மன்னார் பிரதேச சபை தவிசாளர் ,முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஐ.எம். இஸ்ஸதீன், கட்சியின் அதிகாரம் அளிக்கப்பட்ட முகவர் இஸ்மத் ஆகியோர் சார்பில் சட்டத்தரணி நஸ்ரினாவின் அனுசரணையில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ,சுமந்திரன் உடன் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் எம்.பி (சட்டமுதுமாணி),சட்டத்தரணி ஹுனைஸ் பாருக் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்
வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட தினத்தில் பிரஸ்தாப முஸ்லிம் காங்கிரஸின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், ,ஆட்சேபனை தெரிவிப்பதற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் அல்லாது ஐந்து நாட்களின் பின்னர் குறித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டி ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் வாதங்களை முன்வைத்தார்
தேவையானதை விட வேட்பாளர் எண்ணிக்கை குறைவாக இருக்க கூடாது என்றிருக்கத்தக்கதாக, இரண்டாவது பட்டியல் போனஸ் வேட்பாளர்களின் எண்ணிக்கையில் ஒருவர் மேலதிகமாக இருந்ததாகபின்னர் குறிப்பிட்டு இந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை ஆட்சேபித்து சுமந்திரன் வாதிட்டார். அத்துடன் தேர்தல் திணைக்களத்திற்காகவும், சட்டமா அதிபர் திணைக்களத்திற்காகவும் முன்னிலையான சட்டத்தரணிகளினதும் வாதங்களைச் செவிமடுத்த பின்னர் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம்,அந்த தீர்மானத்துக்கு இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்து வழக்கை மீண்டும் 21ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
Post a Comment