"பிரபாகரன் உயிரோடு என்ற வாதம், ராஜபக்ஷ குடும்பத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்துமா..?
- BBC -
புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளதாக, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்த கருத்து, பல்வேறு சந்தேகங்கள் மற்றும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பழ.நெடுமாறன் வெளியிட்ட கருத்தானது, இலங்கை அரசியலில் எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், இலங்கை அரசியல் களத்தில் அது தற்போது வரை பாரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
பிரபாகரன் உயிருடன் உள்ளதாக கூறப்படும் கருத்தானது, தமிழக அரசியல் களத்தில் பேசுப் பொருளாக மாறிய போதிலும், இலங்கை அரசியல் களத்தில் இந்த நொடி வரை, இது பேசுப் பொருளாக மாற்றம் பெறவில்லை என பலரும் கருதுகிறார்கள்.
எனினும், பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் வெளியிட்ட கருத்து, ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தலாம் என்று அதிகம் பேசப்படுகின்றது.
2005ம் ஆண்டு ஆட்சி பீடம் ஏறிய மஹிந்த ராஜபக்ஷ, 2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக இல்லாதொழித்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷ, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரே விடுதலைப் புலிகளை முற்றாக அழித்தார்கள் என்பது, அவர்களது அரசியலில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது.
குறிப்பாக 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு, விடுதலைப் புலிகளின் பின்னடைவு பிரதான காரணமாக அமைந்திருந்தது.
அத்துடன், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக தெரிவாவதற்கும், விடுதலைப் புலிகளின் பின்னடைவு பிரதான காரணமாக அமைந்திருந்தது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டு வெடிப்பை அடுத்து, நாட்டின் மீண்டுமொரு பயங்கரவாதம் உருவெடுத்துள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டது.
விடுதலைப் புலிகளை அழித்தவர்கள், நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவார்கள் என பெரும்பான்மை சிங்கள மக்கள் ராஜபக்ஷ குடும்பத்தின் மீது நம்பிக்கை வைத்து, கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்திருந்தனர்.
எனினும், இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளதார நெருக்கடிக்கு ராஜபக்ஷ ஆட்சியே காரணம் என தெரிவித்து, கடந்த ஆண்டு பாரிய போராட்டங்களின் ஊடாக ராஜபக்ஷ ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர இலங்கை மக்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
ராஜபக்ஷ ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்ட போதிலும், ஓரிரு மாதங்களிலேயே ராஜபக்ஷ குடும்பத்தினர் தமது அரசியல் செயற்பாடுகளை மீள ஆரம்பித்தார்கள்.
இவ்வாறு தமது அரசியல் நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்து வரும் ராஜபக்ஷ குடும்பம், பழ.நெடுமாறனின் கருத்தை பயன்படுத்தி, மீண்டும் ஆட்சி பீடத்தை கைப்பற்றுமா என்ற கேள்வி பலரது மனங்களில் எழுந்துள்ளன.
பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு ராஜபக்ஷ குடும்பம் தமது அரசியல் ஸ்திரதன்மையை உறுதிப்படுத்தி, தமக்கான வாக்குவங்கியை அதிகரித்துக் கொள்வார்களா?
Post a Comment