நெருப்புடன் விளையாடும் ஜனாதிபதி
தேர்தல் ஆணைக்குழுவில் இருவர் மாத்திரமே தேர்தல் குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அடுத்த மூவர் கருத்து முரண்பாடு கொண்டுள்ளதாகவும் அதன்படி முறையாக தேர்தல் ஒன்று இதுவரை அறிவிக்கப்பட வில்லை என்றும் கூறியிருப்பது தனது ஜனநாயக விரோத நிலைப்பாட்டிற்காக சட்டத்தில் ஓட்டைகள் தேடுவதை பகிரங்கப்படுத்திய மற்றுமொரு செயலாகும்.
சுயாதீன தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதி பாராளுமன்றம் என்பவற்றின் அதிகார வரம்புகளுக்கு அப்பாற்பட்டது என்பதனால், அதன் மூன்று உறுப்பினர்களை அவர் ஏற்கனவே அழைத்து பேசியதை பாரதூரமான அரசியலமைப்பு மீறல் ஆகும்.
தேர்தல் ஆணைக்குழுவின் முடிவு ஏகமனதானது என உயர்நீதிமன்றிற்கு ஆணைக்குழுவினால் தெரிவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் சுயாதீன நீதித்துறையின் விவகாரமொன்றில் தான் பாராளுமன்றில் தீர்ப்புக் கூறுவது நிறைவேற்று அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் எதேச்சதிகாரமான செயற்பாடாகும்.
அதேவேளை, தேர்தல் பிரகடனப்படுத்தப்பட்டு ஜனாதிபதி தலைமை தாங்கும் ஐக்கிய தேசியக் கட்சி அவரது தலைமையிலான ஆளும் கட்சி என்பவை வேட்புமனுக்களை தாக்கல் செய்த பின் இவ்வாறு மக்களது சுயாதிபத்திய ஜனநாயக உரிமையை பாராளுமன்றத்தில் கேலி பண்ணுவது பாரதூரமான விடயமாகும்.
தனது பொறுப்பில் உள்ள நிதியமைச்சு ஏற்கனேவ தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட பத்து பில்லியன் நிதியில் தேர்தலுக்கு உடனடியாக தரப்படவேண்டிய நிதியை தர மறுப்பது ஒரு அரசியல் தலையீடு ஆகும், அரச நிதி பற்றிய தீர்வை, முன்னுரிமைகளை ஜனாதிபதியோ அமைச்சரவையோ அன்றி பாராளுமன்றமே எடுக்க வேண்டும் அதன்படியே வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகளும் மேற்கோள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் நிதியமைச்சின் செயலாளர், அரச அச்சக தலைவர், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள், பொலிஸ்மா அதிபர் என சகலரையும் ஜனாதிபதியே தவறாக வழிநடாத்துவதாக பகிரங்கமாக ஏனைய தரப்புக்கள் குற்றம் சாற்றுகின்றன.
நிறைவேற்று அதிகாரம், அரசியலமைப்பு, பாராளுமன்ற ஜனநாயகம், நீதித்துறை, காவல்துறை என்பவற்றை தனது தனிப்பட்ட அரசியல் மற்றும் தான் சார்ந்து நிற்கும் சர்ச்சைக்குரிய ஆளும் கட்சியின் நலன்களிற்காக இஷ்டப்படி எதேச்சாதிகாரமாக கையாள்வது பாரதூரமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
அரசியலமைப்பு உத்தரவாதப்படுத்தும் அடிப்படை ஜனநாயக உரிமைகள், அதன் கட்டமைப்புகள் மீதான மக்களின் நம்பிக்கை சிதைக்கப் படுவது நாட்டின் அமைதி சமாதானத்திற்கு பாரிய சவாலாகவே இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
அந்த வகையில் தன்னிடம் இடைக்காலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரங்களை ஜனநாயக வழிமுறைகளூடாக மக்களும், சர்வதேச சமூகமும் எதிர்பார்கின்ற மாற்றத்தை ஏற்படுத்த பயன்படுத்துவதன் மூலம் மாத்திரமே ஜனாதிபதியால் வரலாற்றில் இடம்பிடிக்க முடியும் என்பதனை எம்மால் கூற முடியும், தவறுகிற பட்சத்தில் ஒட்டுமொத்த தேசமும் அழிவின் விளிம்பிற்கே நகர்த்தப்படுவாகவே களநிலவரங்கள் உணர்த்துகின்றன!
இந்த நாட்டின் ஜனநாயக கட்டமைப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும், மக்களது சுயாதிபத்திய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், அரசியலமைப்பு பாதுகாக்கப் பட வேண்டும், அவற்றை செய்வதற்காகவே ஜனாதிபதி, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு படைகள், பொலிஸார், ஏனைய மக்கள் பிரதிநிதிகள், அரச நிர்வாகத் துறையினர் சத்தியப் பிரமாணம் செய்துள்ளனர்.
ஜனநாயக வரம்புகளை கட்டமைப்புகளை பலப்படுத்துவதன் மூலமே தீவிரவாதம், கிளர்ச்சிகள், வன்முறைகள், பயங்கரவாதம் என்பவற்றிற்கான சகல வாயல்களும் ஓட்டைகளும் மூடப்பட முடியும், அமைதியும் சமாதானமும் இல்லாது போனால் அரசியல் ஸ்திரத் தன்மை இல்லாது போகும், அரசியல் ஸ்திரத்தன்மை ஆட்டங் காணும் நாட்டில் பொருளாதார சபீட்சம் பூச்சியமாகி விடும்.
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
✍️ 24.02.2023
Post a Comment