Header Ads



நம்பிக்கையுடன் காத்திருக்கும் புஞ்சிஹேவா


உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தமது ஆணைக்குழுவால் கோரப்பட்ட நிதி ஒதுக்கீடு வழங்கப்படாமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவை நாளையதினம் (16) அழைப்பதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தீர்மானித்துள்ளது.


மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பை திட்டமிட்டவாறு எதிர்வரும் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடத்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.


தபால் வாக்குச்சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் மாத்திரம் தாமதமடையும் என்றும்  எதிர்வரும் சில நாட்களுக்குள் திட்டமிடப்பட்டபடி தபால் வாக்குச்சீட்டுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


தபால் வாக்குச்சீட்டுகள் விநியோகிக்கும் நடவடிக்கைகளை இன்றையதினம் (15) முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த போதும்  நிதி கிடைக்காமை காரணமாக தபால் வாக்குச்சீட்டுகளை விநியோகிப்பதில் தடைகள் ஏற்பட்டதாக அரசாங்க அச்சு திணைக்களம் தெரிவித்தது.


உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அரசாங்க அச்சகத்துடன் ஆணைக்குழு கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளது.


அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகள், ஏனைய ஆவணங்கள் மற்றும் தேர்தலை விரைவாக நடத்துவதற்குத் தேவையான பொருட்களை அரசாங்க அச்சுத் திணைக்களம் வெளியிடுவதன் முக்கியத்துவத்தை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.


தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடுவதற்கு தேவையான பணம் கிடைக்காமையால் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கால வரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது என்று செவ்வாய்க்கிழமை (14) ஆணைக்குழு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.