Header Ads



துருக்கி, சிரியா நிலநடுக்கம் - சர்வதேச உலமாக்களது ஒன்றியம் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை


துருக்கி மற்றும் சிரியாவில் இடம்பெற்றுள்ள புவிநடுக்கம் தொடர்பாக முஸ்லிம்களது அறிஞர்களுக்கான சர்வதேச ஒன்றியம் 

الاتحاد العالمي لعلماء المسلمين

International Union of Muslim Scholars

அறிக்கையொன்றை  வெளியிட்டிருக்கிறது அதன் சாராம்சம் வருமாறு:-


அஷ்ஷெய்க் பளீல் (நளீமி) 


நிலநடுக்கத்தில் ஷஹீதான மற்றும் கொல்லப்பட்ட அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன் காயப்பட்டவர்கள் மிக விரைவில் குணமடைய வேண்டும் என்றும் அவர்களது குடும்பத்தவர்களது உள்ளங்களை அல்லாஹுத்தஆலா பலப்படுத்த வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறோம்.


அதேவேளை பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை அனைவரும் செய்ய வேண்டும் என்றும் வேண்டிக்கின்றோம்.


மேலும் ஒன்றியம் இந்த நிகழ்வோடு தொடர்பாக பின்வரும் ஃபத்வாக்களையும் வழங்குகிறது:-


1. இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி இறப்போர் மிகப்பெரிய வலிகள், அதிர்ச்சிகள் என்பவற்றோடு  இறப்பதனால் அத்தகையோரை ஷஹீத்கள்(உயிர்த்தியாகிகள்)  என்று ஹதீஸ்கள் தெரிவித்துள்ளன. எனவே, இந்த அனர்த்தத்தில் உயிர் துறந்தவர்கள் தாம் இழைத்த பாவங்களின் காரணமாகவே அத்தகைய நிலைக்கு உள்ளானார்கள் என்று கூறுவது பொருத்தமல்ல. நாம் அவ்வாறு கூறினால் அவர்களுடைய உறவினர்களுக்கு அது மிகப்பெரும் கவலையை தரும். ஹதீஸ்களின் ஒளியில் நோக்கும் பொழுது இத்தகையவர்கள் ஷஹீதுகளுடைய அந்தஸ்த்தை அடைந்துள்ள நிலையில் அவர்கள் அல்லாஹ்வினால் பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள் என்று எப்படி எங்களுக்குக் கூற முடியும்? ஆனால்,இது போன்ற எதிர்பாராத அனர்த்தங்களின் போது பாவங்களில் இருந்து தவிர்ந்து கொள்ளும்படி மக்களுக்கு ஞாபகமூட்டுவதிலோ வாழ்க்கையில் எஞ்சியிருக்கும்  காலப் பிரிவை நற்கருமங்களில் கழிக்கும்படி வலியுறுத்துவதிலோ எந்தத் தவறும் இல்லை.


2. நிலநடுக்கத்தால் தமது சொத்துக்களை இழந்தவர்களுக்கு ஸகாத்தில் இருந்து கொடுக்க முடியும். ஏழைகள், கடன்காரர்கள், வழிப்போக்கர்கள் போன்றோர் ஸகாத்தை பெறும் தகுதியுடையவர்களாக இருப்பதனால் இவர்களும் அந்தக் கூட்டத்தாரில் அடங்குவர். ஆனால் இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிலருக்கு வேறு சில இடங்களில் சொத்துக்கள் இருக்கும் அல்லது வேறு வருமானங்கள் இருக்குமாயின் அவர்களுக்கு இந்த ஸகாத்தில் இருந்து பங்கு கொடுக்க முடியாது.


3. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஜும்ஆவை அல்லது ஜமாத் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். ஆனால்,அவற்றை நிறைவேற்றுவதில் அசௌகரியங்கள் இருந்தால் அவற்றை நிறைவேற்றாமல் இருக்கலாம்.


4. நிலநடுக்கத்தின் போது இறந்தவர்களுக்காக மறைவான ஜனாஸா தொழுகை நிறைவேற்றலாம் என ஷாபிஈ, ஹன்பலீ மத்ஹபுகளது புகஹாக்கள் கூறியிருப்பதனால் எதிர்வரும் ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் மறைவான ஜனாஸா தொழுகையை நிறைவேற்றும்படி ஒன்றியம் இமாம்களைக் கேட்டுக்கொள்கிறது. அவ்வாறு நிறைவேற்றுவதன் மூலமாக முஸ்லிம் சமூகம் என்பது  ஒரே உடலைப் போன்றது, நாம் அனைவரும் பாதிக்கப்பட்டவர்களுடன் இருக்கிறோம், நாம் ஒருமித்த சமூகம் என்ற கருத்தை வலியுறுத்த முடியும்.


5. இதுபோன்ற அனர்த்த சூழ்நிலைகளில் 'குனூதுன் நாஸிலா' எனப்படும் குனூத்தை நபியவர்கள் ஓதியிருக்கிறார்கள் என்ற காரணத்தால் தனிப்பட்ட அல்லது கூட்டு தொழுகைகளில் குனூத் ஓதிக் கொள்வது ஷரீஆவின் நடைமுறைகளில் ஒன்றாகும். எனவே, நிலநடுக்கத்தின் தாக்கங்கள் முடிந்து மக்களது வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பும் வரைக்கும் பள்ளிவாயல்களது இமாம்கள் குனூத்தை ஓதும்படி ஒன்றியம் கேட்டுக் கொள்கிறது. அல்குர்ஆனை மனனம் செய்த 'குர்ராக்கள்' எனப்படுவோர் கொல்லப்பட்ட பின்னர் நபியவர்கள் ஒரு மாதமாக குனூத் ஓதினார்கள்.


6. பொதுவாக இறந்தவர்களுடைய ஜனாஸாக்களை கழுவி, கபனிட்டு அடக்கம் செய்வது கடமையாக இருப்பினும் இது போன்ற பேரனர்த்தங்களின் பொழுது இறப்பவர்களது தொகை அதிகமாக இருப்பதனாலோ ஜனாஸாக்கள் பழுதடைந்த நிலையில் இருப்பதனாலோ கழுவுதல், கபனிடுதல் என்பன சிரமமாக இருப்பின் அவற்றைச் செய்யாமல் அவை வெளியே எடுக்கப்பட்டதன் பின்னர் சுற்றப்படும் உறைகளோடு அவற்றை அடக்கம் செய்யலாம்.


7. ஒவ்வொரு ஜனாஸாவும் தனித்தனியாகவே அடக்கப்பட வேண்டும் என்பது தான் அடிப்படையான கடமையாக இருப்பினும் இது போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் பலரும் 'வஃபாத்' ஆகுவதால் பல ஜனாஸாக்களை ஒன்று சேர்த்து கூட்டாக தொழுவித்து  கூட்டாகவே அடக்கம் செய்ய முடியும்.


8. ஒரு பொருளின்  சொந்தக்காரர் ஒரு வருட முடிவிலேயே அதற்கான ஸகாத்தை கொடுக்க வேண்டும் என்பதே அடிப்படையாகும். ஆனால், ஒரு வருடம் பூர்த்தியாக முன்னரே இது போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் முன்கூட்டியே ஸகாத்தை செலுத்த முடியும். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் பொருளுக்கு ஒரு வருடம் பூர்த்தியாக முன்னர் அதற்கான ஸகாத்தை கொடுக்க முடியுமா? என்று நபி அவர்களிடம் கேட்ட பொழுது நபியவர்கள் அனுமதி வழங்கியதை இதற்கு ஆதாரமாகக் கொள்ள முடியும். இந்த பேரனர்த்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு உடனடியாக ஸகாத் பணத்திலிருந்தும் அல்லது மேலதிகமாகவும் வழங்கி உதவி செய்ய வேண்டும் என்று ஒன்றியம் உலக வாழ் முஸ்லிம்களை கேட்டுக்கொள்கிறது.


9. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஸகாத்தை பணமாக கொடுப்பது போலவே பொருட்களாக கொடுப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும். தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் பணமாக கொடுப்பதை விடவும் ஆடைகள், உணவுகள் போன்றவற்றைக் கொள்வனவு செய்து கொடுப்பது பயன்மிக்கதாக அமையும்.


10. ஸகாத் வெளிநாடுகளில் அல்லது வேறு ஊர்களில் திரட்டப்பட்டு அது பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு முகவர்கள் ஊடாக அனுப்பப்படும் போது அது பொருத்தமானவர்களுக்கு போய் சேர வேண்டியதை ஸகாத் வழங்குபவர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், அவ்வாறு அனுப்பப்பட்ட ஸகாத் பொருத்தமற்றவர்களுடைய கைகளில் போய் சேர்ந்திருக்கிறது என்று பின்னர் தெரியவந்தால் அவர் ஸகாத் கடமையில் இருந்து நீங்கிவிட்டதன் காரணமாக அதற்காக அந்த ஸகாத்தை மீளவும் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது. 


https://www.iumsonline.org/ar/ContentDetails.aspx?ID=27986


அல்லாஹ் அனைவருக்கும் அருள்பாலிப்பானாக!

No comments

Powered by Blogger.