சொகுசு பஸ் லஞ்சம் - ஜனாதிபதியிடம் போட்டுக்கொடுத்த பறவைகள் பூங்கா தலைவர்
கண்டி, ஹந்தானையில் நிர்மாணிக்கப்பட்ட நாட்டின் முதலாவது புலம்பெயர் பறவைகள் பூங்கா மற்றும் சூழல் சுற்றுலா வலயத்தை இன்று (20) திறந்து வைக்கும் நிகழ்வில் புலம்பெயர்ந்த பறவைகள் பூங்கா மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா சபையின் தலைவர் நிஷாந்த கோட்டேகொட உரையாற்றுகையில்,
“இதில் வெளிநாட்டை பூர்வீகமாக கொண்ட பறவைகள், புலம்பெயர்ந்த பறவைகள் ஆகியவற்றைக் கொண்ட இந்த பூங்காவில் காயமடைந்த பறவைகளுக்கு சிகிச்சை அளித்து, விடுவிப்பதற்கான ஒரு பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு பறவைகளை இனப்பெருக்கம் செய்து ஏற்றுமதி செய்யும் பிரிவும் இங்கு பராமரிக்கப்படுகிறது. இந்த இடத்தில் பாடசாலை மாணவர்களுக்கான கல்வி மற்றும் பொழுதுபோக்கு மையம் மற்றும் இயற்கை பறவைகள் ஆய்வு கூடம் என்பனவும் உள்ளன.
பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் இந்த ஆண்டு இதன் முதல் கட்டத்தை நிறைவு செய்ய முடிந்துள்ளது. இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக கொழும்பிற்கும் கண்டிக்கும் இடையில் இயங்கக்கூடிய அதி சொகுசு பஸ் ஒன்றை லஞ்சமாக அரசாங்க அதிகாரிகள் கேட்டனர். அதனை வழங்க முடியாததால், பல ஆண்டுகளுக்கு முன்பே இத்திட்டத்தை நிறுத்த நேரிட்டது. எப்படியோ தற்பொழுது இதன் முதல்கட்டத்தை திறக்க முடிந்துள்ளது.” என்று தெரிவித்தார்.
ஹந்தானை தேயிலை அருங்காட்சியக வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த 27 ஏக்கர் பரப்பிலான, சர்வதேச பறவை பூங்கா மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா வலயம், நூற்றுக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த பறவைகளின் இருப்பிடமாக உள்ளது.
490 மில்லியன் ரூபா செலவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இப்பறவை பூங்காவில் வெளிநாட்டுப் பறவைகள் பெரிய கூடுகளில் பராமரிக்கப்படுவதோ, அவற்றைப் பராமரிப்பதற்கு சுமார் நூறு பணியாளர்களும் உள்ளனர்.
40 வருடகால "இலங்கையை பூர்வீகமாகக் கொண்டிராத பறவைகள் பற்றிய ஆய்வின்" அடிப்படையில் இந்த பூங்கா நிறுவப்பட்டுள்ளது. பல வெளிநாட்டுப் பறவைகள் இலங்கையில் இனப்பெருக்கம் செய்ய முடிந்திருப்பது விசேட அம்சமாகும். முதற்கட்டமாக, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புலம்பெயர்ந்த பறவைகளைப் பார்ப்பதற்கான வசதிகள், விலங்கியல் மாணவர்களுக்கான கல்விப் பயிற்சி மையம், பறவைகள் சரணாலயம், பறவைகள் இல்லம் மற்றும் தனிமைப்படுத்தல் பிரிவு என்பன ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்த, அனுராத ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் நாலக கோட்டேகொட, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
20-02-2023
Post a Comment