Header Ads



மன்சூரின் பெயரை நூலகத்திற்கு சூட்டுவதை தமிழ் தரப்பு எதிர்ப்பதன் பின்னணி என்ன..?


இன, மத பேதமின்றி தமிழ் மக்களுக்கும் அருந்தொண்டாற்றிய முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் பெயரை கல்முனை பொது நூலகத்திற்கு சூட்டுவதை கல்முனை மாநகர சபையின் தமிழ் உறுப்பினர்கள் சிலர் இன ரீதியாக சிந்தித்து, எதிர்ப்பதானது மிகவும் கவலையளிக்குரிய விடயமாகும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும் முன்னாள் வடக்கு, கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.அப்துல் மஜீட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது;


1977ஆம் ஆண்டு முதன்முறையாக கல்முனைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட ஏ.ஆர்.மன்சூர் அவர்கள், 1994 ஆம் ஆண்டு வரை சுமார் 17 வருட காலம் அரசியல் அதிகாரத்தின் ஊடாக இனப்பாகுபாடின்றி மூவின மக்களுக்கும் சேவையாற்றியுள்ளார்.


இக்காலப் பகுதியில் மாவட்ட அமைச்சராகவும் பின்னர் அமைச்சரவை அமைச்சராகவும் இருந்து கல்முனைத் தொகுதிக்கு மட்டுமல்லாமல் முழு நாட்டிற்கும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய ஓர் அரசியல் தலைவராக அவர் போற்றப்படுகிறார்.


குறிப்பாக கல்முனைத் தொகுதியில் அவரால் மேற்கொள்ளப்பட்ட பெளதீக வள, உட்கட்டமைப்பு அபிவிருத்திகளாயினும் பாடசாலைகளின் அபிவிருத்திகளாயினும் இன, மத, பிரதேச பேதமின்றி மிகவும் நேர்மையுடன் முன்னெடுத்திருந்தார்.


அவ்வாறே அரச தொழில் வாய்ப்புகள் வழங்குவதிலும் இன, மத பேதமின்றியே

அவர் செயற்பட்டிருந்தார்.


கல்முனைத் தொகுதி வாழ் முஸ்லிம்களையும் தமிழர்களையும் தனது இரு கண்கள் போன்றே அவர் பரிபாலித்தார். முஸ்லிம்களை விட எந்த வகையிலும் குறைவில்லாத சேவைகளை தமிழ் பிரதேசங்களுக்கும் தமிழர்களுக்கும் சிறப்பாக நிறைவேற்றியிருந்தார்.


1977ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாண மாவட்ட அமைச்சராகவும் 1979ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டம் உருவாக்கப்பட்டது முதல் அம்மாவட்டத்திற்கான அமைச்சராகவும் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவினால் நியமனம் செய்யப்பட்டிருந்த ஏ.ஆர்.மன்சூர், யுத்த மேகம் கருக்கட்டியிருந்த சவால் நிறைந்த காலப்பகுதியில் இவ்விரு மாவாட்டங்களிலும் தமிழ் மக்களுக்கு அரும்பணியாற்றியிருக்கிறார் என்பது வரலாறாகும்.


இத்தகைய பின்னணியில்தான் ஏ.ஆர்.மன்சூர் அவர்கள்- தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இரண்டும் ஒன்றித்து வாழ்கின்ற கல்முனை நகரில் அப்போதைய வெளிவிவகார அமைச்சரான ஏ.சி.எஸ்.ஹமீதின் அனுசரணையுடன் மிகப் பெறுமதியான பொது நூலகம் ஒன்றை நிறுவி, இரு சமூகங்களினதும் கல்வி மற்றும் அறிவு விருத்திக்கு வித்திட்டிருந்தார்.


அவர் நினைத்திருந்தால், அந்த நூலகத்தை முஸ்லிம்கள் 100 வீதம் செறிந்து வாழ்கின்ற கல்முனைக்குடியில் அமைத்திருக்க முடியும். ஆனால் அவ்வாறான இனக் குரோத சிந்தனை அவரிடம் இருக்கவில்லை. தனது கறைபடியாத அரசியலில் இரு சமூகங்களையும் சரிசமமாகவே மதித்து செயலாற்றியிருந்தார்.


இவ்வாறான ஒரு மகானின் பெயரை அவரால் கொண்டு வரப்பட்ட நூலகத்திற்கு சூட்டுவதை கல்முனை மாநகர சபையின் சில தமிழ் உறுப்பினர்கள் எதிர்த்து, அவ்விவகாரத்தை சர்ச்சையாக்கி, இன முரண்பாட்டுக்கு தூபமிட முயற்சிப்பதானது மிகவும் கவலையளிக்கிறது. முஸ்லிம் விரோத அரசியல் சகுனிகளின் இத்தகைய எதிர்ப்பை நல்லுள்ளம் கொண்ட தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.


ஏ.ஆர்.மன்சூர் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி என்ற போதிலும் அவர் கல்முனைத் தொகுதி வாழ் தமிழ் சமூகத்திற்கும் நேர்மையுடன் தலைமைத்துவம் வழங்கியிருந்தார் என்பதை பெருமையுடன் பறைசாற்றுகின்ற இவ்வுறுப்பினர்கள், அரசியல் நோக்கத்திற்காக நியாயமற்ற முறையில் அவரது பெயர் சூட்டலுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதானது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.


தமிழ், முஸ்லிம் ஒற்றுமையை விரும்பாத சக்திகள் எவையும் இதன் பின்னணியில் செயற்படுகின்றனவா என்றும் சந்தேகிக்க வேண்டியுள்ளது.


இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு, வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் தாயகத்தில் சுயாட்சி போன்ற விடயங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் பரஸ்பரம் புரிந்துணர்வுடன் பயணித்து வருகின்ற சூழ்நிலையில், முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சி நிர்வாகத்தின் கீழுள்ள கல்முனை மாநகர சபையில் தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலரே ஏ.ஆர்.மன்சூரின் பெயர் சூட்டல் விவகாரத்தை வரிந்து கட்டிக்கொண்டு சர்ச்சையாக மாற்றியிருப்பதென்பது இரு சமூகங்களினதும் சார்பான கட்சிகளின் புரிந்துணர்வு செயற்பாடுகளை மழுங்கடித்து விடும் என்பதை சம்மந்தப்பட்டோர் புரிந்து கொள்ள வேண்டும் ஆணித்தரமாக கூறிவைக்க விரும்புகின்றேன்.


தமிழ், முஸ்லிம் ஒற்றுமை பலப்படுத்தப்பட வேண்டிய கால சூழலில் இவ்வாறான பிற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் தமிழ் சமூகத்தில் இருக்கின்றபோது முஸ்லிம்கள் எவ்வாறு வடக்கு, கிழக்கு தமிழ் தேசிய அரசியலை நம்பி, ஒன்றித்து பயணிக்க முடியும் என்ற கேள்வி எழுப்பப்படுவது நியாயமானதே- என்று மு.கா. தவிசாளர் அப்துல் மஜீட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.