எம்பாப்பே, பென்சமாவை வீழ்த்திய மெஸ்ஸி - நாக்கை பிடித்து தூக்கிச் சென்றவருக்கும் விருது, சிறந்த வீரர்களில் ஹக்கிமி
ஆண்கள் பிரிவில் சிறந்த கால்பந்து வீரர், சிறந்த கோல் கீப்பர், சிறந்த பயிற்சியாளர் விருதுகளை கால்பந்து உலககோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி வீரர்கள் வென்றுள்ளனர்.
2022-ம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரருக்கான விருதுக்கு அர்ஜெண்டினா மற்றும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் முன்கள வீரரான லியோனெல் மெஸ்ஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த வீரருக்கான போட்டியில் ஃபிரெஞ்சு முன்கள் வீரர்களான கிலியன் எம்பாப்பே, கரீம் பென்சமாவை தோற்கடித்து இந்த விருதை 35 வயதான மெஸ்ஸி பெற்றுள்ளார்.
கத்தாரில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் அர்ஜென்டினாவை வழிநடத்திய மெஸ்ஸி, 2021-22ஆம் ஆண்டில் கிளப் மற்றும் தேசிய அணிக்காக ஆடிய 49 ஆட்டங்களில் 27 கோல்களை அடித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணிக்காக 7 கோல்களை அடித்து அந்த அணி வெற்றி பெற முக்கிய காரணமாக மெஸ்ஸி திகழ்ந்தார்.
மெஸ்ஸியிடம் சிறந்த வீரருக்கான போட்டியில் தோற்ற எம்பாப்பே கடந்த ஆண்டு கிளப் மற்றும் தேசிய அணிக்காக 56 போட்டிகளில் விளையாடி 56 கோல்களை அடித்துள்ளார்.
இரண்டாவது முறையாக இந்த விருதை வென்ற மெஸ்ஸி கூறுகையில், "இது அருமையாக உள்ளது. எனக்கு இது மகத்தான ஆண்டு, இந்த விருதை வென்றது எனக்கு கிடைத்த கௌரவம். எனது அணி வீரர்கள் இல்லாமல் நான் இங்கே வந்திருக்க மாட்டேன்.
"நீண்ட நாட்களாக எதிர்பார்த்த கனவை நிறைவேற்றியுள்ளேன். மிகச் சிலரால் மட்டுமே சாதிக்க முடிந்த ஒன்றை அடைந்திருப்பதால் நான் அதிர்ஷ்டசாலி" என்று கூறினார்.
ஃபிஃபா சிறந்த வீரருக்கான விருதை இரண்டு முறை வென்றுள்ளவர்களின் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ராபர்ட் லுவான்டோஸ்கி ஆகியோருக்கு பிறகு மெஸ்ஸியும் இணைந்துள்ளார்.
சிறந்த வீராங்கனையாக ஸ்பெயின் மற்றும் பார்சிலோனா அணியின் நடுகள ஆட்டக்காரரான அலெக்சியா புட்டெல்லாஸ் தேர்வு செய்யப்பட்டார்.
பாரிஸில் நடந்த விழாவில், அர்ஜென்டினாவை மூன்றாவது உலகக் கோப்பை பட்டத்திற்கு வழிநடத்திய லியோனெல் ஸ்கலோனி 2022ஆம் ஆண்டின் சிறந்த ஆண்கள் அணியின் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மான்செஸ்டர் சிட்டியை ஆறாவது பிரீமியர் லீக் பட்டத்திற்கு வழி நடத்திய பெப் கார்டியோலா மற்றும் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்ற ரியல் மாட்ரிட்டின் பயிற்சியாளர் கார்லோ அன்செலோடி ஆகியோரை தோற்கடித்து இந்த விருதை வென்றுள்ளார் ஸ்கலோனி.
கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிக்கு வழிவகுத்த இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் சரினா வீக்மேன் இந்த ஆண்டின் சிறந்த மகளிர் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார்.
ஆண்கள் பிரிவில் சிறந்த கோல்கீப்பராக ஆஸ்டன் வில்லா, அர்ஜென்டினா தேசிய அணியின் எமிலியானோ மார்ட்டினெஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
30 வயதான மார்ட்டினெஸ், உலககோப்பை இறுதிப் போட்டியில் பிரான்சுக்கு எதிரான பெனால்டி ஷூட் அவுட் வெற்றி உட்பட நான்கு பெனால்டிகளை தடுத்து, அர்ஜென்டினா உலகக் கோப்பையை வெல்ல உதவினார்.
பெண்கள் பிரிவில் இங்கிலாந்தின் மேரி எர்ப்ஸ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த ஆண்டின் சிறந்த கோலுக்கான 'ஃபிஃபா புஸ்காஸ் விருதை' போலந்து நாட்டைச் சேர்ந்த மார்சின் ஒலெக்சி வென்றார். இவர் தனது ஊன்றுகோல்களின் உதவியுடன் அடித்த வாலி ஷாட்டிற்காக(தலைக்கு மேல் வரும் பந்தை காற்றில் பறந்தவாறு ஒருகாலால் அடிக்கும் ஷாட்) இந்த விருதை அவர் வென்றுள்ளார்.
ஃபேர் பிளே விருதை லூகா லோகோஷ்விலி வென்றுள்ளார். ஆட்டத்தின் நடுவே தனது நாக்கை கடித்த நிலையில் மயக்கமடைந்த நடுகள வீரரின் நாக்கை பிடித்துக் கொண்டே அவரை தூக்கி செல்ல உதவியதற்காக இந்த விருதை அவர் வென்றுள்ளார்.
மறைந்த பிரேசில் கால்பந்து வீரரான பீலேவுக்கு சிறப்பு விருது ஒன்றும் வழங்கப்பட்டது. இதை அவரின் மனைவி பெற்றுக் கொண்டார்.
ஃபிஃபா வழங்கும் இந்த விருதை உலகம் முழுவதும் உள்ள தேசிய கால்பந்து அணியின் கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்கள் வாக்களித்து தேர்வு செய்கின்றனர். இது மட்டுமின்றி சிறந்த விளையாட்டு பத்திரிகையாளர்களும் இந்த விருதுக்கு வாக்களிக்கின்றனர்.
விருது மட்டுமின்றி சிறந்த 11 வீரர்களை உள்ளடக்கி Fifpro அணியையும் ஃபிஃபா அறிவித்துள்ளது.
இதில் மெஸ்ஸி, எம்பாப்பே உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
கோல் கீப்பர் - திபோட் கோர்டியஸ்(பெல்ஜியம்)
தடுப்பாட்டம்(Defence) - அச்ரஃப் ஹக்கிமி(மொராக்கோ)
தடுப்பாட்டம் - விர்ஜில் வான் டிக்(நெதர்லாந்து)
தடுப்பாட்டம் - ஜோவோ கேன்சலோ(போர்ச்சுகல்)
நடுகளம்(Midfielder) - கெவின் டி பிரையன்(பெல்ஜியம்)
நடுகளம் - ஹென்ரிக் கேஸ்மிரோ(பிரேசில்)
நடுகளம் - லூகா மோட்ரிச்(குரோஷியா)
முன்களம்(Attacking) - லியோனெல் மெஸ்ஸி(அர்ஜென்டினா)
முன்களம் - கரீம் பென்சமா(ஃபிரான்ஸ்)
முன்களம் - எர்லிங் ஹாலாண்ட்(நார்வே)
முன்களம் - கிலியன் எம்பாப்பே(ஃபிரான்ஸ்)
விருதாளர்களின் பட்டியல்
கால்பந்து, மெஸ்ஸி, எம்பாப்பே
பட மூலாதாரம்,GETTY IMAGES
சிறந்த வீரர் - லியோனெல் மெஸ்ஸி
சிறந்த வீராங்கனை - அலெக்சியா புட்டெல்லாஸ்
சிறந்த கோல்கீப்பர்(ஆண்) - எமிலியானோ மார்ட்டினெஸ்
சிறந்த கோல்கீப்பர்(பெண்) - மேரி எர்ப்ஸ்
சிறந்த பயிற்சியாளர்(ஆண்) - லியோனெல் ஸ்கலோனி
சிறந்த பயிற்சியாளர்(பெண்) - சரினா வீக்மேன்
புஸ்காஸ் விருது - மார்சின் ஒலெக்சி
சிறந்த ரசிகர்கள் - அர்ஜென்டினா ரசிகர்கள்
ஃபேர் பிளே விருது - லூகா லோகோஷ்விலி BBC
Post a Comment