விஜயதாச அவர்களே, உங்கள் ஆதரவு எமக்கு அவசரமாகத் தேவை
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நாட்டில் இயங்கிவரும் 65 காதிநீதி நிர்வாகப் பிரிவுகளுக்கு நிரந்தர காதி நீதிபதிகள் நியமிக்கப்படாததால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டியுள்ள காதி நீதிவான்கள் போரம்,இவ்விடயத்தில் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவைக் கோரியுள்ளது.
அத்தோடு வெற்றிடமாக உள்ள குறிப்பிட்ட 21 காதிநீதி நிர்வாகப் பிரிவுகளுக்கு பதில் காதிநீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள காதிநீதிபதிகள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்வற்கு நீண்ட நேரத்தையும், போக்குவரத்து கட்டணத்தையும் செலவிட வேண்டியுள்ளதால் அவர்களும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் காதிநீதிவான்கள் போரத்தின் உபதலைவர் எப்.இப்ஹாம் யெஹ்யா நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு காதிநீதவான்கள் போரத்தின் உபதலைவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
64 காதி நீதிபதி பிரிவுகளுக்கு புதிய நியமனங்களை வழங்குவதற்காக 2022 டிசம்பர் மாதம் நேர்முகப் பரீட்சை நடாத்தப்பட்டும் இதுவரை நியமனங்கள் வழங்கப்படவில்லை. அனைத்து காதிநீதிபதிகளின் பதவிக்காலம் இம்மாதம் பெப்ரவரியுடன் காலவதியாகவுள்ளது.
21 காதிநீதிபதிகள் பதவியிலிருந்து நீக்கப்பட்டதால் அல்லது இராஜினாமா செய்ததால் அவ்விடங்களுக்கு புதிய நியமனங்கள் வழங்கப்படவில்லை. இப்பிரிவுகளுக்கு அருகிலுள்ள காதிநீதிபதிகளே பதில் காதிநீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தங்கள் பகுதிகளிலிருந்தே பதில் கடமையாற்றுகிறார்கள். இதனால் பொதுமக்கள் அவ்விடங்களுக்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
உதாரணமாக நாவலப்பிட்டி காதிநீதிவான் கம்பளை மற்றும் ஹட்டன் பிரிவுகளுக்கு பதில் காதிநீதிவானாக நியமிக்கப்பட்டுள்ளார். பதில் காதிநீதிவானாக கடமையாற்றும் காதிகளுக்கு கொடுப்பனவாக மாதம் 3750 ரூபாவே வழங்கப்படுகிறது.
தற்போது காதிநீதிபதிகளுக்கு கொடுப்பனவாக மாதம் 7500 ரூபாவும் தபால் மற்றும் செயலக பணிகளுக்காக 6250 ரூபாவுமே வழங்கப்படுகிறது. இந்தக் கொடுப்பனவு போதுமானதா? என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.
காதிநீதிபதிகளின் சேவை மக்களுக்கு சிறந்த சேவையாக இருக்க உங்கள் ஆதரவும் வழிகாட்டுதலும் எமக்கு அவசரமாகத் தேவை.
காதிகளின் தரம் ஊதியம் என்பனவற்றை உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக்கொள்கிறோம். எமது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறும் வேண்டுகிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli
மிக்க நன்றி சார் , உங்கள் முயசிக்கும் , ஆரவாத்துக்கும் எம் சமூகம் சார்பாக மீண்டும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்
ReplyDelete