ஜப்பானில் கரையொதுங்கிய ராட்சத உலோக உருண்டை - உறைய வைத்த பயம்
ஜப்பானின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான ஹமாமட்சுவில் உள்ள என்ஷு கடற்கரையில் ராட்சத அளவிலான ஒரு மர்ம உலோக உருண்டை ஒன்று கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் அது வெடிக்கக் கூடிய பொருள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
சீனா, வடகொரியாவின் உளவு நடவடிக்கை காரணமாக இந்த உலோக உருண்டை அனுப்பப்பட்டிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்த நிலையில், அதுகுறித்து எந்த அறிகுறிகளும் அதில் இல்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த மர்ம உருண்டையானது உண்மையில் என்ன, எங்கிருந்து வந்தது என எந்தத் தகவலும் தற்போது வரை அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை.
தங்கள் நாட்டின் வான்வெளியில் பறக்கும் பொருட்களை அனுப்புவதை நிறுத்துமாறு உளவு பயம் காரணமாக ஜப்பான் சீனாவை கேட்டுக் கொண்டிருந்த நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே அண்மையில் ஜப்பானின் கியோட்டோவிற்கு அருகில் உள்ள தீவான ஹோன்ஷுவில் ஆயிரக்கணக்கான காகங்கள் ஒரே இடத்தில் குவியும் காட்சிகள் இணையத்தில் வைரலாகப் பரவியது குறிப்பிடத்தக்கது.
Post a Comment