தமிழரசு கட்சி, முஸ்லிம் காங்கிரசுடன் செய்த ஒப்பந்தத்தை மறுக்கிறார் யோகேஸ்வரன்
நேற்றைய தினம் (22.02.2023) மட்டு.ஊடக அமையத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன் ஆகியோர் ஊடக சந்திப்புகளை நடத்தியுள்ளனர்.
இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்
வடகிழக்கில் தமிழரசுக்கட்சியானது உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றது. இதேநிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துறை பிரதேச சபைக்காகத் தேர்தலிலும் தமிழரசுக்கட்சி வேட்புமனு தாக்கல் செய்திருந்தது. அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் சென்றும் அதுவும் நிராகரிக்கப்பட்டதால் எமது பிரதிநிதிகள் மிகவும் கவலையடைந்தனர். அந்த பிரதேசத்தில் உள்ள ஹிஜிறா நகர் என்ற கிராமத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது.
ஒரு கிராமத்திற்குள்ளேயே முழு வேட்பாளர்களையும் நிறுத்தியிருந்தது. அப்பகுதியில் ஹிஜிறா நகர் தவிர்ந்த அனைத்து பகுதிகளிலும் எமது தமிழரசுக்கட்சி வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இங்கு ஊடகங்களில் காட்டப்படுவதுபோன்று ஒப்பந்தங்கள் எவையும் செய்யப்படவில்லை. சில பிரதேச சபைகள் மற்றும் கிழக்கு மாகாணசபை தொடர்பில் ஒப்பந்தங்கள் ஹக்கீமிடம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் எந்த ஒப்பந்தங்களும் செய்யப்படவில்லை.
இலங்கை தமிழரசுக் கட்சியை கிழக்கில் ஓரங்கட்ட வேண்டும் என்பதற்காக இதரக் கட்சிகள் பல முனைப்புடன் செயற்படுகின்றன.
சில சம்பவங்களைப் பெரிதுபடுத்தி ஊடகங்களில் வெளியிடும் சம்பவங்கள் மலிந்து விட்டன. உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தமிழரசுக்கட்சியின் வாக்கினை இல்லாமல் செய்யவேண்டும் என்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்திற்கோ, மட்டக்களப்பு மாவட்டத்திற்கோ பாதகமான செயற்பாடுகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். அதில் நாங்கள் தெளிவாகவிருக்கின்றோம். தமிழரசுக்கட்சியின் யாப்பில் முஸ்லிம்கள் தொடர்பிலும் உள்ளதாகச் சிலர் இன்றும் கூறிவருவருகின்றனர்.
1949ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது யாப்பு வரையப்பட்ட நிலையில் அக்காலத்தில் முஸ்லிம்களுக்கென்று கட்சியிருக்கவில்லை. முஸ்லிம்கள் இலங்கை தமிழரசுக்கட்சியுடனும் அரசாங்கத்துடனுமே இணைந்திருந்தனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் ஸ்தாபக தலைவர் அஸ்ரப்பும் இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினராக இருந்தவர்.
ஆனால் தற்போது முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பல கட்சிகள் இருக்கின்றன. தற்போது தமிழரசுக் கட்சியில் தமிழ் வேட்பாளர்களையே நாங்கள் இறக்கியுள்ளோம். இலங்கை தமிழரசுக்கட்சியை பொறுத்த வரையில் இன நல்லிணக்கத்தினை எதிர்பார்க்கின்றது.
ஆனாலும், தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதில் மிகவும் உறுதியாகவிருக்கின்றது. நாங்கள் எந்த விட்டுக்கொடுப்புக்கும் தயாரில்லை. தமிழ் மக்கள் பாரியைத் தியாகங்களைச் செய்தவர்கள். அவர்களின் தனித்துவம் தொடர்பில் நாங்கள் உறுதியாகயிருப்போம். ஆளுந்தரப்பாகயிருக்கலாம், எங்களது எதிர்க்கட்சிகளாகவிருக்கலாம் அவர்களுக்கு ஏற்றமாதிரி எதிரான பிரச்சாரங்களைச் செய்யலாம்.அவர்கள் கூறுவது பொய்யான விடயமாகும்.
19.02.2023 அன்று ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக ரவூப் ஹக்கிமின் பேஸ்புக்கிலும், மு.கா. பேஸ்புக்கிலும் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,
Post a Comment