Header Ads



ஷாமீயா பேகத்தின் குடியுரிமை பறிப்பு செல்லும் - கோர்ட்டு தீர்ப்பளித்தது


ஷாமீயா பேகம் தனது 15வது வயதில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தார். லண்டன், வங்காளதேசத்தை பூர்வீகமாக கொண்டு இங்கிலாந்தில் வாழ்ந்து வந்த தம்பதிக்கு பிறந்தவர் ஷாமீயா பேகம். இவர் 2015-ம் ஆண்டு தனது 15வது வயதில் இங்கிலாந்தில் இருந்து வெளியேறி சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தார். அங்கு ஷாமீயா பேகம் பயங்கரவாதிகளால் பாலியல் அடிமையாக நடத்தப்பட்டார். 

 

 சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு வீழ்ச்சியடைந்ததையடுத்து ஷாமீயா பேகம் சிரியா பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் வந்தார். அவர் தற்போது சிரியாவில் உள்ள அகதிகள் முகாமில் உள்ளார். 


இதனிடையே, ஷாமீயா பேகம் தனது 15வது வயதில் இங்கிலாந்தில் இருந்து வெளியேறி சிரியாவின் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்ததால் ஷாமீயாவின் குடியுரிமையை 2019-ம் ஆண்டு இங்கிலாந்து பறிமுதல் செய்தது. மேலும், அவர் இங்கிலாந்திற்குள் நுழையவும் தடை விதித்தது. தற்போது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு வீழ்ச்சியால் சிரியா அகதிகள் முகாமில் உள்ள ஷாமீயா மீண்டும் இங்கிலாந்திற்குள் நுழைய அனுமதிக்கும்படி இங்கிலாந்து அரசிடம் முறையீடு செய்தார். ஆனால், பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்ததால் குடியுரிமை ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும், தங்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதியில்லை என்றும் ஷாமீயாவுக்கு இங்கிலாந்து அரசு உத்தரவு பிறப்பித்தது.


இதனை தொடர்ந்து குடியுரிமை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ஷாமீயா இங்கிலாந்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பல முறை ஷாமீயாவின் குடியுரிமை ரத்து செல்லும் என்று கோர்ட்டு தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்து வருகிறார். 


அந்த வகையில், இங்கிலாந்து கோர்ட்டு சிறப்பு தீர்ப்பாயத்தில் தனது இங்கிலாந்து குடியுரிமையை மீண்டும் வழங்கும்படியும், இங்கிலாந்திற்குள் நுழைய அனுமதிக்கும்படியும் ஷாமீயா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், ஷாமீயா பேகத்தின் இங்கிலாந்து குடியுரிமை ரத்து செய்யப்பட்டது செல்லும் என்று அதிரடி தீர்ப்பளித்தது. மேலும், அவர் இங்கிலாந்திற்குள் நுழைய விதிக்கப்பட்ட தடையும் செல்லும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவு சிரியா அகதிகள் முகாமில் உள்ள ஷாமீயா பேகத்திற்கு மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஷாமீயா பேகம் தரப்பினர் மேல் முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments

Powered by Blogger.