"மேலும் பாவியாக மாட்டேன்" என இளைஞன் கூறிய வார்த்தையும், அல்குர்ஆனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முதல் முஸ்லிமும்
- Sirajul Hasan -
பிரிட்டிஷ் அரசு 1914 ஆண்டுவாக்கில் உலகின் பெரும் வல்லரசாய்த் திகழ்ந்தது.
மத்திய கிழக்கிலுள்ள நாட்டில், பிரிட்டிஷ் தூதரகத்தின் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார் மர்மடியூக் பிக்தால் என்பவர்.
ஒருநாள் அவர் தம் வீட்டு மாடியில் உட்கார்ந்துகொண்டிருந்த போது, கீழே தெருவில் ஒரு விந்தையான காட்சியைக் கண்டார்.
நல்ல உடற்கட்டும் உறுதியும் உள்ள ஓர் இளைஞனை ஒரு கிழவர் திட்டிக்கொண்டும் அடித்துக்கொண்டும் இருந்தார்.
கிழவரின் அத்தனை அடிகளையும் தாங்கிக்கொண்டு அமைதியாகச் சிலைபோல் நின்றிருந்தான் அந்த இளைஞன்.
இதைப் பார்த்த பிக்தாலுக்கு வியப்பு எல்லையைக் கடந்தது.
அவர் மாடியிலிருந்து இறங்கி வந்து இளைஞனையும் முதியவரையும் அழைத்து விசாரித்தார்.
அடிபட்ட போதெல்லாம் வாயே திறக்காத அந்த ஆடு மேய்க்கும் இளைஞன் இப்போது பேசினான்.
‘‘ஐயா, நான் இந்தப் பெரியவரிடம் கொஞ்சம் பணம் கடன் வாங்கியிருந்தேன்.
தவணைக் காலம் முடிந்த பிறகும்கூட என்னால் அதைத் திருப்பித் தர இயலவில்லை.
அதனால்தான் பெரியவருக்குக் கோபம் வந்து என்னை அடிக்கிறார்.’’
ஆடு மேய்க்கும் இளைஞனின் குரலில் இருந்த அமைதியும், அடக்கமும் பிக்தாலைக் கவர்ந்தன.
‘‘வாங்கின கடனைத் திருப்பித் தரவேண்டும் என்ற எண்ணம் உனக்கு உள்ளது.
"இன்றில்லாவிட்டாலும் நாளை கொடுக்கத்தான் போகிறாய்.
"அதற்காக இத்தனை அடிகளைத் தாங்க வேண்டுமா?
"அந்த முரட்டுக் கிழவரைத் தடுத்து நிறுத்தி நீயும் இரண்டு அடி கொடுத்திருக்க வேண்டியதுதானே?’’
பிக்தால் இப்படிக் கூறியதும் இளைஞன் துடித்துப் போய்விட்டான்.
‘‘அப்படிச் சொல்லாதீர்கள் ஐயா.
‘கடன் தொகையை அதற்குரிய காலத்தில் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்’’ என்பது எங்களின் அருமைத் தலைவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் போதனையாகும்.
"அதில் நான் தவறிவிட்டதே பெரிய பாவமாகும்.
"இப்பெரியவரைத் தடுத்து நிறுத்தி, அவரைத் திருப்பி அடிப்பதன் மூலம் நான் மேலும் பாவியாக வேண்டுமா?’’
இளைஞனின் பதில் பிக்தாலைத் திகைப்படையச் செய்தது.
அவருடைய சிந்தனை சுழன்றது.
‘நபிகள் நாயகம் 1400 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னதை இன்றும் கூட ஒருவன் பின்பற்றுகிறான் என்றால்… அதுவும் கல்வியறிவு இல்லாத ஆடு மேய்க்கும் இளைஞன்கூட இவ்வளவு உறுதியாகப் பின்பற்றுகிறான் என்றால் அந்த போதனைகளின் மகத்தான சக்தியை என்னவென்று சொல்வது!’
பிரமித்து நின்றார் பிக்தால்.
அதற்குப் பிறகு இவர் இஸ்லாமியத் திருநெறியை ஆராய்ந்து ஏற்றுக் கொண்டார்.
அரபு மொழியைக் கசடறக் கற்றார்.
‘திருக்குர்ஆனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முதல் முஸ்லிம்’ எனும் பெயரையும் தட்டிச் சென்றார்.
- சிராஜுல் ஹஸன்
Post a Comment