Header Ads



சர்வதேசத்துக்கு ஒரு முகத்தை காட்டும் ரணில், மறுபுறம் பிக்குகளையும் இனவாதிகளையும் தூண்டிவிடுகிறாார்


சமஷ்டி அடிப்படையில் தீர்வொன்று வழங்கப்படாவிடின் நாடு மீண்டுமொரு இருண்ட யுகத்தை நோக்கி செல்வதை எவராலும் தடுக்கமுடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தமிழர்களுக்கு ஒன்றையாட்சிக்குள் தான் தீர்வு என்று மீண்டும் மீண்டும் கூறினால் இலங்கையினால் ஒருகாலமும் மீண்டெழ முடியாது.


எனவே, உலகிலுள்ள ஏனைய நாடுகளை போல சமஷ்டி அடிப்படையில் ஒரு தீர்வை முன்வைப்பதன் மூலமே நாட்டில் நீதியை, அமைதியை கொண்டுவர முடியும். சிங்களவர்களும், தமிழர்களும் இலங்கையின் இரண்டு தேசிய இனங்களாக இணைந்து வாழக்கூடிய ஒரு அரசியல் உரிமையையே கோருகிறோம். அது அதியுச்ச அதிகாரப்பகிர்வாகவும், சமஷ்டி அடைப்படையில் மீளப்பறிக்கப்படமுடியாததுமாக இருக்க வேண்டுமென்று கடந்த கால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு கோருகிறோம். ஒற்றையாட்சி என்ற கோசம் எழுப்பும் சிங்களத் தலைவர்களுக்கு இந்த நாடு இருண்ட யுகத்தை நோக்கி பயணிப்பது தெரியவில்லை. 13 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டு 35 ஆண்டுகளாகிறது. 


இன்று அது உருதெரியாமல் போயுள்ளது. 28 க்கும் மேற்பட்ட நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் சுற்றறிக்கைகள் மூலம், 13 ஆம் திருத்தத்தில் உள்ள சில விடயங்கள் பறிக்கப்பட்டுள்ளன. 13 ஆவது திருத்துக்கு எதிராக இன்று பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். ஜனாதிபதியின் ஆதரவு இல்லாமல் அது சாத்தியப்படாது. தீர்வை வழங்கப்போவதாக சர்வதேசத்துக்கு ஒரு முகத்தை காட்டும் ஜனாதிபதி ரணில், மறுபுறம் பௌத்த பிக்குகளையும் இனவாதிகளையும் தூண்டிவிடுகிறாார். அவரின் இந்த செயல் பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டுவது போன்று உள்ளது. எங்களது மண்ணில் நாங்கள் கௌரவமான அரசியல் தீர்வோடு வாழ்வதற்கு விரும்புகிறோம். சமஷ்டி இன்றி வழங்கப்படும் தீர்வு இந்த நாட்டை மீண்டுமொரு இருண்ட யுகத்துக்கு இட்டுச் செல்வதை எவராலும் தடுக்கமுடியாது என்றார். சமஷ்டி கொள்கைகளை முன்வைத்த பண்டார நாயக்க, அன்று பௌத்த பிக்கு மூலமாக கொலைசெய்யப்பட்டார். அதன் பின்னர் வந்த ஜே. ஆர். ஜயவர்தனவின் கொள்கைகள் நாட்டை பாரிய யுத்தத்துக்குள் இட்டுச்சென்றது. இந்த யுத்தமே இன்று இலங்கையை பாரிய பொருளாதார நெருக்கடி என்ற படுகுழியில் தள்ளியுள்ளது.


2048 ஆம் ஆண்டு இலங்கையை பொருளாதாரத்தில் வலுபெற்ற நாடாக மாற்றுவதே தமது இலக்கு என ஜனாதிபதி தனதுரையில் தெரிவித்தார்.1948 ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் சிங்கப்பூர் மற்றும் ஜப்பானின் தனிநபர் வருமானம் இலங்கையை காட்டிலும், குறைவாக இருந்தது. அந்த காலப்பகுதியில் இலங்கையை வளப்படுத்த முடியாத தலைவர்கள், 100 வருடத்தின் பின்னர் இலங்கையை வளப்படுத்த முடியும் என நினைப்பது முட்டாள்தனமானது என்றார் .

1 comment:

  1. இந்த நாட்டில் இந்த தமிழ் தீவிரவாதிகள் அரசியல் செய்ய எப்போதும் ஒரு பிரச்சினையை உருவாக்கிக்கொண்டே இருப்பார்கள்

    ReplyDelete

Powered by Blogger.